Monday, July 27, 2009

கதையும் கருத்தும் – புரிதல்!

கதையும் கருத்தும் – புரிதல்!

முத்துவும் அவருடைய நண்பர்களும் சிறுபிள்ளையாக இருக்கும்போது ஒரே வட்டாரத்தில் வசித்து வந்தனர். அவர்களுடைய பெற்றோர் வறுமையில் வாடினர். அதனால், அவர்களைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்தனர். அங்கு முத்து இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து நேர்மையாகச் செயல்பட்டார். எனவே, தொழிற்சாலையின் முதலாளி முத்துவைப் பொருள்களின் தரத்தை முடிவு செய்யும் குழுவில் ஓர் உறுப்பினராக நியமனம் செய்தார். நாளடைவில் முத்துவுக்குப் பதவி உயர்வும் அதிகச் சம்பளமும் கிடைத்தன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு முத்துவின் முதலாளி விபத்தில் மரணம் அடைந்தார். அதன்பின்னர் முதலாளியின் மகன் கதிரேசன் அத்தொழிற்சாலையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கதிரேசனுக்கு அத்தொழிற்சாலையை நிர்வாகம் செய்த அனுபவம் இல்லை. இருப்பினும், அவர் தொழிற்சாலையின் உற்பத்தியைப் பெருக்க எண்ணினார்.

கதிரேசன் தன் தொழிற்சாலையில் இளையர்கள் பணி புரிந்தால் நலமாக இருக்கும் என்று நினைத்தார். அதனால், அவர் வயதுமிகுந்த முத்துவையும் அவருடைய நண்பர்களையும் வேலையிலிருந்து நிறுத்தினார். கதிரேசன் புதிய பணியாளர்களை அவ்வேலைக்கு அமர்த்தினார். புதிய பணியாளர்களுக்கு அனுபவம் குறைவாக இருந்ததால் சம்பளம் குறைவாகக் கொடுத்தார்.

முத்துவும் அவருடைய நண்பர்களும் தம் திறமைகள் வீணாகப்போவதை விரும்பவில்லை. அதனால், பக்கத்திலுள்ள தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தனர். கதிரேசனின் தொழிற்சாலையில் உற்பத்தியின் அளவு பெருகியதே தவிர அவை தரத்தில் குறைந்து இருந்தன. பொருள்களை விற்க முடியவில்லை. காலப்போக்கில் தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கியது. இதனை நடத்துவதற்குக் கதிரேசன் ஏற்கனவே வங்கியில் கடன் வாங்கியிருந்தார். அவர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். அந்நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த நண்பனின் உதவியை நாடினார். அவருடைய நண்பர் தொழிற்சாலையை நடத்துவதற்கு வேண்டிய வழிமுறைகளை வழங்கினார்.

கதிரேசன் தம் நண்பரின் ஒத்துழைப்புடன் தொழிற்சாலையில் பல மாற்றங்களைச் செய்தார். அதன்பின்னர் தொழிற்சாலையில் அதிக லாபம் கிடைத்தது. அப்போதுதான் கதிரேசன் ஒரு தொழிற்சாலையை நடத்துவதற்கு அனுபவமும் திறமையும் தேவை என்பதைப் புரிந்து கொண்டார். மேலும், அனுபவம் பெறுவதற்குப் போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார்.

பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப்பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து அதன் எண்ணை அடைப்புக் குறியினுள் எழுதுக. (10 மதிப்பெண்கள்)


Q1 நேர்மையாக உழைத்த முத்துவுக்கு முதலாளி என்ன
கொடுத்தார்?

1 பதவி உயர்வு கொடுத்தார்
2 அதிகச் சம்பளம் கொடுத்தார்
3 அங்கத்தினராக நியமனம் செய்தார்
4 தொழிலாளர்களின் பிரதிநிதியாக நியமனம் செய்தார்

( )


Q2 கதிரேசன் முதலில் எண்ணியது யாது?

1 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டுமென்று
2 தொழிற்சாலையைப் பெரிய நிறுவனமாக்க வேண்டுமென்று
3 தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்று
4 தொழிற்சாலைக்குப் புதிய ஆட்களைச் சேர்க்க
வேண்டுமென்று
( )

Q3 மூத்த தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு வேலைக்குச்
செல்லக் காரணம் என்ன?

1 அவர்கள் புதிய சூழலை விரும்பியதால்
2 அவர்கள் வேலையை இழந்துவிட்டதால்
3 அவர்கள் அதிக ஊதியம் பெற நினைத்ததால்
4 அவர்கள் ஆற்றல் பயனற்றுப்போவதை விரும்பாததால்
( )

Q4 தொழிற்சாலை ஏன் நஷ்டம் அடைந்தது?

1 பொருள்களை விற்க முடியாததால்
2 பொருள்களின் தரம் குறைந்திருந்ததால்
3 பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்ததால்
4 பொருள்களின் விலை அதிகமாக இருந்ததால் ( )

Q5 கதிரேசனின் பிரச்சினை எப்போது தீர்ந்தது?

1 நண்பன் வருகை தந்தபோது
2 தொழிற்சாலையின் கடன் தீர்ந்தபோது
3 நண்பனின் சொல்லைக்கேட்டு நடந்தபோது
4 தொழிலாளர்களைப் பயிற்சிக்கு அனுப்பியபோது
( )

************************************************************************************************************************************************

No comments:

Post a Comment