Monday, July 3, 2017

மரபும் பண்பாடும்
முன்னோரும் நாமும் – கண்டதை அறிவோம்!

  வகுப்பு: உயர்நிலை 2 வழக்கம் (ஏட்டுக்கல்வி) (2NA)

ஒரு காலத்தில் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த தமிழர்கள் தம்மை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வழி தேடி தேடினர். அவர்கள் செடி, கொடிகளின் மூலம் கிடைக்கும் பூக்கள், காய் கனிகள், வேர்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர். அவற்றின் மருத்துவக் குணங்களைக் கண்டறிந்தனர். அதனால்தான், ‘ஆயிரம் வேர்களைக் கொன்றவன் அரை வைத்தியன்என்ற பழமொழி தோன்றியது. வைத்தியர்கள் மூலிகை மருத்துவத்தைக் கண்டறிந்தனர்.  

மூலிகையின் சிறப்பினை நாம் பின்வரும் கவிதையின் மூலம் அறியலாம்.  

மூலிகை என்பது மாமருந்தாம்
முற்றிலும் பிணியைப் போக்கிடுமாம்!
முகத்தைப் பொலிவாய் மாற்றிடுமாம்
முத்துப் போல அழகூட்டிடுமாம்

எனவே, நம் வாழ்வை வளமாக்கும் சிறப்புப் பெற்ற மூலிகை வகைகளில் சிலவற்றை அவசியம் அனைவரும் அறிந்துகொள்ளும் போது நோய் நொடி வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மஞ்சள்

       மஞ்சள் என்ற மூலிகைப் பொருள், தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. மஞ்சளை விரல் மஞ்சள், கிழங்கு மஞ்சள் என்று பிரிப்பார்கள். விரல் மஞ்சள் பெரும்பாலும் சமையலுக்கும், கிழங்கு மஞ்சள் முகத்தில் பூசிக்கொள்வதற்கும் பயன்படுகிறது. இது  பல பல நோய்களைக் குணமாக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக, மஞ்சள் கிருமியைக் கொல்வதற்கும் உடலின் வெப்பத்தைத் தணிப்பதற்கும் சளித்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கும் பயன்படுகிறது.

இஞ்சி

      இஞ்சி என்ற பெயரில் உள்ள செடியின் வேரில் உருவாகும் ஒரு வகைக் கிழங்கு ஆகும். இச்செடியின் வேரில் கொத்துக்கொத்தாக இஞ்சி உருவாகும். இது பசியைத் தூண்டும்.  மேலும், இது தலைவலி, வாந்தி போன்றவற்றை நிறுத்துவதற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் சிறப்பை உணர்ந்த நம்முன்னோர் இதனை வேர்க்கனி என்று அழைத்தனர்.



எலுமிச்சைப் பழம்

எலுமிச்சையில் பல வகை  உண்டு. இது  மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெயில் காலத்தில் அதிகம் பயன்படுகிறது. இதன் சாறு உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருவதோடு பசியையும் தூண்டும்.  எலுமிச்சைப் பழம் வயிற்றில் ஏற்படும் ஒரு சில பிரச்சினைகளை நீக்கும். கனிகளுள் சிறந்த மருத்துவக் குணத்தை இது பெற்றிருப்பதால் இதனை, ‘இராஜக்கனி என்று அழைப்பார்கள்.


நமக்கு அன்றாட வாழ்க்கையில் பயன்படும் ஏராளமான உணவுப் பொருள்கள் மருத்துவக் குணத்தை உடையவை.  அவற்றின் சிறப்பினைப் பற்றி நாம் மாணவப் பருவத்தில் அறிந்துகொள்ளும் போது பெற்றோர் வழங்கும் சத்துள்ள உணவுகளை அவசியம் உண்போம். இதன் மூலம் `உணவே மருந்து` என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம். 


1. நம் முன்னோர்கள் எவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தனர்?
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

2. மூலிகைகளில் சிலவற்றைப் பற்றி நாம் அறியாமல் இருந்தால் எத்தகைய பாதிப்பு
ஏற்படும்?
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

3. மஞ்சள் எவற்றிற்கெல்லாம் பயன்படுகின்றது?
 ___________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________


4. இராஜக்கனி என்பது எது? ஏன்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பயிற்சி 2

தொடர்பயிற்சி

மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை இணையப்பக்கத்தில் அறிந்து ஒளிப்பதிவு செய்யவும்.                     

பயிற்சி இரண்டில் ஈடுபடுவதற்கு வேண்டிய உதவியைச் செய்யும் இணையப்பக்கத் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.


 குழுவினருடன் சேர்ந்து கதையைப் பற்றிய கருத்துகளைப் பேச்சுத்தமிழில் வகுப்பில் பகிர்ந்து கொள்ளவும்.

கந்தபுரத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்தார். அவர் மிகச் சிறந்த வியாபாரி. கோவிந்தசாமி எப்பொழுதும் பணம் சம்பாதிப்பதில் மட்டும் தமது கவனத்தைச் செலுத்தி வந்தார். அவர் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்.  அதனால், அவர் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிட மறந்துவிடுவார். அவரது அம்மா சாப்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி அடிக்கடி கோவிந்தசாமியிடம் எடுத்துக்கூறினார். அவருடைய அம்மாவின் அறிவுரைக்குக் கோவிந்தசாமி  முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

காலப்போக்கில் கோவிந்தசாமிக்குப் பசி எடுப்பது குறைந்துவிட்டது. அவர்  தம் நண்பர்களிடம் தனக்கு அதிகமாகப் பசி தோன்றுவதில்லை என்றும் ஒருநாள் திடீரென்று மயக்கம் ஏற்பட்டது என்றும் கூறினார். அவருடைய நண்பர்கள் அவருக்கு அறிவுரை கூறினர்.

கோவிந்தசாமி மருத்துவரிடம் சென்று அவருடைய நிலையை விளக்கினார். மருத்துவர் கோவிந்தசாமி சொல்வதைக் கேட்டு உடலைச் சோதித்துப் பார்த்தார். மருத்துவர் இறுதியில் உடலுக்குத் தேவையான அளவு இரத்தம் உடம்பில் இல்லை என்றும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறினார்.

 கோவிந்தசாமி மிகவும் வருத்தமடைந்தார். மருத்துவர் நாள்தோறும் சாப்பிட வேண்டிய காய்கறிகளின் அளவையும் ஊட்டச் சத்து உணவின் அளவையும் பட்டியல் இட்டு கோவிந்தசாமியிடம் கொடுத்தார். அப்போதுதான்  கோவிந்தசாமி `உணவே மருந்து` என்ற உண்மையை உணர்ந்து கொண்டார். 

வணக்கம் மாணவர்களே!
கண்டதை அறிந்தால் பண்டிதர் ஆவோம் என்ற கதையைக் கவனமாகக் கேட்டு அதில் இடம்பெற்றுள்ள வாழ்க்கைத் திறனை அறிந்து கொள்ளுங்கள்.

கண்டதை அறிந்தால் பண்டிதர் ஆவோம்

சோலையூர் என்ற கிராமத்தில் கந்தசாமி என்வர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் வசதியானவர். அவர் சொல்வதைத்தான் அந்தக் கிராம வாசிகள் கேட்கவேண்டும் என்று நினைப்பவர்.

சோலைசேரிக்குப் புதிய ஆசிரியர் ஒருவர் வந்தார். அவருடைய பெயர் முத்தழகு. அவர் மரியாதை நிமித்தமாக கந்தசாமியைச் சந்திக்கச் சென்றார். அப்பொழுது எலுமிச்சைப் பழம் ஒன்றைக் கந்தசாமிக்குக் கொடுத்தார். அதை வாங்கியபோது கந்தசாமியின் முகம் மாறியது.  ஆசிரியர் அவருக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தவில்லை என்று நினைத்தார். ஆசிரியர் எதனையும் பொருட்படுத்தாமல் கந்தசாமிக்கு நன்றி கூறிவிட்டு அவருடைய வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.

கந்சாமியின் மகன் முத்தகனிடம் படித்து வந்தான். ஒருநாள் அவனுக்குக் காய்சல் அதிகமாக இருந்தது. அவனைப் பள்ளியில் இருந்து வீட்டிற்கு முத்தழகு அனுப்பி வைத்தார். மாலையில் முத்தழகு கந்தசாமியின் வீட்டிற்குச் சென்றார். அவர் கடையில் வாங்கிவந்த  இஞ்சியை முத்தழவிடம் கொடுத்துவிட்டு, அவருடைய வீட்டில் கந்தசாமியின் மகனைப் பார்ப்பதற்கு உட்கார்ந்து இருந்தார். அப்பொழுது கந்தசாமியின் மகள் முத்தழகிற்கு மரியாதை நிமித்தமாகக் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அப்பொழுது அவள் முகத்தில் தேமல் இருப்தை முத்தழகு கவனித்து விட்டார்.

முத்தழகு சிறிது நேரத்தில் கடைக்குச் சென்று மஞ்சள் வாங்கிவந்தார். அதனைக் கந்தசாமியின் மகளிடம் கொடுத்துவிட்டு தம்முடைய வீட்டிற்குச் சென்றார். முத்தழகின் செயலைக் கண்ட கந்தசாமிக்கு முத்தழகின் மீது கோபம் வந்தது. முத்தழகு தம்மை இஞ்சி தின்ற குரங்காகவும் மிகப்பெரிய கஞ்சனாகவும் நினைத்துவிட்டதாக எண்ணி வருத்தப்பட்டார்.

சிறிது நேரத்தில் கந்தசாமியின் வீட்டுக்கு வைத்தியர் ஒருவரை வேலைக்காரன் அழைத்து வந்தான். அவரிடம் முத்தழகு செய்த செயலைப் பற்றிக் கூறினார். அதனை மிகவும் பொறுமையாக வைத்தியர் கேட்டார். பின்னர் அவர், முத்தழகு வாங்கி வந்த மூன்று பொருள்களின் மருத்துவக் குணத்தையும் விளக்கினார். அப்போதுதான் கந்தசாமி, ‘கண்டதை அறிந்தால்; பண்டிதர் ஆவோம் என்ற பழமொழியின் கூற்றினை  உணர்ந்துகொண்டார்.  


தயாரித்தவர்
ஆசிரியர் சி. குருசாமி



    

No comments:

Post a Comment