Wednesday, June 1, 2022

 

முதலுதவி

 

முத்துவேல் என்றால் தூக்கம்தான். ஆம் பேருந்தில் செல்லும்போதுகூடத்  தூங்குவார். இது இன்று நேற்று தொடங்கிய பழக்கம் இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக இருக்கிறது. ஏன் இப்படி ஒரு தூக்கம் என்பது அவருக்குத் தெரியாமலில்லை.

முத்துவேலுவின் எண்ணத்திரை முன்னோக்கிச் சென்றது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த முத்துவேலைவைப் பார்த்து முத்துவேலு என்னப்பா அடிக்கடி தூங்கிவிடுறே ஏங்கூடத் தோட்ட வேலைக்கு உதவிக்கு வர்ரதுனால தூங்கிடுற. படிக்கிற வயசில அங்கேயும் வந்து உழைக்கிறே. வேறு வழியில்லைப்பா  உழைத்தால்தானே கூலிதருவாங்க. அதுவும் உனக்கு அரைக்கூலி.  அப்பாவும் இல்லை. நான்கு பிள்ளைகளையும் வளர்க்கனும் நீதான் மூத்தவன் எங்கூட ஒத்தாசைக்கு வர்ற என்று அம்மா அன்று கூறியது பசுமரத்தாணி போல எண்ணத்திரையில் அவ்வப்போது வந்து மறையும்.

பிழைப்புத்தேடி ஒருகாலத்தில மலேசியாவுக்கு வந்த குடும்பங்களுள் ஒன்றுதான் முத்துவேலின் குடும்பம். மலைப்பகுதியில்தான் அப்ப வேலை கிடைச்சது. அவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி நல்லா தெரியும். அதனால மலைத்தோட்டத்தல எளிதாகத் தோட்ட வேலை கிடைத்தது.

முத்துவேலுக்கு ஒரே ஒரு ஆசை. எப்படியாவது தன்னுடைய பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கனும். அது நிறைவேறினால் பிறந்ததன் பயன் நிறைவேறும்னு அடிக்கடி அவருக்குள்ளேயே சொல்லிக்கொள்வார். அதைத் தோட்டக்கார முதலாளி மனைவியிடம் ஒருநாள் பயந்து பயந்து சொன்னார். நல்ல மனநிலையில் இருந்த முதலாளி அம்மாவும் படிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொடுப்பதாகச் சொன்னார்.

வாக்குத்தானே மனிதனுக்கு முக்கியம். முதலாளி அம்மா சொன்ன சொல் மாறாமல் முத்துவேலின் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தார். பெற்றோரின் அருமையைப் புரிந்துகொண்ட பிள்ளைகள் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத்தொடங்கினர். அதுவும் சமூகப் பயன்பாடு மிக்க துறைகளைத் தேர்ந்தெடுத்தனர். தம்மால் முடிந்தவரை சமூக சேவையில் ஈடுபடுவதற்கும் முடிவு செய்தனர். மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்த மாறனோ முடிந்தவரை இலவச ஆலோசனையும் இலவச் சேவையும் ஏழைகளுக்குச் செய்யத் தொடங்கினார்.

பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்த அறிவழகனோ அத்துறையில் வல்லவனாக மாறி அமெரிக்கா சென்று வான்வெளியைப் பற்றிப் படித்து அறிவியல் மேதையாக நாடு திரும்பினான்.  

ஆசிரியத்துறையைச் தேர்ந்தெடுத்த குமரனோ வாழ்நாள் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டு வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் ஏழைகளின் பிள்ளைகளைத் தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தான். அவன் கல்வியின் மீது அக்கறையில்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தி நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொடுத்தான்.   

இவர்களைப்போல நாமும் நம்மால் முடிந்த உதவிகளை நாம் வாழும் சமூகத்திற்குச் செய்ய வேண்டும் என்பதே இக்கதையின் நோக்கம் ஆகும்.


எழுதியவர் சி. குருசாமி

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment