Thursday, November 25, 2021

 



கதைகளை ஏன் படிக்கவேண்டும்.
உங்களுடன்...


நம்மில் பலர் கதைகளைக் கேட்டுத்தான் வளர்ந்திருப்போம். கதைகளில் அப்படி என்னதான் இருக்கின்றது என்ற கேள்வியும் நமக்குள் எழும். கதைகள் மனிதர்களைச் செதுக்கும் சிற்றுளிகளாக விளங்குகின்றன என்று சொன்னால் மிகையாகாது.


கதைகளைக் கேட்கக் கேட்க, கதைப்புத்தகங்களைப் படிக்கப்படிக்க நம் சிந்தனை தொடர்ந்து வளர்ச்சி அடைகின்றது. சிந்தனை வளர்ச்சி பெருகும்போது இவ்வுலகில் சிறப்பாக வாழும்முறையைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.


கதைகளைச் செவிவழிக் கதைகள், பாட்டி சொன்ன கதைகள், முன்னோர்களின் வாழ்க்கைக் கதைகள், வரலாற்றுக்கதைகள், புராணக்கதைகள், இதிகாசக்கதைகள், மந்திரவாதி சொல்லும் கதைகள், படக்கதைகள், கோட்டுக்கதைகள், பூனை, எலி, கிளி, காகம் போன்ற உயிரினங்கள் சொல்லும் கதைகள் என்று பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


தனித்தன்மை வாய்ந்த ஒவ்வொரு செய்தியும் ஒரு கதையே ஆகும். தனி மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் சுவையாகச் சொல்லுகின்றபோதும் எழுதுகின்றபோதும்  கதைகளாக மாறுகின்றன.


இத்தகைய உயர்வுத் தன்மைகளைப் பெற்ற கதைகளை நாம் கட்டாயம் வாசித்துப் பொருள்புரிந்து கற்றுக்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் அகன்ற வாசிப்பாகத் தொடங்கும் கதை வாசிப்புப் பழக்கம், நம்மை ஆழ்ந்த வாசிப்புக்குக் கொண்டுசெல்லும் என்பது திண்ணமாகும்.


இவற்றின்மூலம் கதைகளை நாம் பகுத்துப்பார்க்கும் திறனை வளர்த்துக்கொள்ளலாம். நம்முடைய பகுப்பாய்வுச் சிந்தனை வளர்ச்சி அடையும்போது நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பல பிரிச்சினைகளுக்கு எளிதில் தீர்வுகாணும் வழி பிறக்கும்.



Wednesday, November 24, 2021

              என்ன கவலையோ!


இப்படியொரு கவலையா உனக்கு 

அப்படியென்ன கவலை தெரியலையே 

நெஞ்சில் ஓடுதோ  ஆயிரம் 

நினைவில் வந்து முட்டுதோ!


அம்மா உனக்குப் பால்கொடுகலயா 

அப்பா தோளில் சுமக்கலயா

அண்ணன் வந்து விளையாடலையா

அக்கா அதட்டி தூங்கவைக்கலையா


பாட்டி உனைத்தட்டிக் கொடுக்கலையா  

பாசம்காட்டி இன்று கொஞ்சலையா

 தாத்தா நன்குதள்ளிச் செல்லலையா 

தாவிநீயும் எழுந்து அமர்ந்தாயே! 


தூக்கம் போய்விடும் பேராண்டி

தூள்ளித் திரிந்திடு காலையிலே

கனவில் வந்ததை மறந்துவிடு

காற்றில் அதனை மிதக்கவிடு


எல்லாம் மறைந்திடும் உனைவிட்டு

எழுந்து நின்று விளையாடுவாய் 

ஏக்கத்தை நீயும்தொலைத் திடுவாய் 

எனதருமைப் பேராண்டி நீயே!!

                                                           - சிகு







 


                       பேரப்பிள்ளை


பேரப்பிள்ளைக்கு என்ன கவலையோ

பேதை மனம் ஒன்றே அறியும்

பேரப்பிள்ளைக்கு என்ன மகிழ்ச்சியோ

பெற்றமனம் ஒன்றே அறியும்!


பேரப்பிள்ளைக்கு என்ன கவலையோ

பெரியமனம் ஒன்றே அறியும்

பேரப்பிள்ளைக்கு என்ன மகிழ்ச்சியோ

பேரறிவு ஒன்றே அறியும்!!

                                                                                                               - சிகு

 


பார்போற்றும் பிள்ளை


பார்க்கும் கண்கள் என்னென்ன

பற்றும் நெஞ்சம் அவையே

காக்கும் மனம் எதுவோ

கற்பனை நிறைந்தது அதுவோ!


வாழ்க்கை என்ற பெருமழையில் 

வற்றாத ஊற்றும் அதுவே

துள்ளாத மனமும் துள்ளும்

துவண்டு போவாமல் காத்திடுமே!


போற்றாத மனமும் உண்டோ

பொறுமை வளமாவதும்  அதுவே 

பார்போற்றும் பிள்ளைச் செல்வத்தை

பாருக்குத் தந்து நிற்போமே!


                                                                  -சிகு

Saturday, November 20, 2021

 



                             விரிசல்

விரிசல் வேண்டாம் மனத்தினிலே 

வேதனை  வேண்டாம் பணியினிலே

கொண்டத னைத்தையும் மறந்திடுவோம்

கூடிவாழவே என்றும் கற்றிடுவோம்!


கற்றிடும் போதும் வேறுபாடு 

களத்தில் தானே தோன்றிடுமே  

குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை 

சூட்சும உண்மை அறிவோமே!

 

கவலை எல்லாம் மறந்திடுவோம்

கால மெல்லாம் மகிழ்ந்திடுவோம்

விரிசல் வேண்டாம் மனத்தினிலே

விபரீத எண்ணத்தை கூட்டிடுமே!!

                                                                 - சிகு



 கதையும் சிந்தனையும்

எதற்கு விடுமுறை

கமலி கமலி உன்ன எத்தனதடவ சொல்லிட்டேன். காலையில இருந்து இன்னும் சாப்பிடாம டீவியிலே இருக்க. உனக்கு டீவி சோறுபோடுமா. ஏம்மா இது நல்லா இருக்கா. இதுக்குத்தானா லீவு விட்டாங்க என்று கமலியின் அம்மா உரக்கக் கூறினார்.   

வீட்டில் நடக்கும் விசயத்தை ஓர் ஓரத்தில் நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்,  அப்பாவின் அம்மா முத்துப்பேச்சி. அவரைப் பாட்டி பாட்டி என்று பேரப்பிள்ளைகள் மிகவும் அன்புடன் அழைப்பார்கள்.   

கமலி அம்மா சொன்னா கேட்கவேண்டாமா, டீவியையே பார்த்துக்கிட்டிருந்தா கண்ணு கெட்டுப்போகும். உன் கண்ணாடி பவரக் கூட்டிரும். சொன்னா கேளும்மா என்று பாட்டி அன்பு கலந்த குரலில் தட்டிக்கேட்டார். 

இல்ல பாட்டி, இப்பத்தான் லீவு கிடைச்சிருக்கு. பொழுதைச் சந்தோசமாக் கழிக்க டீவிகூடப் பாக்கவிடலன்னா என்ன பாட்டி, நீங்க சொல்லுங்க என்று டீவியைப் பார்த்துக்கொண்டே பாட்டியிடம் கேட்டாள் கமலி. கமலியின் ஆதங்கம் பாட்டிக்குப் புரியாமலில்லை. என்ன செய்வது, பிள்ளைகளின் கவனம் முழுவதும் டீவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலேயே சென்றுவிடும் என்பது  பாட்டிக்குத் தெரியும். ஒருமாதங் கழித்துப் புத்தகத்தைப் படிப்பதற்குத் திறந்து பார்த்தாலே சலிப்புத்தோன்றும் என்பதையும் நன்கு புரிந்து வைத்திருந்த பாட்டி, சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.    

கமலி பாட்டியைப்  பார்த்து, என்ன பாட்டி நான் சொல்றது சரிதானே என்றாள். அதனைக் கேட்ட பாட்டி பொறுமையாகக் கமலியிடம்,  பொழுதுபோக்க எவ்வளவோ இருக்கு. அம்மாவுக்கு ஒத்தாசையா கொஞ்சநேரம் சமையல்ல இருந்தா, வருசம்பூராம் சமைக்கிற அம்மாவுக்குக் கொஞ்சம் சந்தோசந்தான. நீயும் பின்னால, ஓம் பிள்ளைகளுக்குச் சமையலைக் கத்துக்கொடுக்கனுமில்ல. இல்லாட்ட நம்ம பாரம்பரியச் சமையல் கொஞ்சங் கொஞ்சமாக மறைஞ்சிறுமில்ல. அதில இருக்கிற மருத்துவக்குணம் தெரியாம்மப் போயிருமில்ல.  அதனாலதாம்மா நான் சொல்லுரங் கமலி என்று சொல்லிமுடித்தார். பிரியமான பாட்டி சொன்ன வாழ்க்கைக் கதையைக் கேட்ட கமலியின் சிந்தனைக் கதவு மெல்லத்திறக்க ஆரம்பித்தது.                       

(சொற்களின் எண்ணிக்கை 180)

                      உரிமை ஆசிரியர் சி. குருசாமி.

 

Wednesday, November 17, 2021

 


கதையும் சிந்தனையும்   

புத்திசாலி சுண்டெலிகள்

இரண்டு சுண்டெலிகள் நண்பர்களாக இருந்தன. அவை வசித்து வந்த வீட்டுக்காரருக்கு மிகவும் தொந்தரவு கொடுத்து வந்தன. சுண்டெலிகள் வீட்டில் உள்ள துணிமணிகளைச் சில நேரங்களில் கடித்துக் குதறிவிடும். வீட்டுக்காரர் முத்து, அவற்றின்மீது கோபமாக இருந்தார். அவற்றின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு அவர் நினைத்தார். அதனால், முத்து அவற்றைப் பிடித்துக்கொல்வதற்கு முயற்சி செய்தார்.

ஒருநாள் முத்து, ஒரு பானையில் பாதி அளவு தண்ணீரை ஊற்றினார். அவர், பானையைத் திறந்து வைத்துவிட்டார். முத்து எலிகள்  பானைமீது ஏறி விளையாடும்போது பானைக்குள் விழுந்துவிடும். பின்னர், தண்ணீரிலிருந்து அவற்றால் தப்பிக்க முடியாமல் மூழ்கி இறந்துவிடும் என்று நினைத்தார்.

சுண்டெலிகள் வீட்டுக்காரர் நினைத்ததுபோல் இரவில் பானையைச் சுற்றிச் சுற்றி விளையாடின. அப்பொழுது ஒரு சுண்டெலி பானையில் ஏறி விளையாடுவதற்குச் சென்றது. அது வழுக்கிப் பானைக்குள் விழுந்துவிட்டது. மற்றொரு சுண்டெலி சிந்திக்கத் தொடங்கியது. அது வீட்டுக்காரர் பானையில் தண்ணீரை ஊற்றி வைத்தது அவற்றைப் பிடிப்பதற்குச் செய்த சதி என்று முடிவுசெய்தது. இதனை முறியடிப்பதற்கு அது சிந்திக்கத் தொடங்கியது.  அந்நேரத்தில் சுண்டெலி உயரத்தில் இருந்த ஒரு பெரிய பூனையைத் தற்செயலாகப் பார்த்தது.  அது ஒரு தந்திரம் செய்தது. சுண்டெலி அந்தப் பானையின்மீது மெதுவாக ஏறியது. இதனை உயரத்தில் இருந்த அந்தப் பூனை  கவனித்தது.

பானையின்மீது இருந்த சுண்டெலியைக் கவ்விப் பிடிப்பதற்குப் பூனை பானையின் மீது குதித்தது. பானை கீழே சாய்ந்தது. பூனைக்குக் காலில் அடிபட்டது. அது அப்படியே படுத்துவிட்டது. இரண்டு சுண்டெலிகளும் தப்பித்து ஓடிவிட்டன. காலையில் முத்து அறை முழுவதும் கொட்டிக்கிடந்த தண்ணீரைத் துடைத்து எடுத்தார். அவருடைய முகம் மிகவும் வாடி இருந்தது.  

(சொற்களின் எண்ணிக்கை 161)

எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

 நீதிக்கருத்து

புத்திசாலிகள் எந்தச் சூழ்நிலையிலும் பிழைத்துக்கொள்வார்கள்

 


கதையும் சிந்தனையும் 

இனிப்பே வாழ்க்கை

அன்புக்கனி இனிப்புப் பலகாரங்களை விரும்பிச் சாப்பிடுவார். அது இன்று நேற்று பழகிய பழக்கம் அல்ல. அன்புக்கனி, தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது சர்க்கரையைக் கால்சட்டைப் பையில் வைத்துச் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. பொறித்த கடலை, தேங்காய்ச் சில் ஆகியவற்றுடன் சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிடும் பழக்கத்தை அன்புக்கனியின் பாட்டி அவருக்குக் கற்றுக்கொடுத்தார். அன்புக்கனியின் அம்மா வடிவும் அவருக்குப் பிடித்த இனிப்புப் பணியாரத்தை அடிக்கடிச் சுட்டுக்கொடுக்கத் தொடங்கினார். இனிப்புப் பலகாரங்களை நன்கு ருசிபார்த்து வந்த அன்புக்கனி நாளடைவில் இனிப்புப் பிரியராக மாறிவிட்டார்.  

அன்புக்கனி துணி வியாபாரம் செய்வதை ஒரு முதலாளியிடம் கற்றுக்கொண்டார். அதனால், அவர் சொந்தமாகத் துணிக்கடை ஒன்றைத் தொடங்கினார். அவரும் வேலையாளைப் போல் ஓடியாடி கடையில் வேலை செய்து வந்தார். அன்புக்கனி வாடிக்கையாளர்களின் மனம் கோணாமல் நடந்துகொண்டார். அதனால்,  அவருடைய கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒருசில வருடங்களில் அன்புக்கனி பெரிய முதலாளியாக மாறினார்.

அன்புக்கனிக்கு உடல் உழைப்பு கொஞ்சங் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. அவருக்கு அடிக்கடிச் சோர்வு ஏற்பட்டது. அவர் அதனைப் போக்குவதற்கு இனிப்பு அல்வாவை  வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார். அல்வா அவருடைய சோர்வை நீக்கிப் புத்துணர்ச்சி அளித்து வந்தது. இது தொடர் பழக்கமாக மாறியது. அன்புக்கனி சுவை மிகுந்த அல்வாவை அதிகமாகச் சாப்பிட்டு வருவதால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை. அதனை அனுபவத்தின் மூலம் நன்கு அறிந்துகொண்ட அவருடைய அவருடைய வடிவு அவருக்கு ஆலோசனை கூறினார்.

ஒருநாள் வடிவு அன்புக்கனியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவரும் அன்புக்கனியைச் சோதனை செய்தார். அவர் அன்புக்கனியிடம் உடல் தேவைக்கு அதிகமாக இனிப்புப் பலகாரங்களை உண்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறினார். அதோடு அவர் இனிப்புப் பலகாரங்களுக்குப் பதில்  இனிப்புக் குறைந்த பழங்களைச் சாப்பிட்டுவரும்படி ஆலோசனை கூறினார். அதோடு சில மாத்திரைகளையும் அன்புக்கனி தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.   அன்புக்கனியும் மருத்துவர் கூறியவற்றைப் பின்பற்றி வந்தார். அவர் சில மாதங்களில் புதிய தெம்புடன் விளங்கினார். அன்புக்கனி மீண்டும் ஒரு தொழிலாளியைப் போல் அவருடைய கடையில் ஓடியாடி வேலை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.        

 (சொற்களின் எண்ணிக்கை 205)

எழுதியவர்: ஆசிரியர்  சி. குருசாமி.

 

 

நீதிக்கருத்து

அளவுக்கு மீறினால் அமிர்தம்கூட விசமாக மாறிவிடும்.  

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பயிற்சி வினாக்கள் 

முடிவை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்குதல்

அன்புக்கனி மீண்டும் ஒரு தொழிலாளியைப் போல் அவருடைய கடையில் ஓடியாடி வேலை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


கதையும் சிந்தனையும்   

கொழுக்கட்டை

மாதவன் நல்ல உழைப்பாளி. அவர் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவு சேமித்து வந்தார். சில வருடங்களில் ஐந்தாயிரம் வெள்ளியைச் சேமித்தார். அதனைக் கொண்டு ஒரு பலகாரக்கடையைத் திறந்தார். அவருடைய பலகாரக்கடையில் கொழுக்கட்டை செய்பவர் ஒருவர் இருந்தார். அவர் செய்யும் கொழுக்கட்டை மிகவும் ருசியாக இருந்தது. அதனால் அதனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

மாதவன் புதிதாக மற்றொரு பலகாரக்கடையைத் தொடங்கினார். இதன்மூலமும் அதிகமான வருமானம் கிடைத்தது. மாதவன் பக்கத்து ஊர்களிலும் கடைகளைத் தொடங்கினார். அவருக்கு வியாபாரம் சூடுபிடித்தது. அழிந்துவரும் பண்பாட்டுப் பலகாரம் மக்கள் மத்தியில் மீண்டும் தனி இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது. மாதவனுக்கு அதிக இலாபம் கிடைத்தது. ஒருமுறை மாதவன் அவருடைய ஊரில் கொழுக்கட்டைத் திருவிழா ஒன்றை நடத்தினார். அத்திருவிழாவில் கொழுக்கட்டைக்குள் ஒரு தங்கக் காசை வைத்து மக்களுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

அன்று நடைபெற்ற கொழுக்கட்டைத் திருவிழாவின் மூலம் மாதவனின் வியாபாரம் மேலும் பெருகத்தொடங்கியது. காலப்போக்கில் அவர் ஒரு பணக்காரர் ஆனார். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யத்தொடங்கினார். அவருடைய ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டினார். அதில் மாணவர்கள் படிப்பதற்குக் கட்டணம் வாங்கவில்லை. பத்து ஆண்டுகளில் அந்த ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அந்த ஊர்மக்களுக்கு வருமானமும் கூடியது. மாதவனின் பேரும் புகழும் பரவியது. 

 (சொற்களின் எண்ணிக்கை 130)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

பிறர் வாழ்வில் அக்கறை செலுத்தும்போது மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

பயிற்சி வினாக்கள் 

தொடக்கவரிகளைக் கொண்டு கதை ஒன்று உருவாக்குக.

மாதவன் நல்ல உழைப்பாளி. அவர் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவு சேமித்து வந்தார். ..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இக்கதையில் இருந்து அறிந்துகொண்ட வாழ்க்கைத் திறன்கள் இரண்டு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


கதையும் சிந்தனையும்   

அடைக்கலம்

ஒரு காட்டில் பனை மரங்கள் பல இருந்தன. அவற்றில் ஒரு மரத்தில் தூக்கணாங்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அவற்றுள் ஒரு குருவி  பாட்டிக் குருவி. அது மூலிகை மருத்துவத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தது. அதனால், மற்றக்  குருவிகளுக்குத் தனக்குத் தெரிந்த மருந்துச் செடிகள், கொடிகள், இலைகள் போன்றவற்றைக் கொண்டு, மருத்துவ உதவி செய்து வந்தது. மற்றக் குருவிகள் பாட்டிக் குருவியை மருத்துவத்தாய் என்று அன்புடன் அழைத்து வந்தன.  அதன்மீது மரியாதையும் செலுத்தி வந்தன.

ஒருநாள் மயில் ஒன்று குருவிகள் வசிக்கும் மரத்திற்கு வந்தது. அதனை வேடன் ஒருவன் தாக்கியதால் அது காயத்துடன் இருந்தது. காயத்திலிருந்து இரத்தம் வந்துகொண்டிருந்தது. அந்த மயில், பாட்டிக் குருவிக்கு அருகில் பறந்துவந்து நின்றது. அதனைக் கண்டபோது பாட்டிக் குருவி அதன்மீது இரக்கப்பட்டது. அது  உடனே தன் கூட்டுக்குள் இருந்த மூலிகைச் செடியை எடுத்து மயிலின் உடலில் தடவியது. என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்தில் மயிலின் காயத்திலிருந்து வடிந்த  இரத்தம் நின்றது. மயில் சில நாட்கள் பாட்டிக் குருவியுடன் தங்கியிருந்தது. தன்னிடம் அடைக்கலம் புகுந்த மயிலுக்குப் பாட்டிக் குருவி உணவுகொடுத்து உபசரித்து வந்தது. சில நாள்களில் மயிலின் காயம் படிப்படியாக ஆறியது.

ஒருநாள் பெரிய காற்று வீசியது. அவை தங்கியிருந்த பனைமரம் சாய்ந்தது. தூக்கணாங்குருவிகளுக்கு எங்குச் செல்வது என்று தெரியவில்லை. மயில் தன்னுடன் வருமாறு குருவிகளை அன்புடன் அழைத்தது. குருவிகள் மயிலுடன் செல்வதற்குச் சம்மதித்தன. அவை நீண்டதூரம் பறந்து சென்றன. மயில் அவற்றைத் தன்னுடைய உறவினர்கள் தங்கியிருக்கும் ஆலமரத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு நல்ல வசதியுடன் மயில்களும் தூக்கணாங்குருவிகளும் ஒற்றுமையாக வாழத்தொடங்கின.

 (சொற்களின் எண்ணிக்கை 164)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களை ஆதரிப்பது நம்முடைய பண்புகளில் ஒன்று.   

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பயிற்சி வினாக்கள் 

அடியில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களின் பொருளை விளக்குக.

மற்றக் குருவிகள் பாட்டிக் குருவியை மருத்துவத்தாய் என்று அன்புடன் அழைத்து வந்தன.  அதன்மீது மரியாதையும் செலுத்தி வந்தன.

 

 

 

இக்கதையில் இருந்து அறிந்துகொண்ட வாழ்க்கைத் திறன்கள் இரண்டு

 

 

 

 

 

 

 

 


 


கதையும் சிந்தனையும் – 26  

கண்ணு

செல்லப்பனுக்குச் செல்லப் பிராணிகள் என்றால் கொள்ளை ஆசை. இது இன்று நேற்று ஏற்பட்ட ஆசை இல்லை. அவன் பிள்ளைப் பருவத்தில் இருந்தே நிழல்போல் தொடர்ந்து வளர்ந்து வந்த ஆசை. செல்லப்பன் அவனுடைய ஆசையைப் பெற்றோர்களிடம் கூறினான். செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு ஏற்றக் குடும்பச் சூழ்நிலை இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.  

வருடங்கள் சில சென்றன. செல்லப்பன் மருத்துவர் பணியில் சேர்ந்தான். ஒருசில வருடங்களில் நல்ல இடவசதிகொண்ட ஒரு வீட்டை வாங்கினான். பின்னர், அவனுடைய கனவுகளை நிறைவேற்றத் தொடங்கினான். முதலில் அழகான நாய்குட்டி ஒன்றை விலைக்கு வாங்கினான். அதற்குக் கண்ணு என்று பெயரிட்டான். கண்ணும் செல்லப்பனும் நெருங்கிய நண்பர்களைப்போல் பழகினர். செல்லப்பன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கண்ணு தன்னுடைய குட்டை வாலை ஆட்டிக்கொண்டு துள்ளித் துள்ளிக் குதிக்கும். கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கூப்பிட்டுக் கொண்டு செல்லப்பன் நடைப்பயிற்சிக்குச் சென்றுவிடுவான். இது வழக்கமாக இருந்தது. ஒருநாள் செல்லப்பன் வேகமாக நடந்துசெல்லும்போது மயங்கிக் கீழே விழுந்துவிட்டான். அதனைக் கண்ட கண்ணு அக்கம் பக்கம் திரும்பிக் குரைக்கத் தொடங்கியது.

சற்றுத் தூரத்தில் செல்லப்பிராணியைப் பிடித்துக்கொண்டு ஒருவர் நடந்து வந்தார். அவர் விலங்குகளின் குரலைப் புரிந்துகொள்பவர். அதற்கென்று சிறப்புப்  பயிற்சி பெற்றவர். எனவே, அவர் கண்ணுவின் அழுகுரலைக் கேட்டு விரைவாக அதன் அருகில் ஓடி வந்தார். அவர், அங்கு மயங்கிக்கிடந்த செல்லப்பனை உடனே மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றார். மருத்துவர்கள் செல்லப்பனைக் காப்பாற்றினார்கள். இரண்டு நாள்களுக்குப் பிறகு செல்லப்பன் வீடு திரும்பும்போது மருத்துவமனையில் தம்மைக் காப்பாற்றியவரின் முகவரியை வாங்கிக்கொண்டான். அவருடைய வீட்டிற்கு அவன் நேரில் சென்று தம்முடைய நன்றியைத் தெரிவித்தான். வீட்டிற்குச் சென்றவுடன் செல்லப்பன் கண்ணுவின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்தான்.

 (சொற்களின் எண்ணிக்கை 172)

 எழுதியவர் சி. குருசாமி ஆசிரியர்

நீதிக்கருத்து

உயிர்காப்பவன்தான் உயர்ந்த பண்புடைய தோழன். 


 

கதையும் சிந்தனையும்   

ராசி

 

``அப்பா அப்பா இதைப் பாருங்க. எப்படி ஆயிடிச்சுன்னு’’ என்று சொல்லியபடி  மீனா அவளுடைய அப்பாவைப் பார்த்தாள். என்னமோ ஏதோ என்று பதறிய அப்பா, மீனாவைப் பார்த்து ``என்னடா இதை உடைச்சுட்ட, இதுதான் ராசியானதுன்னு அடிக்கடி சொல்வ. ஏன் இப்படிச் செய்த, தரையில் வைத்து அழுத்தியதுபோல இருக்கு நாளைக் காலையில் உனக்குத் தேர்வு இருக்கு. அப்ப என்ன செய்வ?’’ என்று கோபத்துடன்  கேட்டார்.  

 

``அப்பா நான் சொல்ரத கொஞ்சம் பொறுமையா கேளுங்க. இதை நான் உடைக்கல அப்பா, நம்ம’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது  `கொர் கொர் என்று ஒரு சத்தம் மீனாவின் நாற்காலிக்கடியில் இருந்து வந்தது. அந்த ஒலியைப் கேட்ட அப்பா,``நாற்காலிக்கடியில் ஏதாவது வந்து படுத்திருக்கா’’ என்று மீனாவிடம் கேட்டார். ``அதெல்லாம் இல்லப்பா, நம்ம குட்டித்தம்பிதான் பயத்தில நாற்காலிக்கடியில ஒழிஞ்சான். கொஞ்சநேரத்தில தூங்கிட்டான் போல’’ என்று சொல்லி முடித்தாள் மீனா.

 

இவை எல்லாம் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்த  மீனாவின் அம்மா ருக்குவின் காதுக்குக் கேட்டது. அவர் வேகமாகச் சமையல் அறையிலிருந்து வெளியே வந்து, ``பரவாயில்லை மீனா உனக்கு ராசியான மற்றொன்று தருகிறேன், பயப்படாதே, கொஞ்சம் பொறு. நான் கொடுக்கிறத இப்பப் பயன்படுத்திப் பாரு’’ என்று சொல்லிக்கொண்டே புத்தக அறைக்குள் சென்றார்.  அவர் வெளியில் வந்ததும் இது மிகவும் ராசியானது. என்னுடைய உயர்வுக்கெல்லாம் காரணமாக இருந்தது’’ என்று சொல்லி முடித்துவிட்டு  சமைப்பதற்குச் சமையலறைக்குள் மீண்டும் சென்றார்.  

 

இப்பகுதியில் இருந்து நீ தெரிந்துகொண்ட செய்திகள் யாவை?

 

 

 

 

 

 

 

 










தேர்வு முடிந்தவுடன் மீனா மலர்ந்த முகத்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்தாள். அவளைக் கண்டதும் நெஞ்சமெல்லாம் பூரித்துப் போனாள் ருக்கு. மகளின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது அவளுக்குத்தான் தெரியும். மீனாவைப்  பக்கத்தில் அமரச் செய்தார் ருக்கு. அவர் மீனாவைப் பார்த்து, ``நான் உனக்குக் கொடுத்தது நேற்றுக் காலையில்தான் கடையிலிருந்து வாங்கி வந்த பேனா’’ என்று கூறி முடித்தார். மீனாவின் மனத்திலும் அருகிலிருந்த மீனாவின் அப்பாவின் மனத்திலும் பல புதிய மாற்றங்கள் தோன்றின. அவர்கள் அப்போதுதான் மனமே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதைப் புரிந்துகொண்டனர். 

 

 (சொற்களின் எண்ணிக்கை 203)

எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

நீதிக்கருத்து: நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களை ஆதரிப்பது நம்முடைய பண்புகளில் ஒன்று.