Wednesday, July 17, 2013

திருக்குறள் நட்பு விளக்கம்

இலக்கியம்2
தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி

நட்பு ஆராய்தல்

வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் திருவள்ளுவர் நமக்கு வழங்கியுள்ளார். நட்பைப் பற்றிப் பத்துப்பாடல்களில் விளக்கிய திருவள்ளுவர் அதனைத் தொடர்ந்து எப்படிப்பட்ட நட்பு நமது வாழ்க்கைக்கு உதவும் என்பதையும் எப்படி நட்பினை ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் `நட்பு ஆராய்தல்` என்னும் பகுதியில் விளக்கியுள்ளார்.  இதன் பொருளை நன்கு உணர்ந்து வாழ்க்கையில் செயல்படும்போது நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ளும் சக்தியைப் பெற்றுவிடலாம் என்பது திண்ணம்.

ஒருவருடன் நன்கு ஆராய்ந்து நட்புக் கொள்ளவேண்டும். அப்படி இல்லாமல் திடீரென்று ஆராய்ந்து பார்க்காமல் ஒருவருடன் நட்புக்கொண்டால் அது மிகப்பெரிய துன்பத்தைத் தரும். ஏனென்றால் ஒருவருடன் நட்புக்கொண்டபின் அவரை விட்டுவிலகுவது மிகவும் கடினம்.


ஒருவர் உலகவழக்கு இல்லாத தீயசெயல்களைச் செய்யும்போது அவருடன் தொடர்புடைய நண்பர் அவரைக் கண்டிப்பவராகவும் உலக வழக்கின்படி செல்லுவதற்கு அறிவுறுத்துபவராவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை ஆராய்ந்து பார்த்து அவர்களோடு நட்புக்கொள்ள வேண்டும்.

ஒருவருக்குத் துன்பம் வரும்போது அத்துன்பத்திலிருந்து நல்ல அறிவினையும் பெற்றுக்கொள்ளலாம். அவருக்கு வருகின்ற துன்பம் (கேடு).அவருடைய நண்பர்களை மிகவும் சிறப்பாக அளவிட உதவும் அளவுகோலாகப் பயன்படும்.

அறிவில்லாதவர்களுடைய நட்பிலிருந்து விலகி நிற்பதே ஒருவருடைய சிறந்த செல்வம் (நன்மை, ஊதியம், பேறு) ஆகும்.

நமக்குத் துன்பத்தைத் தரும் தீய எண்ணங்களை நாம் எப்போதும் நினைக்கக் கூடாது. மேலும், நமக்குத் துன்பம் வரும்போது உதவிசெய்யாமல் நம்மிடமிருந்து விலகிச் செல்பவர்களுடன் நமது உறவுமுறையைத் தொடரக்கூடாது.


No comments:

Post a Comment