Thursday, September 2, 2010

சிறுகதை
கருப்பொருள் - உறவுகள்
அடியிற்கானும் பனுவலைப் படித்து வினாக்களுக்கு விடை கூறுக.

பிஞ்சுக் கால்கள்
`அத்தே சிங்கப்பூருக்கு வந்து ரெண்டு நாளாச்சு இன்னைக்கு நம்ம வெளிய போவோமா?` என்று ஆவலுடன் கேட்டாள் வாணி. `ம் போகலாம்` என்று கோமதி பதில் கூறியதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் வாணி.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தன் அண்ணன் வீட்டிற்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் கோமதி சோர்வுடன் இருப்பதைத் தன் மதிநுட்பத்தால் புரிந்துகொண்டாள் வாணி.


`நம்ம தங்கியிருந்த குடியிருப்புப் பேட்டையிலிருந்து இப்பப் பாக்கப்போற செந்தோசா வரை எத்தனையோ மாற்றம் .. நீங்க ஆச்சரியப் படுவீக அத்தே` என்று கூறிக் கொண்டே அத்தைக்கு மிகவும் பிடித்தமான ஆரஞ்சுப் பழத்தை நறுக்கித் தட்டில் வைத்து உண்பதற்கு அன்புடன் கொடுத்தாள் வாணி. இருவரும் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

`அத்தே இதோ நாம செந்தோசாத் தீவுக்கு
வந்துட்டோ..ம்.` என்று வாணி கூறியவுடன் கண்ணைக் கவரும் கட்டடங்களைக் கண்ட கோமதி மலைத்துப் போனாள்.

இருவரும் மதிய உணவை ஒரு விடுதியில் உண்டபின், `அத்தே நம்ம இப்பக் கடலுக்குப் பக்கத்தில போயி தண்ணீல விளையாடுற பிள்ளைகள பாப்போமா?` என்று கூறியதும் கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது. கண்ணீர் முத்துமுத்தாக வடியத்தொடங்கியது. அவள் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பியதை உணர்ந்த வாணியின் அகம் வாடியது.

ரிங்.. ... ரிங்.. ... `இந்த நேரத்தில யாரு` என்று கூறிய கோமதி தொலைபேசியில் பேசத்தொடங்கினாள், சுவையான செய்தி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கும் குரல், `என்ன அக்கா எப்படி இருக்க .... `

என்று வெளிநாட்டில் வசிக்கும் தன் பள்ளித் தோழி பானுவுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.

கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்குத் திடீரென மின்னல் வேகத்தில் ஓடினாள். அவள் அய்யோ அய்யோ என்று அலறும் சத்தம் வீட்டில் வெடித்தது.

பிஞ்சுக் கால்கள் மட்டும் கண்களுக்குத் தென்பட்டன. ஒருவயது அன்பு மகள் எழிலி குளியல்தொட்டியில் தலைகீழாக இருப்பதைக் கண்டாள், கதறினாள், மார்போடு அணைத்தாள்; வெப்பத்தை உணர்ந்தாள்; பெருமூச்சு விட்டாள்!

அவள் கதறிய காட்சி கோமதியின் கண்ணுக்கு மீண்டும் மீண்டும் வந்தது.
வாணியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் .

(அ) வினாக்கள்

1 வாணியின் சந்தோசத்திற்கு என்ன காரணம்?

2 வாணி எதனைப் புரிந்துகொண்டாள்?

3 வாணியின் அத்தைக்கு மிகவும் பிடித்தமானது எது?

4 வாணியின் விருந்தோம்பல் பண்பைக் கதையின் மூலம் விளக்குக.

5 கோமதி மற்றவர்களிடம் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ளும் குணம்படைத்தவள் என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்?

6 `கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது` இதன் விளக்கம் என்ன?

7 ``கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்கு மின்னல் வேகத்தில் ஓடினாள்`` இவ்வரியின் மூலம் நீ அறிந்துகொள்ளும் செய்தி யாது?

8 ``பிஞ்சுக் கால்கள்`` என்று கதை ஆசிரியர் கூறிய தொடருக்கு நீ என்ன விளக்கம் தர விரும்புகிறாய்?

9 கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?

10 குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தைப் போல் நீ எப்போதாவது கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா? எங்கே? எப்படி?

11 நீ பழங்களை விரும்பி உண்பாயா? ஏன்?

12 உனக்குப் பிடித்த உணவு எது? ஏன்?

`ஆ` பிரிவு

1 ``பிச்சுக் கால்கள்`` என்ற கதையைப் படித்த பின்னர் உங்கள் குழுவினரோடு சேர்ந்து கதை ஒன்று உருவாக்கிப் படைத்துக் காட்டுக.

2 கதையைப் படித்த பின்னர் குழுவினரோடு சேர்ந்து அதனை நாடக வடிவமாக்கி நடித்துக்காட்டுக.

3 கீழே சில சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை வரிசைப் படுத்தும்போது பொருள் நிறைந்த வாக்கியம் ஒன்று உருவாகும். நீங்கள் உருவாக்கும் அந்த வாக்கியத்திற்கும் இக்கதைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை விளக்கிக் கூறுக.

நிகழ்வுகளை, குறைந்துவிடும், ஈடுபடும்போது, அக்கம் பக்கத்தில், அறிந்துகொள்ளும், ஒருசெயலில், தன்னை, மறந்து, நடைபெறும், ஒருவர், இயல்பாகக், வாய்ப்பு

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் திருக்குறளில் உள்ள சொற்கள். அவை மாறி அமைந்துள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி இக்கதையோடு தொடர்பு படுத்திப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முயற்சி, புகுத்தி விடும், முயற்றின்மை, திருவினை யாக்கும், இன்மை.
(குறள் எண் 616)



`இ` பிரிவு

பாடத்தொடர்ச்சி (வீட்டுப்பாடம்)

1 கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருளைக் கண்டறிந்து பகிர்ந்துகொள்க.

ஞாலம் கருதினும் கைகூடும்
காலம் கருதி இடத்தாற் செயின்.
( குறள் எண் 484

2 அகராதியைப் பயன்படுத்திக் கீழ்காணும் சொற்களுக்குப் பொருள் கண்டுபிடித்து வாக்கியம் உருவாக்குக.

1 மதிநுட்பம்
2 பிடித்தமான
3 முத்துமுத்தாக
4 அகம்
5 தென்பட்டன

1 comment:

  1. கட்டுரை 5
    முன்னுரை மற்றும் முடிவுரை
    "எதிர்பாராததை எதிர்பாரு'' என்று ஆங்கிலத்தில் இருக்கிறது. இதுதான் எனக்கு நடந்தது. அது மிகவும் எதிர்பாராதது ஆகும். நான் அப்பொழுது சரியான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் நான் இறந்து கூட போயிருப்பேன். என் உயிரை காப்பாற்ற ஒருவர் வந்தார். அவரை நான் என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்.
    முடிவுரை
    அந்த சம்பவம் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து இருந்தது. ஆனால் நான் அன்று இரண்டு பாடங்களை கற்றுக்கொண்டேன். எப்போதும் மற்றவர்களை பகைத்துக்கொள்ள கூடாது மற்றும் எப்போதும் ஒரு கைதொளைப்பெசியை கொண்டு செல்ல வேண்டும்.

    ReplyDelete