Wednesday, November 17, 2021

 


கதையும் சிந்தனையும் – 26  

கண்ணு

செல்லப்பனுக்குச் செல்லப் பிராணிகள் என்றால் கொள்ளை ஆசை. இது இன்று நேற்று ஏற்பட்ட ஆசை இல்லை. அவன் பிள்ளைப் பருவத்தில் இருந்தே நிழல்போல் தொடர்ந்து வளர்ந்து வந்த ஆசை. செல்லப்பன் அவனுடைய ஆசையைப் பெற்றோர்களிடம் கூறினான். செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு ஏற்றக் குடும்பச் சூழ்நிலை இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.  

வருடங்கள் சில சென்றன. செல்லப்பன் மருத்துவர் பணியில் சேர்ந்தான். ஒருசில வருடங்களில் நல்ல இடவசதிகொண்ட ஒரு வீட்டை வாங்கினான். பின்னர், அவனுடைய கனவுகளை நிறைவேற்றத் தொடங்கினான். முதலில் அழகான நாய்குட்டி ஒன்றை விலைக்கு வாங்கினான். அதற்குக் கண்ணு என்று பெயரிட்டான். கண்ணும் செல்லப்பனும் நெருங்கிய நண்பர்களைப்போல் பழகினர். செல்லப்பன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கண்ணு தன்னுடைய குட்டை வாலை ஆட்டிக்கொண்டு துள்ளித் துள்ளிக் குதிக்கும். கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கூப்பிட்டுக் கொண்டு செல்லப்பன் நடைப்பயிற்சிக்குச் சென்றுவிடுவான். இது வழக்கமாக இருந்தது. ஒருநாள் செல்லப்பன் வேகமாக நடந்துசெல்லும்போது மயங்கிக் கீழே விழுந்துவிட்டான். அதனைக் கண்ட கண்ணு அக்கம் பக்கம் திரும்பிக் குரைக்கத் தொடங்கியது.

சற்றுத் தூரத்தில் செல்லப்பிராணியைப் பிடித்துக்கொண்டு ஒருவர் நடந்து வந்தார். அவர் விலங்குகளின் குரலைப் புரிந்துகொள்பவர். அதற்கென்று சிறப்புப்  பயிற்சி பெற்றவர். எனவே, அவர் கண்ணுவின் அழுகுரலைக் கேட்டு விரைவாக அதன் அருகில் ஓடி வந்தார். அவர், அங்கு மயங்கிக்கிடந்த செல்லப்பனை உடனே மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றார். மருத்துவர்கள் செல்லப்பனைக் காப்பாற்றினார்கள். இரண்டு நாள்களுக்குப் பிறகு செல்லப்பன் வீடு திரும்பும்போது மருத்துவமனையில் தம்மைக் காப்பாற்றியவரின் முகவரியை வாங்கிக்கொண்டான். அவருடைய வீட்டிற்கு அவன் நேரில் சென்று தம்முடைய நன்றியைத் தெரிவித்தான். வீட்டிற்குச் சென்றவுடன் செல்லப்பன் கண்ணுவின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்தான்.

 (சொற்களின் எண்ணிக்கை 172)

 எழுதியவர் சி. குருசாமி ஆசிரியர்

நீதிக்கருத்து

உயிர்காப்பவன்தான் உயர்ந்த பண்புடைய தோழன். 


No comments:

Post a Comment