Wednesday, May 21, 2014

கட்டுரை - மனிதர்களிடம் காலங்காலமாக இருந்துவரும் பண்புக்கூறுகளை விளக்கி எழுது.  

நம் முன்னோர்கள் நாம் சிறப்புடன் வாழ்வதற்குரிய வழிமுறைகள் சிலவற்றை வகுத்துச் சென்றுள்ளனர். அவற்றில் சிறந்த சிலவற்றை இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம். அவற்றை விழுமியங்கள் என்று கூறுகிறோம். அன்பு, இரக்கம், பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, உதவும் தன்மை, பிறருக்காக வாழும் குணம், பொறுப்புள்ள குடிமகனாக வாழ்தல், சிறந்த பண்புகளைப் பெற்றிருத்தல், அக்கறை, நாணயம், அமைதி, சுயமதிப்பை உணர்தல்,  மற்றவருக்குரிய மதிப்பை அளித்தல் போன்றவற்றை விழுமியங்கள் என்று கூறலாம். இவ்விழுமியங்கள் நம் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கும் நாம் நிலைத்த புகழைப் பெறுவதற்கும் மிகவும் உதவிசெய்கின்றன.

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை முடிவு செய்வதற்கு அவரிடம் இருக்கும் விழுமியங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. சிறந்த பண்புகளை நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே வளர்த்துக்கொள்ளவேண்டும். நம்மிடம் விலங்குகளுக்குரிய பண்புகள் சில இருக்கும். எடுத்துக்காட்டாக இவ்வுலகில் ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன. அவை வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை, மாறுபட்ட பண்புகளை உடையவை. பெரும்பாலான விலங்குகள் உணவுக்காக நாள்தோறும் போராடி உயிர் வாழ்கின்றன. அவை சிந்திக்கும் திறன் பெற்றவை. ஆனால், சிந்தித்த கருத்துகளைப் பற்றிப் பகுத்தறியத் தெரியாதவை. அவற்றுள் ஆடு, மாடு போன்றவை மனித இனத்திற்கு மாபெரும் நன்மையைச் செய்து வருகின்றன. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள்கூட இவற்றின் பாலை மருத்துவரின் ஆலோசனையின்படி நாள்தோறும் குடித்துவந்தால் மிகவிரைவில் குணமடைந்துவிடும் வாய்ப்பு ஏற்படும்.

      உயிர்ச்சத்தினை அளிக்கும் பாலை நமக்கு அளிக்கும் தன்மையுடையதாகப் பசு இருக்கிறது. அது தன் வாழ்க்கையை மனித இனத்திற்கு அர்பணித்துவிடுகிறது. இத்தகைய பண்புகளை உடைய மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கின்றனர். பசுவிடம் இருக்கும் நல்ல பண்பினை நாம் கடைப்பிடிக்கும்போது உயர்ந்த விழுமியங்கள் நம் உள்ளத்தில் குடிகொள்ளும்.  

     சிங்கம், புலி போன்ற விலங்குகள் வலிமையும் ஆற்றலும் உள்ளவை. அவை பிறந்த சில மாதங்களில் அங்குமிங்கும் ஓடியாடித் தன்னம்பிக்கையுடன் தமக்கு வேண்டிய உணவினை வேட்டையாடி வாழ்கின்றன. அவை எதிரியை நேரில் சந்தித்துப் போராடும் குணம் படைத்தவை. ஓநாய். கரடி, நரி போன்றவை வஞ்சக உணர்வு உள்ளவை. மற்ற உயிரினங்களையும் அவை வேட்டையாடிய உணவினையும் எளிதில் அபகரித்துக் கொள்பவை. இவற்றில் நரி வேட்டையாடும் விலங்குகளிடம் விளையாடி அவற்றைக் கொன்று தின்னும் குணம் படைத்தது. இது வலிமை பெற்ற சிங்கத்தைக்கூடத் தந்தரத்தால் கொல்லும் ஆற்றலுடையது. இதனை வஞ்சகக் குணம் உள்ள விலங்கு என்று விலங்கியல் துறையினர் பிரிப்பர். எனவே மனிதர்கள் வஞ்சக உள்ளம் உடையவர்களாக இருக்கக்கூடாது.

நாம் குழந்தைப் பருவம் முதல் பெரியோர்கள் கூறும் அறிவுரைகளைக் கட்டாயம் கேட்டு நடக்கவேண்டும். நம்முடைய நண்பர்களும் சிறப்புடன் வாழ்வதற்கு நாம் வழிகாட்டுவதோடு அவர்கள் சிறுசிறு தவறுகள் செய்தால் அத்தவற்றினை மன்னிக்கும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். இதனால்தான் வள்ளுவர்
                                            ``இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண                                                                
                                              நன்னயம் செய்து விடல்''.       

என்று கூறியுள்ளார். இத்தகைய பண்புகளை நாம் பெருக்கிக்கொள்ளும்போது மனித உறவு வலுப்பெறும். அத்துடன் நாம் உயர்வடைவதோடு நம்மைச் சார்ந்திருக்கின்ற சமூகமும் உயர்வடையும்.  

No comments:

Post a Comment