Wednesday, October 14, 2020

 2. உழைப்புக்கேற்ற ஊதியம் - 

கதையைப் படித்த பின்னர் உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.

 கதையிலிருந்து தெரிந்துகொண்ட வாழ்க்கைத் திறனைப் பற்றிப் பதிவு செய்யவும்.


ஓர் ஊரில் குன்னிமுத்து என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வறுமையில் சிக்கித் தவித்து வந்தார். குன்னிமுத்து, கட்டட வேலைக்குரிய இரும்புக் கம்பிகளை வெட்டிக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.

அவர் மற்றவர்களிடம் பேசும்போது சற்றுக் குனிந்து பணிவாகப் பேசுவார். அதனால்தான் முத்து என்ற அவருடைய பெயருக்கு முன்னால் குன்னி என்ற பட்டப் பெயர் ஏற்பட்டது.

 

குன்னிமுத்துவுக்குத் தன்னுடைய மகன் பெருமாளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவரிடம் பண வசதி இல்லை.

பெருமாள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தான். அதன்பின்னர் அவனை ஒரு கார் பழுதுபார்க்கும் வேலைக்குச் சேர்த்து விட்டார். 

 

பெருமாள் மதிநுட்பம் நிறைந்தவன். அவன் சில ஆண்டுகளில் காரின் இயந்திரங்களைப்  பழுது பார்ப்பதற்குக் கற்றுக் கொண்டான். அதோடு அவற்றை மறு உருவாக்கமும் செய்து வந்தான்.

 

தொழிற்சாலையின் முதலாளிக்குப் பெருமாளை மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர் பெருமாளுக்குக் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலை ஒன்றைக் குறைந்த விலைக்கு விற்றார்.

 

அந்தத் தொழிற்சாலையில் பெருமாள் இரவு பகல் உழைத்தான். அவனுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கத் தொடங்கியது. அதனைக்கொண்டு முதலாளிக்குத் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தந்தான்.

 

இரண்டு மூன்று வருடங்களுக்குள் பெருமாளின் வருமானம் வேகமாகப் பெருகியது. அந்த வருமானத்தைக்கொண்டு வெவ்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை அவன் ஏற்படுத்தினான். அவற்றை நிர்வாகம் செய்வதற்குப் படித்தவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டான்.

 

பெருமாள் சமூகத்தொண்டிலும் ஈடுபடத் தொடங்கினான். அதனால், அவனுக்குச் சமூகத்தில் தனி மரியாதை கிடைத்தது.  இதனைக் கண்ட குன்னிமுத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து வந்தார். அவர்களின் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் குன்னிமுத்துவை, முத்து முதலாளி என்று அழைக்கத் தொடங்கினர். காலப்போக்கில் குன்னிமுத்து என்று அழைப்பதை அனைவரும் மறந்துவிட்டனர்.

 

முத்து, மகனின் உழைப்பிற்குத் தனக்கு மிகப் பெரிய பரிசு கிடைத்தது என்று அடிக்கடித் தன் மனத்திற்குள் சொல்லிக் கொள்வார். அவர் தொடர்ந்து வாழ்க்கையில் நல்ல பல அனுபவங்களைப் பெற்று வந்தார். முத்து தம்மிடம் வேலை பார்க்கும்  தொழிலாளிகளை மிகவும் அன்புடன் நடத்தி வந்தார். அதனால், அவர்களும் மிகவும் மரியாதை கொடுத்து வந்தனர்.  

 

(சொற்களின் எண்ணிக்கை 209)

(எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி)

நீதிக்கருத்து.

நேர்மையான உழைப்பே வாழ்க்கையில் நிலைத்த வெற்றியைத் தேடித்தரும்

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment