Wednesday, July 11, 2012




சுயவிடைக் கருத்தறிதல்   (25 மதிப்பெண்கள்)



பின்வரும் கட்டுரைப் பகுதியைக் கருத்தூன்றிப் படித்து, அதனடியிற் காணும் வினாக்களுக்கு உம் சொந்த நடையில் விடை தருக:  



 மனிதனிடம் பல பண்புகள் நிறைந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை விடாமுயற்சியும், பொறுமையும் ஆகும். இவை இரண்டும் இரண்டு கண்கள் போன்றவை. எனவே, இந்தப் பண்புகளை நாம் நிச்சயம் பெற்றுவிட முயலவேண்டும். எல்லாருக்கும் இப்பண்புகள் பொதுவானவை. ஆனால், எல்லோரிடமும் இவை அமைந்திருக்கும் என்று சொல்லமுடியாது. இவற்றைப் பெறுவதற்கு நாம் இளமைப் பருவம் முதல் நன்கு முயற்சி செய்யவேண்டும். `முயன்றால் முடியாதது இவ்வுலகில் ஒன்றுமில்லை` என்பது நம் முன்னோர் வாக்கு. 


ஒருசிலர் விடா முயற்சியையும் பொறுமையையும் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை. இதற்குக் காரணம் அவர்களிடம் அமைந்திருக்கும் அவசரத் தன்மை ஆகும். ஓர் இலக்கை அமைத்துக்கொண்டு அதை மிகவிரைவில் அவர்கள் அடைய நினைப்பார்கள். இலக்கை அடைய பல படிநிலைகளைக் கடந்து செல்லவேண்டும். அப்போது சில தடைகள் ஏற்படும். அந்தத் தடைகளைக் கடப்பதற்கு விடா முயற்சியும் பொறுமையும் அவசியம் தேவைப்படும் என்பதைக் கட்டாயம் உணரவேண்டும்.  இவை இரண்டையும் கடைப்பிடிக்கப் முடியாமல் போவதால் அவர்கள் அடைய விரும்பும் இலக்கைக் கைவிட்டு விடுவார்கள். அப்போது தம் நிலைமையை நினைத்து மனம் வருந்துவார்கள்.


இலக்கை கைவிட்டுவிட நினைப்பவர்கள் முதலில் தங்களின் மனப்போக்கை மாற்ற முயற்சி செய்யவேண்டும். அதற்கு அவர்கள் `என்னால் முடியும்` என்ற உடன்பாட்டு எண்ணத்தை உள்ளத்தில். வளர்த்துக்கொள்ளவேண்டும். இது மட்டுமிருந்தால் போதாது இலக்கை அடைவதற்குரிய வழிமுறைகளைக் கண்டறியவேண்டும். ஆரம்பத்தில் இலக்கை அடைவதற்குரிய சிறிய சிந்தனை எண்ணத்தில் தோன்றினாலும் அதனை அடிப்படையாகக்கொண்டு இலக்கின் முதல் படியை அடையலாம். இப்படியே படிப்படியாக முயலும்போது நிச்சயம் நமது இலக்கை அடைய முடியும். நாம் நம்முடைய இலக்கை அடையும்போது மனத்தில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படுவதோடு. நம்முடைய வாழ்க்கைத் தரமும் உயரும்.  ஒருவருடைய வாழ்க்கைத் தரம் உயரும்போது சமுதாயம் அவருக்கு உரிய மரியாதையை அளிக்கும். அவர்கள் காலப்போக்கில் சமூகத்தில் உயர்ந்த பங்கை வகிக்கும் சூழல் உருவாகும்.

 சமூகத்தில் ஒருவர் உயர்ந்த தகுதியைப் பெறவேண்டுமானால் மாணவப் பருவத்தில்  கடமையில் கண்ணும் கருத்துமாகத் திகழவேண்டும். ஆசிரியர்கள் அவ்வப்போது கொடுக்கும் வீட்டுப் பாடங்களையும் பள்ளிப் பாடங்களையும் செய்து முடித்திடவேண்டும். நாளை இப்பணியைச் செய்திடலாம் என்று நாம் ஒருபோதும் எண்ணக்கூடாது. ஒருவேளை நம்மால் சில நாள்கள் நம் பாடத்தைச்  செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால் நாம் அதனையும் சேர்த்து மிகவிரைவில் முடித்திடப் பாடுபடவேண்டும். இம்முறையினைப் பின்பற்றினால்தான் நாம் மாணவப் பருவத்திற்குரிய இலக்கை அடைய முடியும். அது பிற்காலத்தில் நம் வாழ்க்கை இலக்கினை அடைவதற்கு அடித்தளமாக அமையும்.



வினாக்கள்:



(Q1)
எவற்றை நாம் அடைந்துவிடுவது நல்லது? ஏன்?                                   
                                                 (5மதிப்பெண்கள்)                                         
(Q2)
எப்போது பிரச்சினைகளைச் சந்திக்கும் சூழல் உருவாகும்?              
                                              (5மதிப்பெண்கள்)

(Q3)
நம் உள்ளம் கவலை அடையாமல் இருப்பதற்கு  என்ன
செய்யவேண்டும்?                                         (5திப்பெண்கள்)
                                                     
(Q4)
எல்லோராலும் சமுதாயத்தில் முக்கிய இடத்தைப் பெறமுடியாமல் போவதற்குக் காரணம் என்ன?                  
                                                  (4மதிப்பெண்கள்)             
                              
(Q5)
மாணவப் பருவத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை எவை?
                                                  (6மதிப்பெண்கள்)
                                            
பின்வரும் சொற்கள் மேற்கண்ட பகுதியில் இடம்பெற்றுள்ளன. அச்சொற்களின் பொருளை விடைத்தாளில் எழுதவும்.


   

(Q6)
பெறுவதற்கு                                          (1 மதிப்பெண்கள்)
(Q7)
தன்மை                                               (1 மதிப்பெண்கள்)
(Q8)
எண்ணத்தை                                           (1 மதிப்பெண்கள்)
(Q9)
தரம்                                                  (1 மதிப்பெண்கள்)
(Q10)
திகழவேண்டும்                                         (1 மதிப்பெண்கள்)

முற்றும்






No comments:

Post a Comment