Saturday, December 25, 2021

 


                கல்வி 

கற்பனையின் ஊற்றும்நீயே

கனவின் விருச்சம்நீயே 

காற்றின் ஓட்டம்நீயே

கருத்தின் பெட்டகமானாயே!


சிந்தனையின் சீர்தூக்கல்நீயே

சிந்திக்கும் ஆசானும்நீயே

புத்தம்புதிய ஓட்டம்நீயே

புவியின் நாட்டமும்நீயே!


அன்பைத்தரும் அகல்விளக்குநீயே

ஆதரிக்கும் பணப்பைநீயே 

தோண்டத்தோண்ட ஊற்றும்நீயே

தோல்விகாணா பாட்டும்நீயே!


மனத்தை மயக்கும் சிறப்புநீயே

மாண்பைத்தரும் மலரும்நீயே!

மானிடம்போற்றும் தெய்வம்நீயே

மனத்தைமாற்றும் மருந்தும்நீயே!! 


கல்வியில்லையேல் ஏதுவுலகம்

காற்றுப்போன உடலாகிடுமே!

கல்வியைத் தேடிச்செல்வோம்

காலமெல்லாம் காத்திடுமே!!

                                                                    - சிகு

Wednesday, December 22, 2021

 


விதையும் விருச்சமும்


விதையில்லாமல் விருச்சம் ஏது

வினையில்லாமல் விளைவு ஏது

வினையே புவியில் விளைந்து

விண்ணில் கலையாய் மலர்ந்தது!

 

கடுகளவை காற்றளவாக்கிடும் உலகில்

காலமெல்லாம் கற்பனையில் நனைந்து

கற்றதை படைத்து காட்டிடுவர்

கற்றறிந்த கலைஞர் இவ்வுலகில்தானே!

 

வற்றிய கண்ணும் வடிவத்தைக் கொடுத்திட

வற்றாத மனமும் வாழ்வியலை அளித்திட  

கற்பனைக் கெட்டா அற்புத வடிவந்தனை

கலையாகப் படைத்து வாழ்ந்தனரே

 

காட்டியவை மறைந்திடா வண்ணம்

காண்பவர் வாழ்வியல் திறனைக்கற்றிட  

முறைமாறா முழுவடி மனைத்தும் 

முத்திரை யாக்கினர் மூதறிஞர்களே!

 

நன்றி செப்புவோம் நாமும் என்றும்

நாம்வாழ வழிசெய்த உழைத்தோர்தமை  

ஊருக்குக் காட்டிய உன்னதத் தலைவர்களை

உளம்நிறைய வாழ்த்தி வணங்குவோமே!!

                                   -சி.கு

 

 


Tuesday, December 21, 2021

 


                  காலம்

காலம் நம்மை மாற்றிடும்

கற்பனை எல்லாம் கொன்றிடும்!

காலம் நம்மை மாற்றிடும்

கல்மனத்தையும் உருக்கிடும்!


காலம் நம்மை மாற்றிடும்

காவியக் கதை சொல்லிடும்!

காலம் நம்மை மாற்றிடும்

கனியும் மனத்தையும் கொன்றிடும்!

 

காலம் நம்மை மாற்றிடும் 

காவியமாய் நம்மோடு நின்றிடும்

காலம் நம்மை மாற்றிடும் 

கற்பனைச் சிறகை விரித்திடும்!!



 

                யானை

காட்டுக்குள் ஒரு யானை

கரியநிற யானை தானே

பாட்டுக்குள்  ஒரு யானை

பாரதி வென்றிட்டார் அதனை


ஓட்டுக்குள் ஒரு யானை 

ஒளியைத் தேடியவர் தொலைத்தார்

பட்டணம்  சென்று வந்தாரே

பட்டனத்தார் என்ற அடிகள்!


வீட்டுக்குள் ஒரு யானை

விலகிச் சென்றால் அழியும்

மனக் கூட்டுக்குள் ஒருயானை

மதம்பிடிக்காமல் காத்திடுவோமே!

                                                                       சி.கு



Saturday, December 18, 2021

 


                               பழுது

பார்ப்போரெல்லாம் பழுது அல்லர்

பழகுவோரெல்லாம் நற்பழமும் அல்லர்

பழகும்போது தெரிவதில்லை தீயோர்

பல்லைக் காட்டிப் பழகிடுவாரே!


பார்த்துப் பழகிடல் வேண்டும்

பழுதுநிறைந்த உளம் உடையோரிடம்  

பாழும் நிலைக்கு செல்லாமல் இருக்கவே

பாரினில் பார்த்துப் பார்த்துப் பழகவேண்டும்!


பார்த்துப் பார்த்துப் பழகினாலும்

பாழ்மனம் கொண்டோர் தெரிவதில்லை

பதுங்கியிருப்போரைக் காண்பது அரிதே

பார்த்துச் சீர்தூக்கிப் பழகிடவேண்டும்.


Thursday, December 16, 2021

 

அன்புள்ள பாபு   

 

வணக்கம். நீ நலமாக இருக்கின்றாயா? உன் நண்பர்கள் நலமா?

உன் கடிதம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எனக்கும் தேர்வு தொடங்கப்போகிறது. அதனால்தான் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியவில்லை; மன்னிக்கவும்.

 

நானும் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி என்னுடைய பெற்றோரிடம் கருத்துக் கேட்டுள்ளேன். அதோடு என் மாமாவிடமும் கருத்துக் கேட்டுள்ளேன். என்னுடைய நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.  என்னுடைய ஆசிரியரிடமும் சில வழிகளைக் கேட்டுள்ளேன். அவர்கள் சில வழிகளை எனக்குச் சொன்னார்கள். அவை நிச்சயமாக எனக்கு உதவிசெய்யும். 

 

இறுதியாக நான் அறிவியல் துறையில் (மருத்துவத்துறை, ஆசிரியர், எழுத்தர், விளையாட்டு வீரம், இராணுவத்துறை, ஆராய்ச்சியாளர், பேராசிரியர்)

 

அதற்கு உரிய புத்தகங்களை அவ்வப்போது படித்துவருகிறேன். புத்தகங்களின் மூலம் புதிய செய்திகளைத் தெரிந்துவருகிறேன். அச்செய்திகளில் சந்தேகம் வந்தால் என்னுடைய பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஒருவேளை என்னுடைய பெற்றோருக்குச் சந்தேகம் இருந்தால் அவர்களுடைய நண்பர்களிடம் கேட்டு எனக்கு வழிகாட்டுவார்கள்.

 

இதனால் எனக்குச் சில யோசனைகள் வந்துள்ளன. அவற்றைப் பின்பற்றி அதற்குரிய பாடங்களையும் கவனமாகப் படித்து வருகிறேன்.

 

இவற்றின் மூலம் என்னுடைய எதிர்காலத்தைச் சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

 

எனக்குப் பதில் எழுதவும்.

 

நன்றி

 

 


                                             படக்கதை  


கதைகள் நமக்கு அறிவைக் கற்பிக்கின்றன. சிறு பிள்ளைகள் முதல் முதியர்கள் வரை கதைகளை விரும்பிப் படிப்பார்கள். எல்லாக் கதைகளும் நமக்குக் குறைந்தது ஒரு கருத்தையாவது சொல்லும். அவை நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்.

 

திருமதி கமலா அடுக்குமாடியில் குடியிருந்து வருகிறார். அவர் ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய கணவரும் ஒரு தொழில்சாலையில் வேலை பார்க்கிறார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அதனை வயது முதிர்ந்த  அம்மா பார்த்துக்கொள்கிறார்.

 

அன்று சனிக்கிழமை விடுமுறை நாள். கமலா வீட்டுக்கு வேண்டிய பொருள்களை வாங்குவதற்கு நினைத்தார். அதனால் தன்னுடைய பிள்ளையும் தூக்கிக்கொண்டு பேரங்காடிக்குச் சென்றார்.

 

திருமதி கமலா அங்கே தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கினார். பின்னர், தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு காசாளரிடம் சென்றார். அன்று பேரங்காடியில் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தார்கள்.

கமலாவின் குழந்தை அழத்தொடங்கியது.

 

அவர் வேண்டிய பொருள்களை  வாங்கிய பின்னர் வீட்டிற்குத் திரும்பினார். பேரங்காடியில் குழந்தையையும் பொருள்களையும் அவரால் தூக்க முடியவில்லை. கடையின் உதவியாளர் இவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் விரைவாக வந்து கமலாவுக்கு உதவி செய்தார்.

 

கமலா தன்னுடை பிள்ளையைத் தூக்கிக்கொண்டு நடந்தார். உதவியாளர் பொருள்களை கடையின் வாசல்வரை கொண்டுவந்தார். அப்பொழுது வாடகை உந்துவண்டி வந்தது. கமலா பொருள்களை உந்துவண்டியில் ஏற்றிக்கொண்டு தன்னுடைய பிள்ளையுடன் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.

 

இக்கதையிலிருந்து மற்றவர்கள் கேட்காமலே நாம் முன் வந்து உதவி செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

 

 


                                 புன்னகை


மனத்தில் இருப்பது புன்னகை

மலரில் இருப்பதும் புன்னகை

மாண்பைத் தருவது புன்னகை

மானிடராக்குவது  நற்பெரும் புன்னகை!


புன்னகை மறந்தோர் பலருண்டு

பூமியில் பிரச்சினை பார்ப்பதுண்டு 

நானெனும் அகந்தை ஒழித்தவரே  

நாள்தோறும் காட்டிடுவார் நற்புன்னயே!!



Wednesday, December 15, 2021

 


செய்வதை நீ உணர்வாய்!


காகத்தின் நிறம் கருப்பு

காணும்போது எங்கும் இருக்கு

பாலின் நிறம் வெள்ளை

பளிச்சிட்டு எங்கும் நிற்கும் 


மனத்தின் நிறம் ஒளியே

மாசு வராமல் தடுப்பாய் 

செயலின் நிறம் சிறப்பே

செய்வதை நாம் உணரும்போது.

Thursday, November 25, 2021

 



கதைகளை ஏன் படிக்கவேண்டும்.
உங்களுடன்...


நம்மில் பலர் கதைகளைக் கேட்டுத்தான் வளர்ந்திருப்போம். கதைகளில் அப்படி என்னதான் இருக்கின்றது என்ற கேள்வியும் நமக்குள் எழும். கதைகள் மனிதர்களைச் செதுக்கும் சிற்றுளிகளாக விளங்குகின்றன என்று சொன்னால் மிகையாகாது.


கதைகளைக் கேட்கக் கேட்க, கதைப்புத்தகங்களைப் படிக்கப்படிக்க நம் சிந்தனை தொடர்ந்து வளர்ச்சி அடைகின்றது. சிந்தனை வளர்ச்சி பெருகும்போது இவ்வுலகில் சிறப்பாக வாழும்முறையைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.


கதைகளைச் செவிவழிக் கதைகள், பாட்டி சொன்ன கதைகள், முன்னோர்களின் வாழ்க்கைக் கதைகள், வரலாற்றுக்கதைகள், புராணக்கதைகள், இதிகாசக்கதைகள், மந்திரவாதி சொல்லும் கதைகள், படக்கதைகள், கோட்டுக்கதைகள், பூனை, எலி, கிளி, காகம் போன்ற உயிரினங்கள் சொல்லும் கதைகள் என்று பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


தனித்தன்மை வாய்ந்த ஒவ்வொரு செய்தியும் ஒரு கதையே ஆகும். தனி மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் சுவையாகச் சொல்லுகின்றபோதும் எழுதுகின்றபோதும்  கதைகளாக மாறுகின்றன.


இத்தகைய உயர்வுத் தன்மைகளைப் பெற்ற கதைகளை நாம் கட்டாயம் வாசித்துப் பொருள்புரிந்து கற்றுக்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் அகன்ற வாசிப்பாகத் தொடங்கும் கதை வாசிப்புப் பழக்கம், நம்மை ஆழ்ந்த வாசிப்புக்குக் கொண்டுசெல்லும் என்பது திண்ணமாகும்.


இவற்றின்மூலம் கதைகளை நாம் பகுத்துப்பார்க்கும் திறனை வளர்த்துக்கொள்ளலாம். நம்முடைய பகுப்பாய்வுச் சிந்தனை வளர்ச்சி அடையும்போது நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பல பிரிச்சினைகளுக்கு எளிதில் தீர்வுகாணும் வழி பிறக்கும்.



Wednesday, November 24, 2021

              என்ன கவலையோ!


இப்படியொரு கவலையா உனக்கு 

அப்படியென்ன கவலை தெரியலையே 

நெஞ்சில் ஓடுதோ  ஆயிரம் 

நினைவில் வந்து முட்டுதோ!


அம்மா உனக்குப் பால்கொடுகலயா 

அப்பா தோளில் சுமக்கலயா

அண்ணன் வந்து விளையாடலையா

அக்கா அதட்டி தூங்கவைக்கலையா


பாட்டி உனைத்தட்டிக் கொடுக்கலையா  

பாசம்காட்டி இன்று கொஞ்சலையா

 தாத்தா நன்குதள்ளிச் செல்லலையா 

தாவிநீயும் எழுந்து அமர்ந்தாயே! 


தூக்கம் போய்விடும் பேராண்டி

தூள்ளித் திரிந்திடு காலையிலே

கனவில் வந்ததை மறந்துவிடு

காற்றில் அதனை மிதக்கவிடு


எல்லாம் மறைந்திடும் உனைவிட்டு

எழுந்து நின்று விளையாடுவாய் 

ஏக்கத்தை நீயும்தொலைத் திடுவாய் 

எனதருமைப் பேராண்டி நீயே!!

                                                           - சிகு







 


                       பேரப்பிள்ளை


பேரப்பிள்ளைக்கு என்ன கவலையோ

பேதை மனம் ஒன்றே அறியும்

பேரப்பிள்ளைக்கு என்ன மகிழ்ச்சியோ

பெற்றமனம் ஒன்றே அறியும்!


பேரப்பிள்ளைக்கு என்ன கவலையோ

பெரியமனம் ஒன்றே அறியும்

பேரப்பிள்ளைக்கு என்ன மகிழ்ச்சியோ

பேரறிவு ஒன்றே அறியும்!!

                                                                                                               - சிகு

 


பார்போற்றும் பிள்ளை


பார்க்கும் கண்கள் என்னென்ன

பற்றும் நெஞ்சம் அவையே

காக்கும் மனம் எதுவோ

கற்பனை நிறைந்தது அதுவோ!


வாழ்க்கை என்ற பெருமழையில் 

வற்றாத ஊற்றும் அதுவே

துள்ளாத மனமும் துள்ளும்

துவண்டு போவாமல் காத்திடுமே!


போற்றாத மனமும் உண்டோ

பொறுமை வளமாவதும்  அதுவே 

பார்போற்றும் பிள்ளைச் செல்வத்தை

பாருக்குத் தந்து நிற்போமே!


                                                                  -சிகு

Saturday, November 20, 2021

 



                             விரிசல்

விரிசல் வேண்டாம் மனத்தினிலே 

வேதனை  வேண்டாம் பணியினிலே

கொண்டத னைத்தையும் மறந்திடுவோம்

கூடிவாழவே என்றும் கற்றிடுவோம்!


கற்றிடும் போதும் வேறுபாடு 

களத்தில் தானே தோன்றிடுமே  

குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை 

சூட்சும உண்மை அறிவோமே!

 

கவலை எல்லாம் மறந்திடுவோம்

கால மெல்லாம் மகிழ்ந்திடுவோம்

விரிசல் வேண்டாம் மனத்தினிலே

விபரீத எண்ணத்தை கூட்டிடுமே!!

                                                                 - சிகு



 கதையும் சிந்தனையும்

எதற்கு விடுமுறை

கமலி கமலி உன்ன எத்தனதடவ சொல்லிட்டேன். காலையில இருந்து இன்னும் சாப்பிடாம டீவியிலே இருக்க. உனக்கு டீவி சோறுபோடுமா. ஏம்மா இது நல்லா இருக்கா. இதுக்குத்தானா லீவு விட்டாங்க என்று கமலியின் அம்மா உரக்கக் கூறினார்.   

வீட்டில் நடக்கும் விசயத்தை ஓர் ஓரத்தில் நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்,  அப்பாவின் அம்மா முத்துப்பேச்சி. அவரைப் பாட்டி பாட்டி என்று பேரப்பிள்ளைகள் மிகவும் அன்புடன் அழைப்பார்கள்.   

கமலி அம்மா சொன்னா கேட்கவேண்டாமா, டீவியையே பார்த்துக்கிட்டிருந்தா கண்ணு கெட்டுப்போகும். உன் கண்ணாடி பவரக் கூட்டிரும். சொன்னா கேளும்மா என்று பாட்டி அன்பு கலந்த குரலில் தட்டிக்கேட்டார். 

இல்ல பாட்டி, இப்பத்தான் லீவு கிடைச்சிருக்கு. பொழுதைச் சந்தோசமாக் கழிக்க டீவிகூடப் பாக்கவிடலன்னா என்ன பாட்டி, நீங்க சொல்லுங்க என்று டீவியைப் பார்த்துக்கொண்டே பாட்டியிடம் கேட்டாள் கமலி. கமலியின் ஆதங்கம் பாட்டிக்குப் புரியாமலில்லை. என்ன செய்வது, பிள்ளைகளின் கவனம் முழுவதும் டீவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலேயே சென்றுவிடும் என்பது  பாட்டிக்குத் தெரியும். ஒருமாதங் கழித்துப் புத்தகத்தைப் படிப்பதற்குத் திறந்து பார்த்தாலே சலிப்புத்தோன்றும் என்பதையும் நன்கு புரிந்து வைத்திருந்த பாட்டி, சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.    

கமலி பாட்டியைப்  பார்த்து, என்ன பாட்டி நான் சொல்றது சரிதானே என்றாள். அதனைக் கேட்ட பாட்டி பொறுமையாகக் கமலியிடம்,  பொழுதுபோக்க எவ்வளவோ இருக்கு. அம்மாவுக்கு ஒத்தாசையா கொஞ்சநேரம் சமையல்ல இருந்தா, வருசம்பூராம் சமைக்கிற அம்மாவுக்குக் கொஞ்சம் சந்தோசந்தான. நீயும் பின்னால, ஓம் பிள்ளைகளுக்குச் சமையலைக் கத்துக்கொடுக்கனுமில்ல. இல்லாட்ட நம்ம பாரம்பரியச் சமையல் கொஞ்சங் கொஞ்சமாக மறைஞ்சிறுமில்ல. அதில இருக்கிற மருத்துவக்குணம் தெரியாம்மப் போயிருமில்ல.  அதனாலதாம்மா நான் சொல்லுரங் கமலி என்று சொல்லிமுடித்தார். பிரியமான பாட்டி சொன்ன வாழ்க்கைக் கதையைக் கேட்ட கமலியின் சிந்தனைக் கதவு மெல்லத்திறக்க ஆரம்பித்தது.                       

(சொற்களின் எண்ணிக்கை 180)

                      உரிமை ஆசிரியர் சி. குருசாமி.

 

Wednesday, November 17, 2021

 


கதையும் சிந்தனையும்   

புத்திசாலி சுண்டெலிகள்

இரண்டு சுண்டெலிகள் நண்பர்களாக இருந்தன. அவை வசித்து வந்த வீட்டுக்காரருக்கு மிகவும் தொந்தரவு கொடுத்து வந்தன. சுண்டெலிகள் வீட்டில் உள்ள துணிமணிகளைச் சில நேரங்களில் கடித்துக் குதறிவிடும். வீட்டுக்காரர் முத்து, அவற்றின்மீது கோபமாக இருந்தார். அவற்றின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு அவர் நினைத்தார். அதனால், முத்து அவற்றைப் பிடித்துக்கொல்வதற்கு முயற்சி செய்தார்.

ஒருநாள் முத்து, ஒரு பானையில் பாதி அளவு தண்ணீரை ஊற்றினார். அவர், பானையைத் திறந்து வைத்துவிட்டார். முத்து எலிகள்  பானைமீது ஏறி விளையாடும்போது பானைக்குள் விழுந்துவிடும். பின்னர், தண்ணீரிலிருந்து அவற்றால் தப்பிக்க முடியாமல் மூழ்கி இறந்துவிடும் என்று நினைத்தார்.

சுண்டெலிகள் வீட்டுக்காரர் நினைத்ததுபோல் இரவில் பானையைச் சுற்றிச் சுற்றி விளையாடின. அப்பொழுது ஒரு சுண்டெலி பானையில் ஏறி விளையாடுவதற்குச் சென்றது. அது வழுக்கிப் பானைக்குள் விழுந்துவிட்டது. மற்றொரு சுண்டெலி சிந்திக்கத் தொடங்கியது. அது வீட்டுக்காரர் பானையில் தண்ணீரை ஊற்றி வைத்தது அவற்றைப் பிடிப்பதற்குச் செய்த சதி என்று முடிவுசெய்தது. இதனை முறியடிப்பதற்கு அது சிந்திக்கத் தொடங்கியது.  அந்நேரத்தில் சுண்டெலி உயரத்தில் இருந்த ஒரு பெரிய பூனையைத் தற்செயலாகப் பார்த்தது.  அது ஒரு தந்திரம் செய்தது. சுண்டெலி அந்தப் பானையின்மீது மெதுவாக ஏறியது. இதனை உயரத்தில் இருந்த அந்தப் பூனை  கவனித்தது.

பானையின்மீது இருந்த சுண்டெலியைக் கவ்விப் பிடிப்பதற்குப் பூனை பானையின் மீது குதித்தது. பானை கீழே சாய்ந்தது. பூனைக்குக் காலில் அடிபட்டது. அது அப்படியே படுத்துவிட்டது. இரண்டு சுண்டெலிகளும் தப்பித்து ஓடிவிட்டன. காலையில் முத்து அறை முழுவதும் கொட்டிக்கிடந்த தண்ணீரைத் துடைத்து எடுத்தார். அவருடைய முகம் மிகவும் வாடி இருந்தது.  

(சொற்களின் எண்ணிக்கை 161)

எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

 நீதிக்கருத்து

புத்திசாலிகள் எந்தச் சூழ்நிலையிலும் பிழைத்துக்கொள்வார்கள்

 


கதையும் சிந்தனையும் 

இனிப்பே வாழ்க்கை

அன்புக்கனி இனிப்புப் பலகாரங்களை விரும்பிச் சாப்பிடுவார். அது இன்று நேற்று பழகிய பழக்கம் அல்ல. அன்புக்கனி, தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது சர்க்கரையைக் கால்சட்டைப் பையில் வைத்துச் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. பொறித்த கடலை, தேங்காய்ச் சில் ஆகியவற்றுடன் சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிடும் பழக்கத்தை அன்புக்கனியின் பாட்டி அவருக்குக் கற்றுக்கொடுத்தார். அன்புக்கனியின் அம்மா வடிவும் அவருக்குப் பிடித்த இனிப்புப் பணியாரத்தை அடிக்கடிச் சுட்டுக்கொடுக்கத் தொடங்கினார். இனிப்புப் பலகாரங்களை நன்கு ருசிபார்த்து வந்த அன்புக்கனி நாளடைவில் இனிப்புப் பிரியராக மாறிவிட்டார்.  

அன்புக்கனி துணி வியாபாரம் செய்வதை ஒரு முதலாளியிடம் கற்றுக்கொண்டார். அதனால், அவர் சொந்தமாகத் துணிக்கடை ஒன்றைத் தொடங்கினார். அவரும் வேலையாளைப் போல் ஓடியாடி கடையில் வேலை செய்து வந்தார். அன்புக்கனி வாடிக்கையாளர்களின் மனம் கோணாமல் நடந்துகொண்டார். அதனால்,  அவருடைய கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒருசில வருடங்களில் அன்புக்கனி பெரிய முதலாளியாக மாறினார்.

அன்புக்கனிக்கு உடல் உழைப்பு கொஞ்சங் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. அவருக்கு அடிக்கடிச் சோர்வு ஏற்பட்டது. அவர் அதனைப் போக்குவதற்கு இனிப்பு அல்வாவை  வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார். அல்வா அவருடைய சோர்வை நீக்கிப் புத்துணர்ச்சி அளித்து வந்தது. இது தொடர் பழக்கமாக மாறியது. அன்புக்கனி சுவை மிகுந்த அல்வாவை அதிகமாகச் சாப்பிட்டு வருவதால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை. அதனை அனுபவத்தின் மூலம் நன்கு அறிந்துகொண்ட அவருடைய அவருடைய வடிவு அவருக்கு ஆலோசனை கூறினார்.

ஒருநாள் வடிவு அன்புக்கனியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவரும் அன்புக்கனியைச் சோதனை செய்தார். அவர் அன்புக்கனியிடம் உடல் தேவைக்கு அதிகமாக இனிப்புப் பலகாரங்களை உண்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறினார். அதோடு அவர் இனிப்புப் பலகாரங்களுக்குப் பதில்  இனிப்புக் குறைந்த பழங்களைச் சாப்பிட்டுவரும்படி ஆலோசனை கூறினார். அதோடு சில மாத்திரைகளையும் அன்புக்கனி தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.   அன்புக்கனியும் மருத்துவர் கூறியவற்றைப் பின்பற்றி வந்தார். அவர் சில மாதங்களில் புதிய தெம்புடன் விளங்கினார். அன்புக்கனி மீண்டும் ஒரு தொழிலாளியைப் போல் அவருடைய கடையில் ஓடியாடி வேலை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.        

 (சொற்களின் எண்ணிக்கை 205)

எழுதியவர்: ஆசிரியர்  சி. குருசாமி.

 

 

நீதிக்கருத்து

அளவுக்கு மீறினால் அமிர்தம்கூட விசமாக மாறிவிடும்.  

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பயிற்சி வினாக்கள் 

முடிவை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்குதல்

அன்புக்கனி மீண்டும் ஒரு தொழிலாளியைப் போல் அவருடைய கடையில் ஓடியாடி வேலை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


கதையும் சிந்தனையும்   

கொழுக்கட்டை

மாதவன் நல்ல உழைப்பாளி. அவர் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவு சேமித்து வந்தார். சில வருடங்களில் ஐந்தாயிரம் வெள்ளியைச் சேமித்தார். அதனைக் கொண்டு ஒரு பலகாரக்கடையைத் திறந்தார். அவருடைய பலகாரக்கடையில் கொழுக்கட்டை செய்பவர் ஒருவர் இருந்தார். அவர் செய்யும் கொழுக்கட்டை மிகவும் ருசியாக இருந்தது. அதனால் அதனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

மாதவன் புதிதாக மற்றொரு பலகாரக்கடையைத் தொடங்கினார். இதன்மூலமும் அதிகமான வருமானம் கிடைத்தது. மாதவன் பக்கத்து ஊர்களிலும் கடைகளைத் தொடங்கினார். அவருக்கு வியாபாரம் சூடுபிடித்தது. அழிந்துவரும் பண்பாட்டுப் பலகாரம் மக்கள் மத்தியில் மீண்டும் தனி இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது. மாதவனுக்கு அதிக இலாபம் கிடைத்தது. ஒருமுறை மாதவன் அவருடைய ஊரில் கொழுக்கட்டைத் திருவிழா ஒன்றை நடத்தினார். அத்திருவிழாவில் கொழுக்கட்டைக்குள் ஒரு தங்கக் காசை வைத்து மக்களுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

அன்று நடைபெற்ற கொழுக்கட்டைத் திருவிழாவின் மூலம் மாதவனின் வியாபாரம் மேலும் பெருகத்தொடங்கியது. காலப்போக்கில் அவர் ஒரு பணக்காரர் ஆனார். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யத்தொடங்கினார். அவருடைய ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டினார். அதில் மாணவர்கள் படிப்பதற்குக் கட்டணம் வாங்கவில்லை. பத்து ஆண்டுகளில் அந்த ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அந்த ஊர்மக்களுக்கு வருமானமும் கூடியது. மாதவனின் பேரும் புகழும் பரவியது. 

 (சொற்களின் எண்ணிக்கை 130)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

பிறர் வாழ்வில் அக்கறை செலுத்தும்போது மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

பயிற்சி வினாக்கள் 

தொடக்கவரிகளைக் கொண்டு கதை ஒன்று உருவாக்குக.

மாதவன் நல்ல உழைப்பாளி. அவர் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவு சேமித்து வந்தார். ..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இக்கதையில் இருந்து அறிந்துகொண்ட வாழ்க்கைத் திறன்கள் இரண்டு