Monday, May 30, 2022

 


அறிவு ஆக்கத்திற்கே

புத்தகம் என்றாலே பூமிநாதனுக்கு வெல்லப்பாகு. எப்படித்தான் இந்தக் கலை அவனிடம் வளர்ந்ததோ தெரியவில்லை. அவனுடைய பெற்றோருக்கு ஆனந்தம். பாட்டிக்கு அதைவிட மகிழ்ச்சி. தன் பேரன் மிகப்பெரிய ஆளாக எதிர்காலத்தில் வருவான் என்பது பாட்டியின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவனை மிகப்பெரிய அறிவாளியாக மாற்றுவது புத்தகம்தான் என்பது தாத்தாவின் அனுபவ அறிவுக்குத் தெரிந்த விசயம்.  

 உண்மைதானே! விளையும் பயிர் முளையிலே தெரியும்.

பாட்டி அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வார். என்னுடைய அப்பாவைப் போல் பூமிநாதனும் அறிவாளி. அவனுடைய அறிவை மெச்சும்பாட்டி அவனைப் பூமி என்று கூறுவார். என்ன ஆழமான அர்த்தம் அவனுடைய பெயரில்.

பூமிநாதன் ஆசிரியரிடம் அஞ்சாமல் சந்தேகத்தைக் கேட்பான். பின்னர் தனக்குத் தெரிந்த விளக்கத்தையும் சக மாணவர்களுக்குக் கொடுப்பான். ஆசிரியருக்கோ பூமிநாதனை நினைக்கும் தோறும் மட்டற்ற மகிழ்ச்சி. அடேயப்பா என்ன  சிந்திக்கிறாய் பூமி என்று சொல்லி அவனை மனமாரப் பாராட்டுவார். மற்ற மாணவர்களையும் கைதட்டச் சொல்லிப் பரவசம் அடைவார்.  

பெருமையின் உச்சத்தைத் தொட்டது பூமிநாதனின் மனம். அவன் சிந்தனை மாற்றுவடிவம் பெறத்தொடங்கியது. அறிவைக்கொண்டு பிறரை அடக்கி மகிழ்ந்தான். அக்கலையில் தொடர் வெற்றியும் பெற்றான். மற்றவர்களைச்  சிந்தனைத் திறன் குறைந்தவர்கள் என்று எண்ணத்தொடங்கினான். குறைவாக மற்றவர்களை எடைபோட்டு வந்தான்.  

பூமிநாதனின் மனப்போக்கை உணர்ந்தார் அவனுடைய அப்பா கதிரவன். அதனை முளையிலேயே கிள்ளி எறிய நினைத்தார். அவனுக்கு அவ்வப்போது மறைமுகமாக அறிவுரை கூறிவந்தார்.  அது பூமிநானுக்குப் பிடிக்கவில்லை. அவன் தனக்கு யாரும் அறிவுரை சொல்லும் அளவிற்குத் தான் இல்லை என்று நினைக்கத்தொடங்கினான். அதனால் அவர்களிடம் பூமிநாதன் பேச்சைச் சுருக்கினான்.  

சிக்கியவர்களிடமெல்லாம் தற்பெருமை பேசத்தொடங்கினான். அவனிடம் உறவாடிக்கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர்கள்கூட அவனைவிட்டு மெல்ல மெல்ல விலகத் தொடங்கினர். இதனைப் பூமிநாதன் புரிந்துகொள்வதற்கு ஆறுமாத காலம் எடுத்துக்கொண்டது.

 

வழக்கம்போல் பூமிநாதன் தனி அறையில் படுக்கப்போனான், அன்று  அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அப்போது தன்னைப் பற்றியும் தன் நண்பர்களின் நெருக்கத்தைப் பற்றியும் அசைபோடத்தொடங்கினான். அவர்கள் பிரிந்து சென்ற காரணத்தை உணர்ந்தபோது அவனுடைய மனம் வெயிலில் வாடிய மலர்போல வாடியது. கண்ணீர் மெல்ல மெல்ல வடியத்தொடங்கியது.

இப்படியே நாள்கள் பல செல்லாமல் சென்றுகொண்டிருந்தன. பூமிநாதன் தன் நணபர்களிடம் மனம்விட்டுப் பேசவேண்டும் என்று நினைத்தான். தைத்திருநாளும் வந்தது. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அன்று நண்பர்களும் உறவினர்களும் ஒன்றுகூடும் நாள் என்று பாட்டி சொன்ன பழைய செய்தி அவனுக்கு நினைவுக்கு வந்தது.

 

வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றான் பூமிநாதன். நண்பர்கள் விழாக்காலங்களில் ஒன்று கூடும் இடத்திற்கே சென்றான். அங்குச் சென்ற அவன் வாடிய முகத்துடன் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனருகில் நண்பர்கள் இல்லை. தூரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நண்பர்களில் ஒருவன் பூமிநாதனைப் பார்த்துவிட்டான். அவன் உள்ளத்தில் அன்பு கரைபுரண்டோடியது.  நண்பன் அனாதையைப்போல் அமர்ந்திருக்கிறானே, என்று சொல்லிக்கொண்டே பூமிநாதனிடம் ஓடிச் சென்று அவனைக் கட்டி அணைத்தான். அனைவரும் ஓடிவந்தனர். ஒன்றிணைந்தனர்.  

இக்கதையின் மூலம் நம்மிடமிருக்கும் அறிவை ஆக்கப்பூர்வச் செயல்களுக்குத் தான் பயன்படுத்த வேண்டும். அறிவு, ஆபத்து நேரும்போது நம்மைக் காக்கும் கருவியாகத்தான் இருக்க வேண்டும். அதனை மற்றவர்களின் மனத்தைப் புண்படுத்தவோ மற்றவர்களை உதாசிணப்படுத்தவோ ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதனால்தான் திருவள்ளுவர், அறிவு அற்றம் காக்கும் கருவி என்று கூறியுள்ளார் என்பதை நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.  


எழுதியவர்  ஆசிரியர் சி.  குருசாமி

No comments:

Post a Comment