Wednesday, July 17, 2013

கவிதை வளம்

இலக்கியம்2
தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி

இலக்கிய நயம் பாராட்டுதல்

இலக்கியம் என்பது மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை மனித இனத்திற்குக் கற்றுக்கொடுக்கும் கருவியாக விளங்குகிறது. அதாவது மனிதர்கள் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான பல இலக்குகளை (கொள்கைகளை, கோட்பாடுகளை) மனிதர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்குவது இலக்கியம் ஆகும். இலக்கியத்தில் கூறும் உண்மைகளைத் தெரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொள்வார்கள் என்பது திண்ணம்.

தமிழ் இலக்கியம் மிகவும் பரந்து விரிந்து இருக்கிறது. சங்க காலத்தில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் அதிகமாகக் காணப்பட்டன. இதன் தொடர்ச்சியை இன்றும் நாம் காணலாம். இலக்கியச் சுவையை உணரும் திறனை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அந்த நோக்கில் மிக எளிய வரிகளில் படித்தவர்கள் உள்ளத்தைத் தொடும் வண்ணம் அழகாகப் பாடல் ஆசிரியர் _________________படைத்துள்ளது மிகவும் போற்றத் தக்கதாகும்.



இலக்கிய நயம் பாராட்டுதல்

இலக்கிய நயம் பாராட்டும்போது கவனிக்க வேண்டியவை

1.    வினாத்தாளில் கொடுக்கப்பட்ட பாடலை இரண்டு மூன்று முறை பொருள் விளங்கும்வரை படித்துப் பார்க்க வேண்டும்

2.    கடினமான சொற்களை அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும்

3.    கடினமான சொற்கள் எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

4.    சொல்லுக்குச் சொல் பொருள் பார்க்க வேண்டிய கட்டாயமில்லை

5.    முதலில் பாடலின் திரண்ட கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்

6.    பாடல் எந்தச் சூழலில் பாடப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும்

7.    பாடலின் கருப்பொருளைக் கவனிக்க வேண்டும்

8.    தொடர்புடைய பாடலை நினைவில் கொண்டு தொடர்பு படுத்தலாம்

9.    நிகழ்கால நிகழ்வுகள், தொடர்புடைய சம்பவங்கள், செய்தித்தாள், வார மாத இதழ்கள் போன்றவற்றில் இடம்பெற்ற செய்திகள்  பாடலுடன் தொடர்புடையவையாக இருப்பின் சுருக்கமாகத் தொடர்பு படுத்தலாம்

10.  நாம் எழுதும் கருத்துகள் படிப்பவர் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்

11.  பிழையின்றி எழுத முயற்சி செய்ய வேண்டும்

12.  நீண்ட வாக்கியங்களில் எழுதுவதைத் தவிர்க்கலாம்

13.  புரியாத சொற்களைப் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது

14.  பாடலில் குறிப்பிட்டுள்ள கருத்தைத் தெளிவாக எழுத வேண்டும்

15.  பாடலில் ஆழமான பொருளுடைய சொற்கள் இடம்பெற்றால் அவற்றின் பயன்பாட்டினை விளக்கி எழுதலாம்

16.  ஒரே சொல் இரண்டு பொருள்பட எழுதியிருந்தால் இரண்டுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் (படி கவிதை)

17.  பாடலில் அமைந்துள்ள தொடை நயத்தை (பாடலில் அமைந்துள்ள தொகுப்பு முறை - எதுகை, மோனை, முரண்) விளக்கலாம்

18.  அணிகள் பற்றிய குறிப்புகள் பாடலில் அமைந்திருந்தால் அவற்றையும் எழுத வேண்டும்

திரண்ட கருத்து

பாடலை இரண்டு மூன்று முறை படிக்கும்போது நாம் உணரும் கருத்தினை விளக்கமாக எழுத வேண்டும்

பொருள் நயம் (நயம் என்பது அழகு, சிறப்பு, உயர்வு என்ற பொருளில் வரும்)

பொருள் நயம் என்பது பாடல் வரிகளை ஆசிரியர் கையாண்டுள்ள சிறந்த வழிமுறையைக் குறிக்கும். பாடல் ஆசிரியர் உடன்பாட்டில் கூறும் செய்திகளை உடன்பாட்டிலும் எதிர்மறையில் கூறும் செய்திகளை எதிர்மறையிலும் கூறுவதும் ஒரே பாடலில் உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறுவதும் நயம் ஆகும். பாடலில் பொருள் மிகவும் நயமாக அமைந்திருக்குமானால் அது பொருள் நயம் உடைய பாடல் ஆகும். சொல்ல வேண்டிய கருத்தைச் சுருக்கமாகவும் எளிமையாகப் புரியும் படியும் விளங்க வைப்பது பொருள் நயமாகும்.

தொடை நயம்

தொடை என்பதன் பொருள் தொகுத்தல் ஆகும். அதாவது தனித் தனியாகக் கிடைக்கும் பூக்களை ஒன்றாகச் சேர்த்து மாலையாகத் தொடுப்பதைப் போல் தனித் தனியாக இருக்கும் சொற்களைப் பாக்களாக மாற்றுவதற்குப் பொருத்தமான முறையைக் கையாண்டு தொகுப்பதைத் தொடை என்று கூறலாம். தொடை நயம் என்பது பாடலில் அமைந்துள்ள சொற்களின் அடுக்கு முறைச் சிறப்பைக் குறிக்கும். தொகுத்தல் முறை பல வகைப்படும்.

மோனைத் தொடை

ஒரு பாடலில் அமைந்துள்ள சீர்களிலும் அடிகளிலும் முதல் எழுத்து ஒன்றி (ஒன்றுபோல்) வருமாறு தொகுத்தல் மோனையாகும்

ண்ணன் சுட்ட தோசை
ன்பு நிறைந்த தோசை

இங்கு முதல் சீரின் (சொல்லின்) முதல் எழுத்தும் இரண்டாவது அடியின் முதல் சீரில் உள்ள முதல் எழுத்தும் ஒன்றி வந்துள்ளதால் இது மோனைத் தொடையாகும்.

எதுகைத் தொடை

ஒரு பாடலில் அடிகளிலும் சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும்படி தொகுத்தல் எதுகைத் தொடையாகும்.

வீðடில் பூனை வளர்க்க நினைத்தேன்
பாðடில் அதனை வடித்து நின்றேன்

முரண் தொடை

முரண் என்பது எதிர் என்ற பொருளைக் குறிக்கும். அதாவது ஒரு பாடலில் எதிர்ச் சொற்கள் அமைந்திருப்பின் (இருள்- ஒளி, அகம் புறம், உள்ளே - வெளியே, கருப்பு - வெள்ளை, இளமை முதுமை) அதனை முரண் தொடை அமைப்பில் அமைந்த பாடல் என்று கூறுவர்.

நல்ல உள்ளம் கொண்டவர்
கெட்ட மனம் திறந்தவர்

அணி நயம்

அணி என்பதன் பொருள் அழகு ஆகும். ஒரு பாடலுக்கு அழகு சேர்க்கும் கருவியாக அணி நயம் விளங்குகிறது. இலக்கியத்தில் அணி இலக்கணம் மிகச் சிறந்த இடத்தைப் பெறுகிறது. தண்டியலங்காரம் என்ற நூல் அணிகளுக்கு இலக்கணம் கூறுகிறது. உவமை அணி, உருவக அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, இல்பொருள் உவமை அணி போன்றவை மிகவும் பிரபலமானவை ஆகும்.

சந்த நயம்

சந்தம் என்பது ஒலியைக் குறிக்கும். ஒருபாடலில் அமைந்துள்ள சீர்கள், அடிகள் இவற்றில் அமைந்துள்ள இயல்பான ஓசையைக் குறிக்கும். இவ்வோசை நயம், சொற்களைப் பிரிக்கும் போதும் தனிச் சொல்லாக வரும்போதும் அடியாக வரும்போதும்  சிறந்த இடத்தைப் பெறுகிறது.

சொல்கொண்டு வில்லடித்தான்
வில்கொண்டு புகழிழந்தான்

இயைபுத் தொடை

ஒரு கவிதையில் இறுதிச் சொற்களோ இறுதி எழுத்துக்களோ இயைந்து வந்து இனிய அமைப்பினைத் தந்து நின்றால் இயைபுத்தொடை ஆகும்.

பள்ளி முடிந்து சென்றோமே
பார்த்து நாமும் நின்றோமே

இங்கு அடியின் இறுதியில் அமைந்துள்ள சீர்களின் இறுதி  எழுத்துகள்
இயைந்து வந்து சிறந்த பொருளைத் தந்து நிற்கிறது.

முடிவாக நாம் எழுத வேண்டிய கருத்துகள்

கவிதையில் சொல்லப்பட்ட கருத்துகளைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.

எனவே சிறப்புப் பெற்ற இக்கவிதையில் உணர்ச்சி, கற்பனை, வடிவம், பொருள் சிறப்பு, கவிதையின் போக்கு போன்றவை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனைப் படிப்பவர்கள் நிச்சயம் இவ்வுலகைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

+++++++++++++++++++++++++++++++++++++













No comments:

Post a Comment