Sunday, April 20, 2025

 பார் போற்றும்  நற்குணம்


பகையில்லா நல்லுலகம் என்றும் வேண்டும்

பகுப்பில்லா உள்ளம் நமக்கு வேண்டும்

பார்போற்றும் நற்குணம் சிறக்க வேண்டும்

பரந்துபட்ட சிந்தனை வளர வேண்டும்!


சங்கக் கவிஞரின் கனவு மெய்ப்பட வேண்டும்

சங்கமிக்கும் நல்லுள்ளம் நிலைக்க வேண்டும்

பூனையும் கிளியும் சேர்ந்து வாழ்ந்திட வேண்டும்

புவியில் ஒற்றுமை நிலைத்திட வேண்டும்!


கார்போன்ற நற்கொடை நெஞ்சம் வேண்டும்

காட்டாறு போலது விரிந்திட வேண்டும்

கல்வியில் இவ்வுலகம் சிறந்திட வேண்டும்

கல்லாமை இல்லாமை ஆகிட வேண்டும்!

- சிகுரு

 


கசக்கிப் பிழிந்த வேடன்


சோவென்று பொழிந்தது மழை

சொர்க்கமாக நினைத்தது வயல்

சொல்லிப் பூத்தன பூக்கள்

சொல்லாமல் சென்றன ஈக்கள்!


கொண்டு சென்றன தேனை

குடித்து மிதந்தன காற்றினில்

கூட்டை அடைந்தன ஈக்கள்

கொட்ட மறந்து தூங்கின!


காட்டில் வாழ்ந்த மனிதனோ

கண்ணில் பட்ட தேனடையை

கசக்கிப் பிழிந்தான் கருவுடனே

கதறித் துடித்தன ஈக்கள்!


என்ன மகிழ்ச்சி மனத்தில்

துள்ளிக் குதித்தான் வேடன்

கொண்டு கொடுத்தான் பண்ணையில்

கூலி கொடுத்தார் பண்ணையாரே!


இனிப்பாய் நினைத்தான் வேடன் 

இதயம் பிழிந்ததை மறந்தான்

உள்ளம் துடித்த ஈக்களோ 

உலகை மறந்தன அப்பொழுதே!

------சிகுரு