Monday, May 30, 2022

 

கதையும் சிந்தனையும்

சர்க்கரைப் பொங்கல்

 

சர்க்கரைப் பொங்கல் என்றால் சந்தானத்துக்கு உயிர். யாரிடம் இனிப்பு இருந்தாலும் சந்தானத்தின் நாக்கில் எச்சில் ஊறிவிடும். இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. குழந்தைப் பருவத்தில் குடிகொண்டது.  

 

உடலில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும்கூட அதனைப் பெரிதுபடுத்தமாட்டார் சந்தானம். முடிந்தவரை மருத்துவரைப் போய்ப் பார்க்க மாட்டார். சின்னச் சின்னப் பிரச்சினைகளை பாட்டிவைத்தியத்தில்  சரி செய்துவிடுவார். சிக்கனத்தின் சிகரம் சந்தானம். அவசியச் செலவுகளையும் ஐந்துதடவை யோசிக்கும் பழக்கம் உடையவர்.  

அவருடைய மனைவி வடிவோ சந்தானத்திற்கு மாறானவர். எப்பொழுதும் கவனமாக இருப்பார். உடல்நோவைப் பொறுத்துக்குக்கொள்ளமாட்டார். உடனே மருத்துவரைச் சென்று பார்ப்பார். உடல் நலம் பெற்றால்தான் அப்பாட என்று பெரு மூச்சு விடுவார்.

உடலைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்வார். கணவனையும் கவனிப்பதில் கெட்டிக்காரி. ஆனால், சந்தானம் வடிவுசொல்வதைப் பொருட்படுத்த மாட்டார்.

உணவுப் பழக்கத்தில்கூட இருவருக்கும் பெருத்த வேறுபாடு. மாறுபட்ட விருப்பங்கள்.  ஆனால் மனம்கோணாமல் புரிந்துநடக்கும் பண்பு மட்டும் அவர்களிடம் இணைந்திருந்தது.  

காலம் உருண்டோடிச் சென்றது. ஏறக்குறைய ஐம்பது வயதைத் தாண்டியது.  எப்பொழுதும்போல் வாழ்க்கைப் பயணம் சென்றுகொண்டிருந்தது. நல்ல உடல்பருமனை உடைய சந்தானத்தின் உடல் ஐஸ்குச்சியில் உள்ள    ஐஸ்          போல மெல்ல மெல்லக் கரைய ஆரம்பித்தது. உடல் மெலிவது நல்லதுக்குத்தான் என்று சந்தானம் மகிழ்ச்சி அடைந்தார்.  

திடீரென்று ஒருநாள் சந்தானத்திற்கு மெல்ல வந்தது மயக்கம். வீட்டில் இருந்த வடிவு பதறிப்போய் ஓடிவந்தார். என்ன என்ன என்று கேட்கும்போது சந்தானம் அமைதியாகக் கையை அசைத்தார்.

புரிந்துகொண்ட வடிவு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்

மருத்துவர் சோதித்துப்பார்த்தார். பயப்படாங்க, அவருக்குச் சர்க்கரையின் அளவு கூடிவிட்டது. அதைச் சரிசெய்துவிடலாம் என்றார்.  வடிவுக்கு மருத்துவரின் பேச்சு ஆறுதலைத் தந்தது. அவரின் அடிமனம் எதையோ சொல்லிக்கொண்டிருந்தது.  

கண்விழித்தார் சந்தானம். மருத்துவர் சொன்னதை மெல்ல மெல்ல சந்தானத்தின் காதில் போட்டுக்கொண்டிருந்தார் வடிவு.

முழுவதும் கேட்காமல் அவ்வளவுதானே என்றார் சந்தானம். இன்னவொன்னும் சொன்னாரு சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது உங்க கையில இருக்குதுன்னு.

வடிவு நீ சொல்றது சரிதான். என்னால எதுவும் முடியும். இனிப்புங்கிறதுனால கொஞ்ச நாளாகும். எனக்குத் தெரியாதா, நான் சின்னப்பிள்ளையா  என்று சந்தானம் கூறியது வடிவுக்கு ஆறுதலாக இருந்தது.  

என்னமோங்க நா சொல்ரத சொல்லிட்டேன் என்று சொல்லிவிட்டுச் சட்டென்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் வடிவு.

அம்மா... மருந்து மாத்திரை வந்து வாங்கிக்கொங்க என்ற குரல் ஓர் அறையிலிருந்து ஒலித்தது. விரைந்துசென்று அவற்றை வாங்கிக்கொண்டு உட்கொள்ளும் முறையையும் கேட்டுக்கொண்டாள் வடிவு.

வழக்கம்போல் ஊர்த்திருவிழாவும் வந்தது. மக்கள் சர்க்கரைப்பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். சந்தானம்தான் முதல் பொங்கலைச் சாப்பிடுவது ஊர் வழக்கம். இப்பொழுதும் ஊர்மக்களின் ஆசை அதுதான், அவர்களுக்குச் சந்தானத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்தின் ஆழ்மன ஆசை நிறைவேறியது.  

மூன்று மாதங்களுக்குப் பின்னர் மருத்துவரைப் பார்ப்பதற்குச் சந்தானத்தை வடிவு அழைத்துச் சென்றார். சந்தானத்தைச் சோதித்துப் பார்த்த மருத்துவர் சர்க்கரையின் அளவு இரண்டுமடங்காகிவிட்டது என்றார்.

மருந்துசாப்பிடுறேன் டாக்டர், இனிப்புப் பலகாரம் நடமாடும்போது மட்டும்தான் நாக்க கட்டுப்படுத்தமுடியல. கொஞ்சங் கொஞ்சங் இனிப்பு,  கூடுதலாக ஒரு சர்க்கரை மாத்திரை போட்டுக்கிடுவேன். அவ்வளவுதான் என்று சொல்லிக்கொண்டே பேச்சை நிறுத்திவிட்டார். அமைதி நிலவியது. ஆறுமாதச்  சிகிச்சைக்குப்பின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் சந்தானத்தை. அங்குச் சந்தானத்தின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளைக் கண்டதும் பொலபொல வென்று கண்ணீர் வடித்தார். 


எழுதியவர் சி. குருசாமி

No comments:

Post a Comment