Sunday, June 5, 2022

 

தமிழ் மாதங்கள் பற்றிய விளக்கம்

 

மனித வாழ்க்கையில் காலம் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறது. காலத்தின் சிறப்பினை இவ்வுலகில் வாழ்ந்த முன்னோர் பலரும் உணர்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையின் அடிப்படையில் காலத்தைப் பிரித்துள்ளனர். இக்காலம் பெரும்பாலும் இயற்கை அமைப்பைப் பொறுத்து அமைந்துள்ளது. இயற்கையின் தன்மையினையும் மாறுபாட்டையும்  உணர்ந்த முன்னோர் அவற்றைப் பல நிலைகளாகப் பகுத்துள்ளனர். இந்தப் பகுப்பின் ஒட்டுமொத்தமே ஆண்டாகக் கணக்கிடப்படுகிறது. ஆண்டினை மாதங்களாகப் பிரித்தனர். மாதத்தை வாரங்களாகவும் வாரத்தை நாட்களாகவும் பிரித்தனர்.

 

நம் முன்னோரும்  காலத்தைக் கணிப்பதில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் வானவியலைப் பற்றி நன்றாகத் தெரிந்துள்ளனர். இதனை அவர்கள் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்துள்ளனர். அவர்கள் சில நட்சத்திரங்களைக் கண்டறிந்து அவற்றிற்குப் பெயரிட்டுள்ளனர். மேலும், அவை எக்காலகட்டத்தில் தோன்றும் எக்காலகட்டத்தில் மறையும் என்பதையும் நன்றாக அறிந்துள்ளனர். பண்டைய இலக்கியங்களில் நட்சத்திரங்களை விண்மீன் என்று குறிப்பிட்டுள்ளனர். குறிபபாக விண் மீனைப் பற்றிய செய்தியினைப் புறநானூறு, அகநானுறு சிலப்பதிகாரம் போன்ற பழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.

 

தமிழ் நாட்டின் கிராமப் பகுதியில் வாழும் மக்களில் பெரும்பாலோர் இன்றும் ஒரு நாளின் காலைப் பொழுது எப்பொழுது தோன்றும் என்பதையும் மாலைப் பொழுது எப்பொழுது வந்து ஒருநாள் முடியும் என்பதையும் வானத்தைப் பார்த்துக் கூறுவர். இவர்களில் பெரும்பாலோர் கடிகார நேரத்தைப் பார்ப்பதில்லை. மேலும்மழை பெய்யத் தொடங்கும் காலத்தையும் மழை பெய்யும் திசையையும் வானத்தைப் பார்த்தே கணக்கிடுவர். 


இயற்கை மாற்றங்களை மனத்தில் கொண்டு இவ்வருடம் செழிப்பு நிறைந்திருக்குமா? நிறைந்திருக்காதா? என்பதையும் முன்கூட்டியே சொல்லிவிடுவர். இதற்கு இவர்கள் அவ்வாண்டில் ஏற்படும் வெய்யில், பனி, குளிர், காற்று போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுவர். இக்கணிப்பு காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை நாம் காணலாம்.

 

மாதங்களின் பெயர் - பொதுவாக வழங்கும் காரணம்

 

பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதைக் கணக்கில் கொண்டு தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த ஒரு முறைக்கு உரிய காலத்தை ஆண்டு என்று பெயரிட்டனர். ஓர் ஆண்டைப் பன்னிரண்டு மாதங்களாகப் பிரித்தனர்.

 

தமிழ் மாதங்கள் பன்னிரண்டு ஆகும்.

 

வரிசை எண்

மாதங்களின் பெயர்

 

வரிசை எண்

மாதங்களின் பெயர்

1

சித்திரை

 

7

ஐப்பசி

2

வைகாசி

 

8

கார்த்திகை

3

ஆனி

 

9

மார்கழி

4

ஆடி

 

10

தை

5

ஆவணி

 

11

மாசி

6

புரட்டாசி

 

12

பங்குனி

 

தமிழ் மாதங்களில் இடம்பெறும் ஆங்கிலமாதங்களும் தேதியும்

 

வரிசை எண்

தமிழ் மாதங்களின்  பெயர்

தமிழ் மாதங்களில் வரும் ஆங்கில

மாதங்களின் பெயரும் தேதியும்

1

சித்திரை

ஏப்ரல் 14 - மே 14

2

வைகாசி

மே 15 – ஜூன் 14

3

ஆனி

ஜூன் 15 - ஜூலை16

4

ஆடி

ஜூலை 17 - ஆகஸ்ட்16

5

ஆவணி

ஆகஸ்ட் 17 - செப்டம்பர்16

6

புரட்டாசி

செப்டம்பர் 17 - அக்டோபர் 17

7

ஐப்பசி

அக்டோபர் 18 -  நவம்பர்16

8

கார்த்திகை

நவம்பர்17 - டிசம்பர் 15

9

மார்கழி

டிசம்பர்16 - ஜனவரி13

10

தை

ஜனவரி14 - பிப்ரவரி12

11

மாசி

பிப்ரவரி13 - மார்ச் 14

12

பங்குனி

மார்ச்15 - ஏப்ரல் 13

 

மிழ் மாதங்களும் பருவநிலையும்

 

தமிழ்மாதங்கள்  பன்னிரண்டை பருவநிலை அடிப்படையாகக் கொண்டு ஆறு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு மாதங்கள் இடம் பெற்றன. இந்த ஆறு பருவங்களும் பெரும் பொழுது என்று என்று பெயரிட்டனர்.

வரிசை

மாதங்களின் பெயர்

பெரும்பான்மைக் காலம்

(பெரும் பொழுதுகள்)

1

சித்திரை, வைகாசி

வெயில் காலம்

 

2

ஆனி, ஆடி

வெயில் காலம்

3

ஆவணி, புரட்டாசி

மழை காலம்

4

ஐப்பசி, கார்த்திகை

குளிர்காலம்

5

மார்கழி, தை

மாலை நேரத்திற்குப் பின் பனி உள்ள காலம்

6

மாசி, பங்குனி

அதிகாலையில்

பனி உள்ள காலம்

 

நம் நாட்டிலும் பெரும்பாலும் இத்தகைய பருவ நிலைகளை நாம் காணலாம்.

தமிழ் மாதங்களின் சிறப்பு:

 

சித்திரை, வைகாசி மாதங்களின் சிறப்பு

 

தமிழ் மாதத்தின் வருடப் பிறப்பு சித்திரை மாதம் முதல் நாள் இடம் பெறுகிறது. தமிழர்கள் இந்நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். உறவினர்களை ஒன்று சேர்க்கும் காலமாக இது இன்றும் தமிழ்நாட்டில் விளங்கிவருகிறது.  சோழர் காலத்தில் இம்மாதம் மிகவும் சிறப்புப் பெற்ற மாதமாக விளங்கியது. 


சிலப்பதிகாரம் என்ற தமிழ் நூல் பௌர்ணமி விழா கடற்கரையில் கொண்டாடப்பட்டதைக் குறிக்கிறது. இக்காலத்தில் வெய்யில் அதிகமாக இருக்கும். அதனால் அம்மை நோய் ஏற்படும். அந்நோயைக் குணப்படுத்த  வேப்ப இலையையும் மஞ்சளையும் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

 

 வைகாசி மாதம் கோடைவிழா நடைபெறும். மக்கள் ஆட்டம் பாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவர். இம்மாதத்தில் தென்றல் காற்று வீசத்தொடங்கிவிடும். மேலும், சாரல் மழை தொடங்கிவிடும். எனவே, கோடையின் வெப்பம் இம்மாதத்தில் தனியத்தொடங்கும். மலைப் பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் சென்று மகிழ்ச்சியாக நீர்விளையாட்டுகளில் ஈடுபடுவர். அப்பகுதிகளில் கிடைக்கும் பழங்களையும் வாசனைப் பொருள்களையும் மருத்துவப் பொருள்களையும் சமையல் பொருள்களையும் வாங்கிவந்து பயனடைவர்.

 

ஆனி, ஆடி மாதங்களின் சிறப்பு

 

ஆனி மாதத்தில் மக்கள் வேளாண்மைத் தொழிலுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வர். இம்மாதத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இடையிடையே மழை பெய்யத்தொடங்கும்.

இது சாரல் மழையாகவும் இருக்கலாம். வயல்களை உழுவதற்கு இம்மாதம் ஏற்றதாக அமையும்.

 

ஆடி மாதத்தில் காற்று மிகவும் அதிகமாக இருக்கும். ``ஆடிக்காற்று அம்மியையும் நகற்றும்`` என்ற பழமொழி ஒன்று இக்காற்றின் வலிமையைக் குறிக்கிறது. இக்காலத்தின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் என்ற நூலில் காணலாம். புதுமணத் தம்பதியினரைப் பெண்வீட்டார் அழைத்து வந்து அவர்களுக்குச் சிறப்புச் செய்வர்.


``ஆடிப்பட்டம் தேடி விதை`` என்ற பழமொழிக்கு ஏற்ப இப்பருவத்தில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவர். வயல்களில் விதை விதைக்கத் தொடங்குவர். புதுவெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றங் கரையில் ஆடிப் பெருக்கு விழா நடைபெறும். குறிப்பாக, காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளின் ஆற்றங்கரைப் பகுதியில் இவ்விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

 

 ஆவணி, புரட்டாசி மாதங்களின் சிறப்பு: 

 

ஆவணி மாதத்தில் மழை அதிகமாகப் பெய்யும். திருமணம் இம்மாதத்தில் நடைபெறும். இது திருமணத்திற்கு ஏற்ற காலமாகக் கணக்கிடப்படுகிறது. இம்மாதத்தின் பருவம் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்ற பருவமாக இருக்கிறது. இப்பருவத்தில் மகிழ்ச்சி அடையும் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்துவர். இயற்கை வழிபாடு இம்மாதத்தில் சிறப்பிடம் பெறுகிறது.

 

ஆவணியில் தொடங்கும் கனத்தமழை இம்மாதத்திலும் பெரும்பாலும் பெய்யும். கண்மாய்களிலும், ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடும். வேளாண்மைத் தொழிலில் அதிகமாக ஈடுபடுவர். 


இயற்கை மூலிகைத் தாவரங்கள் அதிகமாக நிலத்தில் தோன்றும். துளசி, அருகம்புல் போன்றவற்றை மக்கள் தங்களின் தேவைக்குப் பயன்படுத்தத் தொடங்குவர். 

 

ஐப்பசி, கார்த்திகை மாதங்களின் சிறப்பு

 

தொடர்மழை அதிகமாக இருக்கும். மழையின் காரணமாக குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். இம்மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடைபெறும். புதுமணத் தம்பதிகள் தங்களின் புதிய உறவுமுறைகளுடன் தொடர்பு கொள்வர். தீபாவளித் திருநாள் இம்மாதத்தில் நடைபெறும். மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். ஆடு, மாடு போன்ற உயிரினங்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.  அவற்றிற்கு வேண்டிய தீனி எளிதில் கிடைக்கும்.

 

கார்த்திகை மாதத்தில் மழை குறையத்தொடங்கும். இம்மாதத்தில் குளிர் அதிகமாகத் தோன்றும். மக்கள் குளிரின் தொல்லையில் மிகவும் துன்பம் அடைவர். பாம்பு, பல்லி போன்ற உயிரினங்களில் தொல்லை பெருகும். இவற்றை ஒழிப்பதற்கு தீபத்திருநாள் என்று சொல்லப்படும் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடுவர். சிறுவர்களும் பெரியோர்களும் ஒன்றுகூடிக் தீயூட்டி குளிரைப் போக்குவர். இதில் உறவுமுறை வலுப்பெறும் வாய்ப்பும் குழுவுணர்வு பெருகும் வாய்ப்பும் ஏற்படும். 

 

மார்கழி, தை மாதங்களின் சிறப்பு

 

மார்கழி மாதத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். திருப்பாவை திருவெம்பாவை போன்ற இலக்கிய நூல்கள் இம்மாதத்தில் சிறப்பிடம் பெறுகின்றன. இம்மாதத்தின் இறுதி நாளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைபெறும். இந்நாளில் போகிப்பண்டிகை எனப்படும் கழிவுப் பொருள்களைப் போக்கும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தின் சிறப்பினைப் பற்றிக் கூறவந்த கவிஞர் கண்ணதாசன்,

 

``மாதங்களில் அவள் மார்கழி

       மலர்களிலே அவள் மல்லிகை`` என்று அழகாகக் கூறுவார்.

 

தை மாதத்தில் பனி அதிகமாக இருக்கும். ``தை மாதப் பனி தரையைப் பிளக்கும் `` என்பது பழமொழி ஆகும். இம்மாதத்தில் உழவர்களின் வாழ்வு செழிக்கும். வயல்களில் விளைந்த பொருள்களை இல்லங்களுக்குக் கொண்டு வந்து மகிழ்வர். தைமாதத்தின் முதல் நாள் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாகும். 


பெரும் பொங்கல் எனப்படும் தைப்பொங்கல் விழா இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் மறுநாள் மாடுகளுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மூன்றாவது நாள் காணும் பொங்கல் எனப்படும் கன்னிப் பொங்கல் விழா நடைபெறுகிறது. இன்று பெண்களும் உறவினர்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். உழவர்களின் கையில் அதிகமாகப் பணம் புழங்கும். திருமணங்கள் இம்மாதத்தில் நடைபெறும்.

 

மாசி, பங்குனி மாதங்களின் சிறப்பு

 

மாசி மாதமும் பனி காலமாகும். இக்காலத்தில் பெய்யும் பனியினை  இலக்கியங்கள் பின்பனி என்று குறிப்பிடுகின்றன. பின்பனி என்பது காலைப் பொழுதில் பெய்யும் பனியாகும். இப்பனியின் தன்மையை ``மாசிப் பனி மச்சைப் பிளக்கும்`` என்று குறிப்பிடுவர். இம்மாதத்திலும் திருமணங்கள் நடைபெறும். இம்மாதத்தில் உறவினர்கள் ஒன்றுகூடும் விழா நடைபெறும். இவ்விழாவில் குடும்ப உறவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று கடலில் நீராடி மகிழ்வர்.

 

பங்குனி மாதத்தில் வெய்யில் ஆரம்பமாகும். இதனைக்  கோடைகாலத்தின் தொடக்க மாதம் என்றும் கூறலாம். தமிழ்நாட்டில் இம்மாதத்தில் வெய்யில் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள். பெரியோர்களும் முதியோர்களும், சிறிய வர்களும் அவர்கள் பகுதியில் இருக்கும்  பெரிய மரங்களின் அடியில் அமர்ந்து பொழுதை நல்ல முறையில் கழிப்பார்கள். அவர்கள் நமது பண்பாட்டில் இடம்பெறும் ஆடுபுலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டி, கோலி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு சிந்தனையை வளர்த்துக்கொள்வர்.

 

தயாரித்தவர் ஆசிரியர் சி. குருசாமி




No comments:

Post a Comment