Wednesday, November 17, 2021

 


கதையும் சிந்தனையும்   

புத்திசாலி சுண்டெலிகள்

இரண்டு சுண்டெலிகள் நண்பர்களாக இருந்தன. அவை வசித்து வந்த வீட்டுக்காரருக்கு மிகவும் தொந்தரவு கொடுத்து வந்தன. சுண்டெலிகள் வீட்டில் உள்ள துணிமணிகளைச் சில நேரங்களில் கடித்துக் குதறிவிடும். வீட்டுக்காரர் முத்து, அவற்றின்மீது கோபமாக இருந்தார். அவற்றின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு அவர் நினைத்தார். அதனால், முத்து அவற்றைப் பிடித்துக்கொல்வதற்கு முயற்சி செய்தார்.

ஒருநாள் முத்து, ஒரு பானையில் பாதி அளவு தண்ணீரை ஊற்றினார். அவர், பானையைத் திறந்து வைத்துவிட்டார். முத்து எலிகள்  பானைமீது ஏறி விளையாடும்போது பானைக்குள் விழுந்துவிடும். பின்னர், தண்ணீரிலிருந்து அவற்றால் தப்பிக்க முடியாமல் மூழ்கி இறந்துவிடும் என்று நினைத்தார்.

சுண்டெலிகள் வீட்டுக்காரர் நினைத்ததுபோல் இரவில் பானையைச் சுற்றிச் சுற்றி விளையாடின. அப்பொழுது ஒரு சுண்டெலி பானையில் ஏறி விளையாடுவதற்குச் சென்றது. அது வழுக்கிப் பானைக்குள் விழுந்துவிட்டது. மற்றொரு சுண்டெலி சிந்திக்கத் தொடங்கியது. அது வீட்டுக்காரர் பானையில் தண்ணீரை ஊற்றி வைத்தது அவற்றைப் பிடிப்பதற்குச் செய்த சதி என்று முடிவுசெய்தது. இதனை முறியடிப்பதற்கு அது சிந்திக்கத் தொடங்கியது.  அந்நேரத்தில் சுண்டெலி உயரத்தில் இருந்த ஒரு பெரிய பூனையைத் தற்செயலாகப் பார்த்தது.  அது ஒரு தந்திரம் செய்தது. சுண்டெலி அந்தப் பானையின்மீது மெதுவாக ஏறியது. இதனை உயரத்தில் இருந்த அந்தப் பூனை  கவனித்தது.

பானையின்மீது இருந்த சுண்டெலியைக் கவ்விப் பிடிப்பதற்குப் பூனை பானையின் மீது குதித்தது. பானை கீழே சாய்ந்தது. பூனைக்குக் காலில் அடிபட்டது. அது அப்படியே படுத்துவிட்டது. இரண்டு சுண்டெலிகளும் தப்பித்து ஓடிவிட்டன. காலையில் முத்து அறை முழுவதும் கொட்டிக்கிடந்த தண்ணீரைத் துடைத்து எடுத்தார். அவருடைய முகம் மிகவும் வாடி இருந்தது.  

(சொற்களின் எண்ணிக்கை 161)

எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

 நீதிக்கருத்து

புத்திசாலிகள் எந்தச் சூழ்நிலையிலும் பிழைத்துக்கொள்வார்கள்

No comments:

Post a Comment