Wednesday, November 17, 2021

 


கதையும் சிந்தனையும்   

மாறியது நெஞ்சம்  

 

கோமதி, கிடைக்கும் நேரத்தை நெருக்கமான தோழிகளிடம் அரட்டை அடிப்பது,  சுவையாகச் சாப்பிடுவது, தூங்குவது என்றுதான் கழிப்பாள். அவள் பெற்றோர்களிடம்கூட அதிகமாகப் பேசமாட்டாள். கோமதியை நினைத்துப்  பெற்றோர்கள் மிகவும் வருந்தினர். கோமதி வெளி உலகம் தெரியாமல் வாழ்ந்து வந்தாள். அவளை எளிதில் யாரும் ஏமாற்றி விடுவார்கள். அதனால், அவளின் மனப்போக்கை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று அவர்கள் கலந்து பேசி  முடிவு செய்தார்கள். 

கோமதியிடம் பெற்றோர்கள் சில உத்திகளைக் கையாள நினைத்தார்கள். அவளிடம் அவ்வப்போது வெளி உலகத்தில் நடக்கும் சில செய்திகளைப் பற்றிப் பேசி வந்தார்கள். சில நேரங்களில் அவள்,  `நான் இவற்றைப் பற்றித் தெரிந்து என்ன செய்யப்போகிறேன்?.  என்னிடம் ஏன் இவற்றைச் சொல்கிறீர்கள்?’ என்று கோபமாகச் சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்குள் சென்றுவிடுவாள். கோமதியின் பெற்றோர்கள் கூறும் கருத்துகளில் அவள் வாழ்க்கைத் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் எச்சரிக்கையாக  வாழ்வதற்கும்  வேண்டிய செய்திகள் இருக்கும்.

ஒருநாள் கோமதியின் தோழிகளில் ஒருத்தி மஞ்சு, அவளிடம் வெளியில் சென்றுவருவதற்கு ஐம்பது வெள்ளி கொண்டுவரும்படிக் கூறினாள்.  கோமதி தன்னிடம் பணம் இல்லை என்று கூறினாள். அதற்கு மஞ்சு, `நீ உன்னுடைய அம்மாவின் பணத்திலிருந்து எடுத்துவா. நானும் அதைத்தான் செய்தேன்.  அவர்கள் இதையெல்லாம் பெரிதுபடுத்தமாட்டார்கள். எடுக்கும்போது பிடிபட்டுவிட்டால் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று கூறினாள். கோமதிக்கு முதலில் தூக்கிவாரிப்போட்டது. அவள் இந்தத் தவற்றைச் செய்ய மறுத்துவிட்டாள்.  இதனைக் கேட்ட மஞ்சு, `அப்படி என்றால் நாங்கள் மட்டும் சென்று சந்தோசமாக ஆட்டம் பாட்டத்தை ரசித்து வருகிறோம் என்றாள்.

கோமதிக்கு மெல்ல மெல்ல ஆசை வந்தது. அவளுடைய அம்மாவைப் பற்றி அவள் யோசிக்கவில்லை. அவள் வீட்டிலுள்ள பணத்தை எடுத்துக்கொண்டு தோழிகளுடன் வெளியே சென்று வந்தாள். பெற்றோர்கள் இதைக் கவனிக்கவில்லை. இது தொடர் பழக்கமாக மாறியது. ஒருமுறை வீட்டில் ஐநூறு வெள்ளியைக் கோமதி எடுக்கும்போது அவளுடைய அப்பா கவனித்துவிட்டார். அவருடைய நெஞ்சு பதறியது. கோமதியின் மனம்  படபடத்தது.  அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்திற்குள் சுதாரித்துக்கொண்ட அவளுடைய அப்பா, கோமதியைத் தன்னருகில் உட்காரவைத்தார்.

அப்பா நடந்தவற்றைப் பொறுமையாக அவளிடம் விசாரித்தார். கோமதி எல்லாவற்றையும் அழுதுகொண்டே சொல்லிமுடித்தாள். அவளுடைய பெற்றோர்கள் நல்வழிகாட்டிகளாக இருந்து கொஞ்சங் கொஞ்சமாக அவளுடைய மனத்தை மாற்றினார்கள்.  கோமதியின் எதிர்காலம் சிறப்பாக அமைந்தபோதுதான் அவள் பெற்றோர்களின் அருமை பெருமையைப் பற்றி உணர்ந்துகொண்டாள்.   

    (சொற்களின் எண்ணிக்கை 221)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

புகை போகமுடியாத இடத்திலும் போதனை புகுந்துவிடும் அதுபோல அடிக்க அடிக்க அம்மியும் நகர்ந்துவிடும். 


No comments:

Post a Comment