Wednesday, July 17, 2013

சிலப்பதி காரம் - குறிப்பு

இலக்கியம்2

தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி


சிலப்பதிகாரம் அறிமுகம்

சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். இது தமிழில் உள்ள காப்பியங்களுள் (தொடர்நிலைச் செய்யுள்) மிகவும் பழமையானது. ஒருகாலத்தில் புலவர்கள் மன்னர்களைப் பற்றியும் இறைவனைப் பற்றியும்தாம் இலக்கியங்களைப் படைத்தனர். அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் சிலப்பதிகாரம். அதனால், இதனைக் குடி மக்கள் காப்பியம் என்றும் நாடகக் காப்பியம் என்றும் அழைப்பர்.


சங்ககாலத்தில் தமிழ்நாடு மூன்று பெரும்பிரிவுகளாக இருந்தது. அம்மூன்று பிரிவையும் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்று அழைத்தனர். இதனை முப்பெரும் மன்னர்கள் ஆண்டு வந்தனர். இம்முப்பெரும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பையும் மக்களின் வாழ்க்கை முறையையும் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.

ஆசிரியர் இளங்கோவடிகள் இயற்கை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துக் காப்பியத்தைத் தொடங்குகிறார். இது மூன்று காண்டங்களை உடையது. இக்காண்டங்களை முப்பது உட்பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.  காப்பியத்தின் தொடக்கம் புகார்க்காண்டம் ஆகும். புகார்க்காண்டம் சோழமன்னன் சிறப்புகளையும் அங்கு வாழ்ந்த மக்களின் பண்பு நலன்களையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டாவது காண்டம் மதுரைக் காண்டம் இது பாண்டிய மன்னனின் வாழ்க்கை முறையையும் அவனின் அவசரக்குணத்தையும் மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக் கூறுகிறது. மூன்றாவது காண்டம் வஞ்சிக் காண்டம் ஆகும். இக்காண்டத்தில் இன்று கேரளா என்று அழைக்கப்படும் சேர மன்னனின் குண இயல்புகளையும் அவனின் வீரச் சிறப்புகளையும் விளக்கிக் கூறுகிறது.  




  சிலப்பதிகாரத்தின் சிறப்புகள்

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதுவதற்கு முன்பு பெரிய இலக்கியம் தோன்றியதாகத் தெரியவில்லை. இதனைக் காப்பியம் என்று கூறுவர். காப்பியம் என்பது தொடர்நிலைச் செய்யுள் ஆகும். அதாவது செய்யுள் வடிவத்தில் நீண்ட கதை அமைப்பை உடையதாகும். இது பெண்கள் அணியக்கூடிய ஒரு வகை ஆபரணத்தை மையமாகக் கொண்ட காப்பியம் ஆகும். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இவ்வணிகலம் காலில் அணியக்கூடியது. கதையை இயக்கிச் செல்லும் முக்கியக் கருவியாகச் சிலம்பு விளங்குகிறது.

சிலப்பதிகாரத்தில் கதைத்தலைவனும் கதைத்தலைவியும் சிறந்த வாழ்க்கை வாழ்கின்றனர். மேலும், இதில் துணைப் பாத்திரங்கள், கிளைக் கதைகள், இயற்கை வர்ணனை நாடு நகர் போன்ற பிரிவுகள் உள்ளன. இவற்றின் விளக்கங்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின்  நோக்கம் சிறப்பாக இருக்கிறது.  இக்காப்பியம் மூன்று அடிப்படை நோக்கங்களைக் கொண்டது.

நோக்கங்கள்

அரசாட்சி செய்பவர்கள் தவறு எதுவும் செய்யக்கூடாது. ஒரு வேளை தவறு செய்துவிட்டால் நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும்

ஊழ்வினை (ஒரு பிறப்பில் செய்த தவற்றுக்குரிய தண்டனையை மற்றொரு பிறப்பில் அடைதல்) நம்மை வந்து அடையும்

கணவனுக்குக் கட்டுப்பட்டுச் சிறந்த கற்பு நெறியுடன் வாழும் பெண்களை உலகம் போற்றும்




1 comment: