Friday, June 17, 2022

 

கழுகு வேட்டை


பெரிய காட்டில் முற்புதர்கள் நிறைந்து இருந்தன. அங்குக் காட்டுக்கோழிகள் அதிகம் இருந்தன. ஒரு காட்டுக்கோழி தன்னுடைய முட்டைகளை முட்புதரின் அடியில் பத்திரமாக  வைத்து அடைகாத்து வந்தது.  ஒருநாள் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தன. அவற்றைக் கண்ணும் கருத்துமாகத் தாய்க்கோழி பாதுகாத்து வந்தன. தாய்க்கோழி சில நேரங்களில் முட்செடிகளுக்கு வெளியே தன்னுடைய குஞ்சுகளைக் கூப்பிட்டுச் செல்லும். அப்போது  அவைகளுக்கு இரை தேடுவதற்கு அது கற்றுக்கொடுக்கும். 

காட்டுக்கோழியின் செயலினை ஒரு கழுகு கவனித்து வந்தது. அது கோழிக்குஞ்சுகளைத் தின்பதற்கு நினைத்தது. அதனால், ஒரு நாள் கோழிக்குஞ்சுகளை நோக்கிப் பறந்து வந்தது. இதனைத் தாய்க்கோழி கவனித்து விட்டது.  அது மிகவும் ஆற்றலுடன் கழுகை எதிர்த்துப் போராடியது. கழுகு தான் தப்பித்தால் போதும் என்று நினைத்தது. அது வேகமாக வானில் பறந்து சென்றது.

கழுகின் செயல் காட்டுக்கோழிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இருந்தாலும் கழுகு மீண்டும் வந்து தன்னுடைய குஞ்சுகளைப் பிடித்துத் தின்றுவிடும் என்று காட்டுக்கோழி  நினைத்தது.  அது ஒரு தந்திரம் செய்தது. முட்புதரின் அருகில் தன்னுடைய குஞ்சுகளை  இரை தின்பதற்குப் பயிற்சி அளித்து வந்தது. அவை இரை தின்னும்போது  தாய்க்கோழி உரத்த ஓசை ஒன்றை எழுப்பும். அதனைக்  கேட்டதும் குஞ்சுகள் மின்னல் வேகத்தில் முட்புதருக்குள் சென்று மறைந்து  விடும். இப்படியே தாய்க்கோழி குஞ்சுகளைப் பழக்கி வந்தது. 

ஒருநாள் குஞ்சுகள்  இரை தின்னும்போது கழுகு வேகமாகப் பறந்து வந்தது. அது குஞ்சுகளைப் பிடிக்கச் சென்றது. அதனைக் கவனித்த  தாய்க்கோழி வழக்கம்போல்  உரக்கச் சத்தமிட்டது. குஞ்சுகள் முட்புதருக்குள் சென்றுவிட்டன. வேகமாகப் பறந்து சென்ற கழுகு முட்புதரில் அகப்பட்டுக்கொண்டது. அதிலிருந்து வெளியேறமுடியாமல் அது பட்டினிகிடந்து இறந்து விட்டது. 

                                                                                 - சிகு

 

No comments:

Post a Comment