Monday, October 12, 2020

 


வாசிப்புப் பகுதி (பாசம்)

ஓர் ஊரில் பறவைகள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்து வந்தன. ஒரு மரத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட பறவைகள் வாழ்ந்து வந்தன. அவை காட்டில் கிடைக்கும் உணவுப் பொருள்களைத் தின்று உயிர்வாழ்ந்து வந்தன. அந்தப் பறவைகள் பல இனங்களைச் சேர்ந்தவை. ஆனாலும், அவை மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. ஒரு பறவைக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டால் மற்றப் பறவைகள் வேண்டிய உதவியை அதற்குச் செய்யும். ஆபத்து ஏற்படும் காலத்திலும் ஒன்றுக்கொன்று உதவிசெய்து வாழ்ந்து வந்தன.

 

மகிழ்ச்சியாகச் சில வருடங்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில்   வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. பறவைகளுக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், அவற்றிற்கு வெப்ப நோய் ஏற்பட்டது. எனவே, பறவைகள் கொஞ்சங் கொஞ்சமாக அழியத்தொடங்கின. சில பறவைகளால் பறக்க முடியவில்லை. அவை சில நாட்களில் இறந்துவிட்டன. அதனால், ஒருசில பறவைகள் அந்தக் காட்டில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பறந்துவிட்டன.

ஒரே ஒரு மயில்மட்டும் அந்த மரத்திலேயே தங்கிவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் நிலைமை சிறிது சிறிதாகச் சீராகத் தொடங்கியது. ஒருநாள் அந்த மயில் மரத்தின் உச்சியிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்தது. அதன் கண்ணுக்கு ஒரு சிறிய பாறையின் அடியில் சில உருண்டைகள் இருப்பதுபோல் தெரிந்தது. அதனால், மயில் அவை இருக்கும் இடத்திற்குப் பறந்து சென்றது. அவை அனைத்தும் முட்டைகள் என்பதை அது உணர்ந்துகொண்டது. அதனால்,  மயிலுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

மயில் அந்த முட்டைகளைப் பக்குவமாக வெயிலில் வைத்துச் சில நாள்கள் பாதுகாத்து வந்தது. அவை அனைத்தும் குஞ்சுகளாக மாறின. அவற்றைக் கண்ணுங் கருத்துமாகப் பாசத்துடன் மயில் பாதுகாத்து வந்தது. பறவைகள் மீண்டும் அந்த ஊரில் மெல்ல மெல்லப் பெருகியது. தம் இனத்தின் வளர்ச்சியைக் கண்ட மயில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

(சொற்களின் எண்ணிக்கை 187, சி. குருசாமி, ஆசிரியர்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


No comments:

Post a Comment