Monday, October 12, 2020

 கதையைப் படித்த பின்னர் உங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யுங்கள். நன்றி


1.          அலுமினியக் கால்

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நெஞ்சை நிமிர்த்தி நடைபாதையில் நடந்து சென்றார். அவர் அருகில் இருந்த விளையாட்டுத் திடலுக்குச் சென்று, உடற்பயிற்சிக்குரிய உடுப்பை அணிந்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு கால் இல்லை என்பதைச் சற்றுத்  தொலைவில் இருந்த இருவர் பார்த்தனர்.

அவர்களில் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, அண்ணே! இவேன் நம்ம வட்டாரத்து ஆளில்லையே. ஒருநாள்கூட இங்குப்  பார்த்ததில்லையே, பெரிய சேட்டைக்காரனா இருப்பானோ. இல்லாட்டி இந்த வயசில ஒரு கால் இல்லாம இருப்பானா. அது, மற்றவர்களுக்குத் தெரியாம இருக்க நிமிர்ந்துவேற நடந்துவர்ரான் என்று கூறினார்.

அதற்கு மற்றவர், ஆமா தம்பி வசதியானவனா இருப்பான் போல, இல்லாட்டி அலுமினியக் கால் மாட்டியிருக்க மாட்டானே என்று பதில்கூறி மெல்லச் சிரித்தார்.  

விளையாட்டுத் திடலில் இருபது பேர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  சிறிது நேரத்தில் அவர்களுடைய நண்பர் குமார் அங்குப் பயிற்சி செய்வதற்கு வந்தார். அவர் வந்தவுடன் அவர் கண்ணில் புதியவர் தட்டுப்பட்டார். அவர் புதியவரின் அருகில் வேகமாகச் சென்றார். அவரைப் பார்த்து, அண்ணே! இப்ப எப்படி இருக்கேக, பாத்து ரொம்ப நாளாச்சு, வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா? இப்ப உடம்பு எப்படி இருக்கு?. இராணுவச் சேவை முடிஞ்சு ஊருக்கு வந்துட்டேங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்கெல்லாம் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கப்போயிக் கால இழந்தவுக. நல்லாருங்க அண்ணே, உங்களப் பார்க்கக் கொடுத்து வச்சிருக்கேன் என்று சொல்லி முடித்தார்.  

இதனை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த இருவரும் வெட்கித் தலைகுனிந்து நின்றனர்.

(சொற்களின் எண்ணிக்கை 149)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

கதையின் நீதி

சிந்தனை செய்யாமல் யாரையும் குறைவாக மதிப்பிடக்கூடாது.


No comments:

Post a Comment