Wednesday, November 17, 2021

 

கதையும் சிந்தனயும்   

கற்பனைக்கு ஏது எல்லை

வெள்ளை நிறம் சந்திரனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் மூன்று வயதாக இருக்கும்போதே வீட்டிலுள்ள வெள்ளை நிறச் சுவரில் கிறுக்கிக்கொண்டே இருப்பான். அவனுடைய கிறுக்கும் பழக்கத்தைப் பெற்றோர்கள் தொடர்ந்து வளர்த்து வந்தனர். சந்திரனின் கிறுக்கல்கள் ஐந்து வயதில் வெள்ளைத் தாளுக்கு மாறின. அவை ஊகித்தறியும் ஓவியங்களாக மாறத்தொடங்கின.

பெற்றோர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அவர்கள் குத்துவிளக்குத் தொடர்ந்து  எரிவதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் சந்திரனின் ஆர்வத்தைத் தூண்டித் தூண்டி வளர்த்து வந்தார்கள்.   அவர்களுக்கும் புதிய புதிய சிந்தனை தோன்றியது. சந்திரனுக்குப் பென்சில் ஓவியப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக் கொடுத்தார்கள். உரிய வயதில் அவனைத் தொடக்கப்பள்ளியிலும் சேர்த்துவிட்டனர். சந்திரன் பாடங்களைப் படிப்பதில் கெட்டிக்காரனாக இருந்தான். ஓவியங்களை வரைவதிலும் ஆர்வத்தைச் செலுத்தி வந்தான்.  

சந்திரனிடம் இருக்கும் ஓவியக் கலையைப் பற்றிய சிந்தனை காட்டு வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சந்திரன் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ஓவியப் பட்டப் படிப்பில் சேர்வதற்கு நினைத்தான். அதனால், வெளிநாடு சென்று படிக்க விரும்பினான். அவனுடைய பெற்றோரிடம் போதிய பணம் இல்லை. அதனால் சந்திரன் மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவித்தொகை வழங்குமாறு தனியார் நிறுவனங்களிடமும் அரசாங்கத்திடமும் கேட்டனர். அவர்களின் உதவியோடு ஓவியப் பட்டப்படிப்பை முடித்தான்.

சந்திரன் ஒரு கற்பனைக் கலைஞனாக மாறினான். அவனுடைய ஓவியங்களைக்  கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் தம்முடைய மனக்கவலையைக்கூட மறந்து வந்தனர். ஒருசில ஆண்டுகளுக்குப் பின்னர், தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு சந்திரன் வெற்றி பெற்றான். சமீபத்தில் அவன் உலக அளவில் நடந்த ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசைப் பெற்றான். சந்திரன் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஓவியக் கலையின் மூலம் பெருமை தேடித்தந்தான்.       

(சொற்களின் எண்ணிக்கை 164)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

கவலையை மாற்றும் மா மருந்தே கற்பனை.


No comments:

Post a Comment