Thursday, October 15, 2020

 


பொய்க்குழி

 

பொய்க்குழி என்ற கதையைப் படித்த பின்னர் கற்றுக்கொண்ட வாழ்க்கைத் திறன்களைப் பதிவு செய்யவும். 


இக்கதையின் மூலம் அறிந்துகொண்ட நீதிக்கருத்துகளைப் பதிவு செய்யவும். 


கந்தசாமி என்பவர் கடுமையான உழைப்பாளி. அவர் கட்டடம் கட்டும் தொழிலாளியாகப் பணி புரிந்து வந்தார்.  கலை நுட்பம் நிறைந்த கட்டடங்களைக் கட்டுவதில் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தார். அதனால் அழகு நிறைந்த கட்டடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றைக் கட்டியவர்களின் திறனைப் பாராட்டுவார்.

 

கட்டடங்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களையும் பார்த்து இரசிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.   

 

கந்தசாமி தொடக்கத்தில் சிறு சிறு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்குக் கட்டடம் கட்டிக்கொடுக்கும் ஒப்பந்தம் செய்து வந்தார். அவர் கலை நுட்பத்துடன் கட்டடங்களைக் கட்டிக்கொடுத்தார். அதனால், அவருக்குக் கட்டடம் கட்டும் பணி தொடர்ந்து இருந்து வந்தது.

 

கந்தசாமி ஒருபோதும் வேலையின் தரத்தைக் குறைக்கவில்லை.  

 

கந்தசாமியின் வாடிக்கையாளர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவருக்குக் கூட்டாளிகளின் எண்ணிக்கை பெருகியது. அவர்களில் ஒரு சிலர் கந்தசாமியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டனர். ஆனால், அவர்களைக் கந்தசாமியால் அடையாளம் காணமுடியவில்லை.

 

கந்தசாமி வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் குணம் உடையவர்.  ஒருமுறை கந்தசாமியின் நெருங்கிய நண்பரான குணா, கந்தசாமியை ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்குத் தடபுடலான வரவேற்புக் கிடைத்தது.

 

குணா அங்கு ஒரு பணக்காரரைக் கந்தசாமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெயர் முத்து. அவர் கந்தசாமிக்கு மிகப்பெரிய அடுக்குமாடிக் கடைத்தொகுதி ஒன்றைக் கட்டிக்கொடுக்கும் வேலையை கொடுப்பதாகச் சொன்னார்.  

 

கந்தசாமியும் முத்துவிடம் சம்மதம் தெரிவித்தார். அதன்பின்னர், வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு பெரிய தொகையை நம்பிக்கை முன் பணமாகத் தரும்படி முத்து முதலாளி, கந்தசாமியிடம் கேட்டார்.  

 

கந்தசாமியும் முத்து கேட்ட தொகையைக் கடன் வாங்கி அவரிடம்   கொடுத்தார். கந்தசாமி பணம் கொடுத்ததற்கு முதலாளியிடம் எழுதி வாங்கவில்லை. ஒரு வருடம் சென்றது, அடுக்குமாடியைக் கட்டும் வேலையையும் கந்தசாமிக்கு முத்து கொடுக்கவில்லை.

 

முதலாளிக்கு வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், அது வெளியில் தெரியவில்லை. கந்தசாமி முத்துவிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டார். அவர் அதனைக் கொடுக்கவில்லை.

 

இரண்டு வருடங்கள் சென்றன. வழக்கம்போல் கந்தசாமியிடம் முத்து, முதலாளி நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கொடுங்க. நீங்க நல்லா இருப்பேக என்று கூறினார்.

 

அதற்கு முத்து, என்ன நீ எப்பப்பாத்தாலும் பணத்தைக் கொடுங்க, பணத்த கொடுங்கன்னு கேக்கிற, நீ என்ன ஏங்கிட்ட பணம் கொடுத்தா வச்சிருக்க, பேசாம போயிரு... இல்லன்னா உன்ன... என்று கோபத்தில் கூறினார்.

 

இதனைக் கேட்டதும் கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார். அவரை கரும்பாறைக் குழிக்குள் தூக்கி எறிவதுபோல் உணர்ந்தார். கொந்தளித்த மனத்துடன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.  

 

சில நாள்களுக்குப் பின்னர், விவகாரம் பஞ்சாயத்துக்குச் சென்றது. நடுவர்கள் இருவரையும் தனித்தனியே விசாரித்தார்கள்.

 

நடுவர்கள் பெரிய ஆலமரத்தின் கீழ் ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், முத்து ஒரு பெரிய தொழிலதிபர், அவர் எப்போதும் மற்றவர்களிடம் பணம் வாங்கமாட்டார் என்று நம்புகிறோம்.  அதனால், எந்தவித ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்த இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்புக் கூறினர். இத்தீர்ப்பைக் கேட்ட கந்தசாமி வாயில்லாப்பூச்சியாக, சபையில் அமர்ந்திருந்தார்.   

 

(சொற்களின் எண்ணிக்கை 316)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

 

நீதிக்கருத்து:

 

வாழும் காலத்தில் இறுதிவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 


தாயுள்ளம்

 

பெற்றோர் இல்லாத அருண், பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தான். வழக்கம்போல் ஒருநாள் அவன் அதிகாலையில் ஆற்றில் குளிக்கச் சென்றான். செல்லும் வழியில் காலில் ஏதோ தட்டுவதுபோல் அருணுக்குத் தெரிந்தது.

 

அருண்  மணலைக் கிளறிப் பார்த்தான். மணலுக்குக் கீழே ஒரு சிலை இருந்தது.

 

அந்தச் சிலை, ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டுவதுபோல் இருந்தது. அருணுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. சுமார் இருபது கிலோ எடை கொண்ட அந்தச் சிலையை அந்தவூர்த் தலைவரிடம் கொண்டுபோய் கொடுத்தான்.

 

ஊர்த் தலைவர் அருணின் நேர்மையைப் பாராட்டினார். அவனுக்குப் பரிசு ஒன்றும் கொடுத்தார். அதன்பின்னர், கருணைத் தாயைப் போல் காட்சியளிக்கும் அந்தச் சிலையை ஊரின் முக்கியத் தெருவில் உள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.  

 

ஊர் மக்கள், தாயின் அன்பை வெளிப்படுத்தும் அந்தச் சிலையை வணங்கத் தொடங்கினர். வருடங்கள் சில சென்றன. அந்த ஊரில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மழை பெய்யவில்லை.

 

ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் போனது. மக்கள் குடி நீருக்குக்கூடத் திண்டாடத் தொடங்கினர். ஊரில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே சென்றது. நோய்த் தொற்று ஏற்படத் தொடங்கியது.  அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியே மாதங்கள் சில சென்றன. மக்களின் உள்ளத்தில் வேதனைத்தீ எரியத்தொடங்கியது. அவர்களின் முகம் பனை மரத்தில் தொங்கும் தூக்கணாங்குருவியின் கூட்டைப் போல் காணப்பட்டது.   

 

மக்களில் ஒரு சிலர் தாயின் சிலையை ஊரின் முக்கியத்தெருவில் வைத்து வணங்கி வந்ததால்தான் அந்த ஊரில் நோய்கள் பெருகிவிட்டன என்று சொல்லத் தொடங்கினர். ஊர்த்தலைவரின் காதுக்கு அந்தச் செய்தி விரைவாகச் சென்றது.

 

உரக்கக் கத்திப் பேசும் ஒரு சிலரின் விருப்பப்படி அந்தச் சிலையை ஊருக்கு வெளியில் உள்ள குப்பைக் கிடங்கில் தூக்கிப் போடுவதற்கு முடிவு செய்தனர்.

 

இரண்டு பேர்,  அந்தச் சிலையைத் தூக்கும்போது அது கீழே விழுந்துவிட்டது. அது இரண்டு துண்டுகளாக உடைந்தது. அதனுள் இருந்த உலோகத் தகட்டில் குறிப்பு ஒன்று எழுதப்பட்டிருந்தது.

 

அந்தக் குறிப்பைக் கூட்டத்தில் இருந்த ஒருவர் வாசித்தார்.  அவர், நான் ஒரு விலை மதிப்பற்ற பொருள். இவ்வூரில் வாழும் என்னுடைய பிள்ளைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்போது என்னை உருக்கி விற்று விடுங்கள். அதன்மூலம் கிடைக்கும் பெரும் பணத்தைக் கொண்டு அதைச் சரி செய்துகொள்ளுங்கள்.  இது தாயுள்ளத்தின் அன்புப் பரிசு என்று வாசித்து முடித்தார். இதைக் கேட்ட ஊர்மக்கள் தலைகுனிந்து நின்றார்கள்.   

 

                                   (சொற்களின் எண்ணிக்கை 214)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

நீதிக்கருத்து:

 

சிந்தனை செய்யாமல் அவசரப்பட்டு எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது.


                                                       உடைந்த உள்ளம்

 

கோபால் தம்பதியரின் பிள்ளைகள் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தனர். அந்த முதியவர்கள் மட்டும் சென்னையில் பல வசதிகள் உள்ள வீட்டில் குடியிருந்தனர்.

அவர்கள் தள்ளாத வயதிலும் எதையும் தள்ளாமல் வாழ்ந்து வந்தார்கள். தம்பதியினர் மிகவும் பிரியத்துடன் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்கள். அதுவே அவர்களின் உண்மையான நண்பன், உயிரைக் கொடுக்கும் காவலாளி. அதன் பெயர் வைரம். வைரம் என்றால் வலிமைதானே!.

வைரம் புலியின் தோற்றத்தையும் பசுவின் குணத்தையும் பெற்று இருந்தது. அதனால், கோபால் தம்பதியினர் அதன்மேல் உயிரையே வைத்திருந்தனர். தங்களைக் காக்கும் கடவுளாக அதனைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்தனர்.

  

கொவிட்-19 என்ற உயிர்க்கொல்லி நோய், முதியவர்களுக்குக்கூடக் கருணை காட்டவில்லை. கோபால் தம்பதியினர் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தம்மைத் தனிமைப் படுத்திக்கொண்டனர்.

தம்பதிகளுக்கு உடல் வலியோடு மன வலியும் ஏற்பட்டது. இப்பிறவிக்கு இத்துன்பம் போதும் என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் அந்நோயால் பெரும் துன்பம் அடைந்து வந்தார்கள்.

நாள்கள் பல வேகமாகச் சென்றன. மருந்து மாத்திரைகளைப் பார்த்ததும் வெறுக்கும் அளவிற்கு மனம் நொந்து போனார்கள். வந்த நோயும் முதியவர்களை விட்டுச் செல்வதாக இல்லை.

பாவம், அவர்களால்  இந்தத் தள்ளாத வயதில் என்னதான் செய்ய முடியும். மரணம் நெருங்கிவிட்டதாக நினைத்தார்கள். அவர்களின் கவலை வைரவனையே சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

தங்களுக்குப் பின் வைரம் பத்திரமாக இருப்பதற்கு அதனை ஒரு காப்பகத்தில் சேர்த்துவிடுவதற்கு முடிவு செய்தனர் அந்த முதியவர்கள். பத்தாண்டுகளுக்குரிய பணத்தையும் முன்கூட்டியே காப்பகத்திற்குச் செலுத்திவிட்டனர்.

காப்பக உரிமையாளர்  கண்ணும் கருத்துமாக வைரத்தைப்  பாதுகாப்பேன் என்று முதியவர்களிடம் உறுதி கூறினார்.

முதியவர்களுக்கு வந்தது பெருமூச்சு! காப்பக உரிமையாளர்  வைரத்தைக் காரில் ஏற்றியபோது அதன் கண்களில் கண்ணீர் மெல்லக் கசியத் தொடங்கியது.

வேதனைத் திரைக்கு எந்தனை நாள்களுக்கு வைரத்தால் அணை போடமுடியும். அதனைக் கண்ட முதியவர்களின் கண்கள் சாரை சாரையாகக் கண்ணீரை வடித்தன.  வேறு என்ன செய்வது. அவர்களால் ஒன்றும் செய்ய முடிவில்லை. நீண்ட நேரம் அமைதி மட்டும் உள்ளத்தில் நிலவியது.

வாரங்கள் சில சென்றன. முதியவர்களிடமிருந்து கொவிட்-19 விடைபெற்றுச் சென்றது. அப்பாட, வைரத்திற்காக அவர்கள் வணங்கும் இறைவன் உயிர்ப்பிச்சை அளித்துவிட்டான் என்று ஒருவர் மற்றவரிடம் சொல்லி ஆறுதல் அடைந்தனர். 

முதியவர்கள், வைரத்தைத் திரும்ப ஒப்படைக்கும்படிக் காப்பக உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தனர்.    

அதற்கு அவர், பெரியவுகத் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பிரிவுக்குப் பின்னர், மௌனம் சாதித்து வந்த  வைரம், மருந்து உட்கொள்ள மறுத்துவிட்டது. ஒரு நாள் திடீரென்று அதற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அதன் உயிர் பிரிந்ததுஎன்று பதில் சொன்னார். நாள்கள் சில சென்றன. பெரிய அளவில் உருவாக்கப்பட்ட வைரத்தின் புகைப்படம் ஒன்று முதியவர்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.  

 

(சொற்களின் எண்ணிக்கை 278)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

 

நீதிக்கருத்து

 

நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களை ஆயுள்முழுவதும் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

 நன்றி சொல்ல...

 

 

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு பெரிய மாமரம் இருந்தது. அந்த மரத்தில் இரண்டு   புறாக்கள் வசித்து வந்தன. நீண்ட நாள்களுக்குப் பிறகு அந்த ஊரில் மழை பெய்தது.  மரத்தில் தங்கியிருந்த அந்தப் புறாக்கள் மழையில் நனைந்தன. அப்போதுதான் அவை பாதுகாப்பாகத் தங்கும் இடத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கின.

 

புறாக்கள் சிறு சிறு குச்சிகள், வைக்கோல் துண்டுகள் போன்றவற்றைச் சேகரித்து வந்தன. அவற்றைக் கொண்டு அந்த மாமரத்தில் அப்புறாக்கள் கூடு ஒன்று கட்டிமுடித்தன. அது அவற்றிற்கு மிகவும் உதவியாக இருந்தது.    

 

மாதங்கள் சில உருண்டோடிச் சென்றன. புறாக்களில் ஒன்று இரண்டு முட்டைகள் இட்டது. அதைப் பக்கத்து மரத்தில் வசித்து வந்த குயில் ஒன்று பார்த்துவிட்டது. ஒருநாள் குயில் புறாக்கள் இல்லாத நேரத்தில் முட்டைகளைத் தூக்கிச் சென்றது.

 

சிறிது நேரத்தில் இரண்டு முட்டைகளுக்குப் பதில் தம்மிடம் இருந்த இரண்டு முட்டைகளைக் கொண்டு வந்து புறாக்களின் கூட்டில் அது வைத்தது. புறாக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது. புறாக்கள் முட்டைகளை அடைகாத்து வந்தன.

 

நாள்கள் சில சென்றன. ஒரு முட்டையிலிருந்து மட்டும் குயில் குஞ்சு ஒன்று வெளியில் வந்தது. அது புறாக்களின் குஞ்சு இல்லை என்று அவற்றிற்குத் தெரிந்தது. இருந்தாலும் குயில் குஞ்சைப் பத்திரமாகப் பாதுகாத்து வளர்த்து வந்தன.

 

புறாக்கள் அந்தக் குயிலின் குஞ்சுக்கு வாழும் முறையை மெல்ல மெல்லக் கற்றுக்கொடுத்தன. குயிலின் குஞ்சு மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி வந்தது.

 

ஆண்டுகள் சில சென்றன. புறாக்களுக்கு வயதாகிவிட்டது. அவற்றால் பறக்க முடியவில்லை. இதனை நன்கு உணர்ந்த இளம் குயில், நாள்தோறும் புறாக்களுக்குத்  தேவையான உணவைக் கொண்டுவந்து கொடுத்தது.

 

திடீரென்று ஒரு நாள் வயது முதிர்ந்த குயில் ஒன்று அந்த மரத்திற்குப் பறந்து வந்தது. அது இளம் குயிலிடம் அதன் வரலாற்றைப் பற்றி எடுத்துக் கூறியது. அதோடு தம் இனத்துடன் வந்து சேருமாறு அது அறிவுரையும் கூறியது. இதனைக் கேட்டவுடன் இளம் குயில் அதிர்ச்சி அடைந்தது. அது வயது முதிர்ந்த குயிலுடன் செல்ல மறுத்தது.  

 

வயது முதிர்ந்த குயிலைப் பார்த்து இளம் குயில், என் வாழ்நாள் முழுவதும் வயதாகிவிட்ட என்னுடைய பெற்றோரைப் பாதுகாப்பது என் கடமை, அவர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள். நீ தயவுசெய்து நீ பறந்து போகலாம் என்று கூறியது. இதனைக் கேட்டதும் பெரிய குயில் அதிர்ச்சியடைந்தது. அருகில் இருந்த புறாக்களின் கண்களில் நீர் மெல்லக் கசிந்தது.    

 

(சொற்களின் எண்ணிக்கை 240)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

கதையின் நீதி

 

செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது. மற்றவர்கள் நமக்குச் செய்த உதவியை என்றும் மறக்கக் கூடாது.

 

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

 

சிதறிய எண்ணம்

 

 

கவிதாவின் பெற்றோர் அடுக்குமாடி வீட்டில் குடியிருந்து வந்தனர். அவர்களின் வீட்டில் ஐந்து அறைகள் இருந்தன. கவிதாவுக்குச் செல்லப் பிராணிகள் என்றால் உயிர்.  அதனால், பெற்றோரிடம் சொல்லி ஒரு நாய்க்குட்டி வாங்கி வளர்க்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

 

கவிதாவின் பெற்றோர், நாய்க்குட்டி வளர்ப்பதில் உள்ள சிரமத்தைக் கவிதாவிடம் கூறினர். அவள் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. தொடர்ந்து அடம் பிடித்து வந்தாள். முகத்தையும் சில நாள்கள் தூக்கி வைத்துக்கொண்டாள். அதனால், பெற்றோரும் மகளின் பிடிவாதத்தை நினைத்து மிகவும் வருந்தினர்.

 

இறுதியில் கவிதாவின் பெற்றோர், கவிதாவுக்கு விலை உயர்ந்த நாய்க்குட்டி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள். அதனால், அதனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது கவிதாவின் முக்கிய வேலையாக மாறிவிட்டது.

 

பள்ளியில் ஆசிரியர் பாடங்களை நடத்தும்போதெல்லாம் கவிதா தன்னுடைய நாய்க்குட்டியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பாள். பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியதும் நாய்க்குட்டியுடன் கொஞ்சிக் கொஞ்சி விளையாடி மகிழ்வாள்.

 

நாள்கள் செல்லச் செல்லக் கவிதாவுக்குப் படிப்பில் கவனம் குறைந்தது. ஆசிரியர் நடத்தும் பாடங்களையும் அக்கறையுடன் அவள் கவனிப்பதில்லை. கவிதாவுக்குக் கவனச் சிதைவு ஏற்படத்தொடங்கியது; மனம் அலை பாய்ந்தது.

 

இதனால், கவிதாவின் மதிப்பெண்கள் குறையத்தொடங்கின. கவிதா அதனைப் பெரிதுபடுத்தவில்லை. பள்ளிப் படிப்பில் முதல் நிலையில் இருந்த கவிதா பத்தாவது நிலைக்குச் சென்றாள். 

 

பள்ளி ஆசிரியர் கவிதாவின் பெற்றோரை அழைத்துப் பேசினார். அப்போது கவிதாவும் இருந்தாள். ஆசிரியர், கவிதாவின் நிலையை அவர்களிடம் விளக்கிச் சொன்னார். பெற்றோரும் கவிதா வீட்டில் நடந்துகொள்ளும் முறையை ஆசிரியரிடம் திறந்த மனத்துடன் சொன்னார்கள்.

 

ஆசிரியருக்குக் கவிதாவின் பெற்றோரின் அணுகுமுறை மிகவும் பிடித்துவிட்டது. அதனால், கவிதாவின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு ஆசிரியர் நான்கு வழித் திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுத்தார்.

 

கவிதாவுக்கு இருக்கும் நேரத்தைக் குடும்பம், கல்வி, பொழுதுபோக்கு, ஓய்வு ஆகியவற்றுக்கு முறையாகப் பயன்படுத்தும்படி அவர்களிடம் ஆசிரியர் சொன்னார். கவிதாவும் முழு ஒத்துழைப்புத் தருவதாக அவர்களிடம் உறுதி கூறினாள்.

 

கவிதா, பள்ளியில் நடைபெற்ற மூன்றாவது தேர்வில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றாள். பெற்றோரும் ஆசிரியரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கவிதாவைப் பாராட்டிப் பரிசு  அளித்தனர். 

 

(சொற்களின் எண்ணிக்கை 209)

                                               எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

நீதிக்கருத்து

 

வழிகாட்டிகளின் கருத்தைப் பின்பற்றினால் வாழ்க்கையில் சிறப்படையலாம்.

 

 


 கிளியும் காட்டுப் பூனையும்

 

ஓர் ஊரில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தில் கிளிகள் ஏராளம் வசித்து வந்தன. ஒரு கிளி மட்டும் உருவத்தில் பெரியதாக இருந்தது. அதன் அலகுகூட மிகவும் நீளமாக இருந்தது.

பெரிய கிளி ஒரு நாள் இரவுப் பொழுதில் வயிற்று வலியால் உரக்கக் கத்தியது. அதன் குரலைக் கேட்டதும் மற்றக் கிளிகள் பயப்படத்தொடங்கின. அவற்றைப் பார்த்துப் பெரிய கிளி தமக்கு எல்லாக் கிளிகளும் பயப்படத்தொடங்கிவிட்டன. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அப்போதுதான் தான் நினைத்ததைச் சாதிக்கலாம்  என்று நினைத்தது.

அதனால் பெரிய கிளி,  அதனைக் கிளிகளின் ராணி என்று அறிவித்தது. மற்றக் கிளிகளும் பயத்தில் பெரிய கிளி சொல்லியதை ஏற்றுக்கொண்டன.   

உடனே பெரிய கிளி, மற்றக் கிளிகளைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் நான் கேட்கும் உணவைத் தேடிக்கண்டுபிடித்து எனக்குத் தரவேண்டும்என்று உத்தரவிட்டது.

பெரிய கிளி சொல்லியதை எல்லாம் ஆலமரத்தில் வசித்து வந்த மற்றக் கிளிகள் கேட்டுவந்தன. அதன் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து நடந்துவந்தன.   

உழைப்பில்லாமல் உண்டு கொழுத்துவந்த பெரிய கிளி, தலைக்கனத்துடன் திரிய ஆரம்பித்தது.

ஒருநாள் இரவு காட்டுப்பூனை ஒன்று இரைதேடி ஆலமரத்திற்கு வந்தது. அப்போது பெரிய கிளி வழக்கம்போல் மற்றக் கிளிகளைப் பயமுறுத்துவதற்காகக் குரலை உயர்த்திக் கத்தியது.

அதனைக் கேட்ட எல்லாக் கிளிகளும் பயத்தில் நடுங்கின, பின்னர் அவை கண்ணைமூடிச் சத்தம் இல்லாமல் இருந்ததால் தூங்க ஆரம்பித்தன.   

இவற்றை எல்லாம் ஆலமரத்திற்கு இரை தேடிவந்த காட்டுப்பூனை ஒன்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அது பெரிய கிளி இருக்கும் இடத்திற்கு அமைதியாகச் சென்றது. பெரிய கிளியின் கழுத்தைக் கௌவிப்பிடித்துக் கொன்று தின்றது.  

மறுநாள் காலை மரத்தில் இருந்த கிளிகள் பெரிய கிளிக்குப் பிடித்த உணவைக்  கொண்டு வந்தன. அதன் இறகுகள் மட்டும் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன.    

 

(சொற்களின் எண்ணிக்கை 183)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

நீதிக்கருத்து:  

மற்றவர்களின் மனத்தைத் துன்புறுத்தும் எண்ணத்தை ஒருபோதும் வளர்த்துக்கொள்ளக் கூடாது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 


 

 கருணை உள்ளம் - 

சிறுகதையைப் படித்துப் புரிந்துகொள்ளவும். போலச்செய்தல் என்ற விதிமுறைக்கு ஏற்ப மற்றொரு சிறுகதையை எழுதுவதற்கு முயற்சி செய்யவும்.  நன்றி

 

முகுந்தனுக்கு எண்பது வயது இருக்கும். அவர் எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். தம்மால் முடிந்த வேலைகளை அவருடைய வீட்டிற்குச் செய்து வந்தார். கோவிட்-19-இன் தாக்கம் இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில்கூட  வீட்டிற்கு வேண்டிய சில பொருள்களைக் கடைகளில் வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 

வீட்டில் உள்ளவர்கள் தடுத்தால்கூட, முகுந்தன் வெளியில் சென்று வீட்டிற்கு வேண்டியவற்றை வாங்கி வருவார்.  அவர் ஒரு நாள் வழக்கம்போல் ஒரு கடையில் காய்கறிகளை வாங்கினார். அவற்றைப் பேருந்து நிற்கும் இடத்திற்குக் கொண்டுசென்றார். அங்கு அவர் பேருந்துக்கு நீண்ட நேரம் காத்திருந்தார்.  

 

முகுந்தன் செல்ல வேண்டிய பேருந்து வந்தது. ஏறுவதற்குக் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால், அவர் ஓரமாகக் காத்துக்கொண்டிருந்தார். எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டனர்.

 

இறுதியாக முகுந்தன் பேருந்தின் படிக்கட்டில் கால் வைக்கும்போது வழுக்கிக் கீழே விழுந்துவிட்டார். முகுந்தனின் நெற்றியில் காயம் ஏற்பட்டு, இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. முகுந்தனால் இரத்தம் வடிவதை உணர முடியவில்லை.

 

முகுந்தன் வேகமாக எழுந்து  பேருந்துக்குள் சென்றுவிட்டார்.  அங்கு  இருந்தவர்களில் ஒரு சிலர் அவரைப் புகைப்படம் எடுத்தனர். பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.   

 

பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர் வேகமாக எழுந்தார். அவர் முகுந்தனின் அருகில் விரைவாகச் சென்றார்.

 

அந்தப் பெண்மணி முகுந்தனிடம் எதையோ பேசிவிட்டு, தன்னிடம் இருந்த டிசுத்தாளை வைத்து இரத்தம் வடிவதை நிறுத்தினார்.

 

இந்தக் காட்சியையும் சிலர் படம்பிடித்தனர். இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மாணவி ஒருத்தி, முகுந்தனைத் தன்னுடைய இருக்கையில் அமரும்படிச் சொன்னார். முகுந்தன் அவர்களைக் கருணை உள்ளத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.    

 

(சொற்களின் எண்ணிக்கை 154)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

நீதிக்கருத்து

 

கருணை உள்ளத்தோடு உதவி செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.