Wednesday, June 1, 2022

 


தர்மலிங்கம்

 

 

தர்மலிங்கம் நீதிக்கரசர். ஆம் நேர்மை, நீதி, என்று வளர்க்கப்பட்ட ஒரு பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்கள் பெரிய விவசாயிகள். பொங்கல் பண்டிகை என்றால் ஆயிரம் பேருக்குத் தான தர்மம் கொடுத்து மகிழும் உள்ளன்பு கொண்டவர்கள்.

தம் பிள்ளையும் கல்விக் கலையில் சிறந்து விளங்கவேண்டும். சமூக நோக்கோடு இருக்கவேண்டும் என்பது அவருடைய தந்தை அழகனின் விருப்பம். தனக்கென ஒரு செல்வாக்கை ஊர்மக்களிடம் வளர்த்துக்கொண்ட பெரியவர் அவர்.

தர்மலிங்கம் இன்று ஓய்வு பெற்றுவிட்டார். தன்னுடைய மனைவி காமாட்சிக்கு ஆதரவாக வீட்டு வேலைகளையும் அவ்வப்போது செய்து வருகிறார்.

படிப்பு பதவியில் உயர்ந்தவராக இருந்தாலும் வீட்டுக்குவந்தால் குடும்பத்தில் ஒருவராக மாறிவிடுவார். அன்பு நிறைந்த மனைவி காமாட்சியோடு மூன்று அன்புச் செல்வங்கள். அவர்களைத் தம்பாரம்பரிய குணத்தோடு வளர்த்து வந்தார்.  

தர்மலிங்கம் பல நாட்கள் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருப்பார். அவ்வப்போது அவருடைய எண்ண அலைகள் கடந்த காலத்தை நோக்கிச் சென்று திரும்பும்.  

ஒரு நாள் நல்லிரவில், தன்னுடைய தந்தையின் செல்வாக்கும், அவருடைய சர்க்கரை ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைபார்த்ததும் அவரைக் கடன்கொடுத்தவர்கள் வீட்டில்வந்து தொல்லை கொடுத்ததும் நினைவுக்கு வந்தது.

பாவம் அவருடைய தந்தை என்ன செய்வார். மூன்று ஆண்டுகளாக மழை  பெய்யவில்லை. வானம் ஏமாற்றிவிட்டது. கரும்பு உற்பத்தி நின்றுவிட்டது. தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கமுடியவில்லை. அரசாங்கத்திடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அரசாங்கம் தொழிற்சாலையை மூடிவிட்டது.

தொழிற்சாலையை விற்றுக் கடனை அடைத்தார். தன்னை நம்பி இருந்த தொழிலாளிகளின் நிலையை எண்ணி மனம் நொந்து போனார். கண்கலங்கியது. படுத்தார் தூங்கினார். அவ்வளவுதான் அவர் எழவில்லை.

இந்த நினைவு எப்போதும் தர்மலிங்கத்தை வாட்டி வதைத்துக்கொண்டே இருந்தது. அவரால் தந்தை கடன் சுமையில் தவிப்பதைப் பார்க்கத்தான் முடிந்தது. உதவ முடியவில்லை. அப்போது சின்னவயதுதான் தர்மலிங்கத்துக்கு.

கல்வியில் சிறந்து விளங்கிய தர்மலிங்கம் அரசாங்க நிதி உதவியின் மூலம் தொடர்ந்து படித்தார். நல்ல தர்மசிந்தனை உள்ள தர்மலிங்கம் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.  

அவருடைய தீர்ப்பு எப்போதும் தவறாக இருக்காது. அவர் தன் மனைவியைப் பார்த்து, ‘’நம் பிள்ளைகள் வீட்டுக்கும் நாட்டுக்கும் உழைப்பதை நினைக்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று அவ்வப்போது கூறுவார். அதைக் கேட்கும்போதெல்லாம் காமாட்சி மன மகிழ்வு கொள்வார்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment