Sunday, July 19, 2009

ஒருபக்கக் கதை - தலைப்பைப் பற்றிக் கலந்து பேசுக.

ஒருபக்கக் கதை - தலைப்பைப் பற்றிக் கலந்து பேசுக.

`அப்பா.. . அப்பா இதோ இந்தியச் சாப்பாட்டுக்கடை` என்று ஆவலாகச் சொன்னான் அமுதன். `உன் கண்ணுக்குத்தான் பட்டுன்னு எதுவும் தென்படும்` என்று சொல்லி அமுதனைப் பாராட்டினார் அழகேசன்.

`சரி சரி பேசிக்கிட்டே இருந்தேங்கன்னா வண்டி இந்த இடத்தைத் தாண்டிரும்` என்று கூறினாள் மனைவி மீனா. `ப்ளீஸ் ஸ்டாப்` என்று ஆங்கிலத்தில் அழகேசன் அன்பாக அந்த வாடகை உந்து ஓட்டுநரிடம் கூறினான். அருகில் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கினர். `நல்ல வேளை இன்னும் ஒரு சிக்னல் இருந்தா மீட்டர் ஒரு வெள்ளி கூடக்காட்டிரும்` என்றான் அமுதன்.

பைகளை எடுத்த மாத்திரத்தில் மூன்றாவது மாடியிலுள்ள உணவுவிடுதியின் உள்ளே நுழைந்தனர். விடுதியின் உரிமையாளர் இந்திய முறைப்படி ஏதோ ஒருமொழியில் வணக்கம் கூறி அமரும் இடத்தை ஒதுக்கிக்கொடுத்தார்.

மூன்றுநாள் ஏக்கத்தைத் தீர்ப்பதற்கு உணவுப்பட்டியலை விரித்தபோது அப்பளம் வந்துவிட்டது. `இது வடநாட்டு அப்பளம் மிளகு சற்றுத் தூக்கலாக இருக்கும் உடலுக்கு நல்லது` என்று அழகேசன் கூறினார்.

`உணவு அரைமணி நேரத்தில தயாராயிரும்` என்று வேலையாள் தமிழில் சொல்லிவிட்டுத் தென்னாட்டு வெங்காய வடகத்தை வேண்டுமளவு அழகிய மூங்கில் கூடையில் வைத்துச் சென்றார். `இது உங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்` என்று சொல்லி முடித்தாள் பெற்றோரின் எதிரில் அமர்ந்திருந்த மேனகா.

உணவில் தமக்கு மிகவும் பிடித்த முளைப்பயற்றாலான கூட்டைச் சுவைத்துச் சாப்பிடும்போது பளிச்சென்று நினைவுக்கு வந்தது மினி சூட்கேஸ். அதை அமுதனிடம் கொடுத்து வண்டியில் இருக்கையின் பின்பக்கத்தில் பத்திரமாக வைக்கச் சொன்னாள். இது பற்றி உடனே சொல்லாமல் அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தாள் மீனா.

`என்னங்க.. நம்ம அமுதங்கிட்ட கொடுத்த சூட்கேஸை வண்டியில மறந்து விட்டுட்டோமே அதிலதான நம்ம பாஸ்போட்டும் மீதப் பணமும் இருக்கு, இப்ப என்னங்க செய்றது. வண்டி நம்பரும் தெரியல. மொழி தெரியாத ஊர்ல யார்ட்ட சொல்ல` என்று கண்ணீர் ததும்பக் கூறினாள் மீனா.

`நீ பயப்படாத
இப்ப ஒன்னும் கெட்டுப்போகல நம்மமொழி தெரிஞ்ச இந்தப் பையன்ட இதப்பத்திக் கேப்போம்` என்று அவர் சொல்லியபோது இருவரின் கனத்த மனத்தைக் கரைத்தது அவனின் ஆறுதல் மொழி.

அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியே வந்தபோது இரண்டு மணி நேரம் சென்றதை அறிந்து வருந்தினர். கடையின் அருகில் வாடகை வண்டிக்காகக் காத்திருந்தபோது மூன்று வண்டிகள் நிற்காமல் சென்றபின் ஒரு வண்டி வந்து நின்றது. அதைக் கண்டபோது அனைவரின் மனமும் குளிர்ந்தது.

உரிமை: ஆசிரியர் சி. குருசாமி

No comments:

Post a Comment