Wednesday, November 17, 2021

 


கதையும் சிந்தனையும்   

அடைக்கலம்

ஒரு காட்டில் பனை மரங்கள் பல இருந்தன. அவற்றில் ஒரு மரத்தில் தூக்கணாங்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அவற்றுள் ஒரு குருவி  பாட்டிக் குருவி. அது மூலிகை மருத்துவத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தது. அதனால், மற்றக்  குருவிகளுக்குத் தனக்குத் தெரிந்த மருந்துச் செடிகள், கொடிகள், இலைகள் போன்றவற்றைக் கொண்டு, மருத்துவ உதவி செய்து வந்தது. மற்றக் குருவிகள் பாட்டிக் குருவியை மருத்துவத்தாய் என்று அன்புடன் அழைத்து வந்தன.  அதன்மீது மரியாதையும் செலுத்தி வந்தன.

ஒருநாள் மயில் ஒன்று குருவிகள் வசிக்கும் மரத்திற்கு வந்தது. அதனை வேடன் ஒருவன் தாக்கியதால் அது காயத்துடன் இருந்தது. காயத்திலிருந்து இரத்தம் வந்துகொண்டிருந்தது. அந்த மயில், பாட்டிக் குருவிக்கு அருகில் பறந்துவந்து நின்றது. அதனைக் கண்டபோது பாட்டிக் குருவி அதன்மீது இரக்கப்பட்டது. அது  உடனே தன் கூட்டுக்குள் இருந்த மூலிகைச் செடியை எடுத்து மயிலின் உடலில் தடவியது. என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்தில் மயிலின் காயத்திலிருந்து வடிந்த  இரத்தம் நின்றது. மயில் சில நாட்கள் பாட்டிக் குருவியுடன் தங்கியிருந்தது. தன்னிடம் அடைக்கலம் புகுந்த மயிலுக்குப் பாட்டிக் குருவி உணவுகொடுத்து உபசரித்து வந்தது. சில நாள்களில் மயிலின் காயம் படிப்படியாக ஆறியது.

ஒருநாள் பெரிய காற்று வீசியது. அவை தங்கியிருந்த பனைமரம் சாய்ந்தது. தூக்கணாங்குருவிகளுக்கு எங்குச் செல்வது என்று தெரியவில்லை. மயில் தன்னுடன் வருமாறு குருவிகளை அன்புடன் அழைத்தது. குருவிகள் மயிலுடன் செல்வதற்குச் சம்மதித்தன. அவை நீண்டதூரம் பறந்து சென்றன. மயில் அவற்றைத் தன்னுடைய உறவினர்கள் தங்கியிருக்கும் ஆலமரத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு நல்ல வசதியுடன் மயில்களும் தூக்கணாங்குருவிகளும் ஒற்றுமையாக வாழத்தொடங்கின.

 (சொற்களின் எண்ணிக்கை 164)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களை ஆதரிப்பது நம்முடைய பண்புகளில் ஒன்று.   

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பயிற்சி வினாக்கள் 

அடியில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களின் பொருளை விளக்குக.

மற்றக் குருவிகள் பாட்டிக் குருவியை மருத்துவத்தாய் என்று அன்புடன் அழைத்து வந்தன.  அதன்மீது மரியாதையும் செலுத்தி வந்தன.

 

 

 

இக்கதையில் இருந்து அறிந்துகொண்ட வாழ்க்கைத் திறன்கள் இரண்டு

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment