Wednesday, November 17, 2021

 


கதையும் சிந்தனையும் 

இனிப்பே வாழ்க்கை

அன்புக்கனி இனிப்புப் பலகாரங்களை விரும்பிச் சாப்பிடுவார். அது இன்று நேற்று பழகிய பழக்கம் அல்ல. அன்புக்கனி, தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது சர்க்கரையைக் கால்சட்டைப் பையில் வைத்துச் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. பொறித்த கடலை, தேங்காய்ச் சில் ஆகியவற்றுடன் சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிடும் பழக்கத்தை அன்புக்கனியின் பாட்டி அவருக்குக் கற்றுக்கொடுத்தார். அன்புக்கனியின் அம்மா வடிவும் அவருக்குப் பிடித்த இனிப்புப் பணியாரத்தை அடிக்கடிச் சுட்டுக்கொடுக்கத் தொடங்கினார். இனிப்புப் பலகாரங்களை நன்கு ருசிபார்த்து வந்த அன்புக்கனி நாளடைவில் இனிப்புப் பிரியராக மாறிவிட்டார்.  

அன்புக்கனி துணி வியாபாரம் செய்வதை ஒரு முதலாளியிடம் கற்றுக்கொண்டார். அதனால், அவர் சொந்தமாகத் துணிக்கடை ஒன்றைத் தொடங்கினார். அவரும் வேலையாளைப் போல் ஓடியாடி கடையில் வேலை செய்து வந்தார். அன்புக்கனி வாடிக்கையாளர்களின் மனம் கோணாமல் நடந்துகொண்டார். அதனால்,  அவருடைய கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒருசில வருடங்களில் அன்புக்கனி பெரிய முதலாளியாக மாறினார்.

அன்புக்கனிக்கு உடல் உழைப்பு கொஞ்சங் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. அவருக்கு அடிக்கடிச் சோர்வு ஏற்பட்டது. அவர் அதனைப் போக்குவதற்கு இனிப்பு அல்வாவை  வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார். அல்வா அவருடைய சோர்வை நீக்கிப் புத்துணர்ச்சி அளித்து வந்தது. இது தொடர் பழக்கமாக மாறியது. அன்புக்கனி சுவை மிகுந்த அல்வாவை அதிகமாகச் சாப்பிட்டு வருவதால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை. அதனை அனுபவத்தின் மூலம் நன்கு அறிந்துகொண்ட அவருடைய அவருடைய வடிவு அவருக்கு ஆலோசனை கூறினார்.

ஒருநாள் வடிவு அன்புக்கனியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவரும் அன்புக்கனியைச் சோதனை செய்தார். அவர் அன்புக்கனியிடம் உடல் தேவைக்கு அதிகமாக இனிப்புப் பலகாரங்களை உண்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறினார். அதோடு அவர் இனிப்புப் பலகாரங்களுக்குப் பதில்  இனிப்புக் குறைந்த பழங்களைச் சாப்பிட்டுவரும்படி ஆலோசனை கூறினார். அதோடு சில மாத்திரைகளையும் அன்புக்கனி தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.   அன்புக்கனியும் மருத்துவர் கூறியவற்றைப் பின்பற்றி வந்தார். அவர் சில மாதங்களில் புதிய தெம்புடன் விளங்கினார். அன்புக்கனி மீண்டும் ஒரு தொழிலாளியைப் போல் அவருடைய கடையில் ஓடியாடி வேலை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.        

 (சொற்களின் எண்ணிக்கை 205)

எழுதியவர்: ஆசிரியர்  சி. குருசாமி.

 

 

நீதிக்கருத்து

அளவுக்கு மீறினால் அமிர்தம்கூட விசமாக மாறிவிடும்.  

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பயிற்சி வினாக்கள் 

முடிவை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்குதல்

அன்புக்கனி மீண்டும் ஒரு தொழிலாளியைப் போல் அவருடைய கடையில் ஓடியாடி வேலை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment