Monday, May 30, 2022

 

எறும்புக்குழி

கமலாவுக்குக் கரும்புதின்பதுபோல் படிப்பு. நேர் எதிர்மறை தம்பி குமாரசாமி. கமலாவை நினைக்கும்போதெல்லாம் இனிக்கும் பெற்றோருக்கு. அவளது எதிர்காலத்தை மனக்கண்ணால் பார்த்து மகிழ்ச்சி அடைவர். அடே அப்பா எவ்வளவு ஞாபக சக்தி, எவ்வளவு யூகம் இருப்பதையும் வருவதையும் எளிதில் கண்டிபிடிக்கும் ஆற்றல் பெற்றவள்தான் கமலா என்று சோதிடர் சொன்னபோது மேலும் உற்சாகம் அடைந்தனர் கமலாவின் பெற்றோர் கந்தசாமியும் ஞானாம்பாவும். ஞானாம்பாவுக்கு ஒரு மிகப்பெரிய சந்தோசம் என்ன வென்றால் தன்பெயருக்கு ஏற்றாற்போல் தன் மகள் இருப்பதுதான்.


ஆனால், மகனை நினைக்காத நாளே இல்லை. எதிர்காலத்தில் மகனுக்கும் மகளுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வேறுபாடு ஏற்படுமோ என்ற அச்சம் அவ்வப்போது வந்துபோகும். பாவம் அவர் யாரிடமும் சொல்வதில்லை, கணவனின் மனம்கூட நொந்துபோகும் என்று நினைப்பாகந்தசாமியோ பொதுவாக இனிப்புச் செய்தியை மட்டும் அவர் ஞானம்பாளிடம்  பகிர்ந்துகொள்வார்.  மனைவியின் மீது அவ்வளவு அக்கறை. ஒருமுறை வீட்டில் முருக்குச் சுடும்போது கண்ணத்தில் கொதிக்கும் எண்ணெய் தெறித்துவிட்டது. பதறிப்போனார் கந்தசாமி. தன்னுடைய எதிர்காலமே மனைவியின் கண்ணில் பட்டிருந்தால் இருண்டுபோய் விடும் என்று நினைத்து அவருடைய கொலையே பதறியது. அவ்வளவு பிரியம் ஞானம்பாளிடம் வைத்திருந்தார். இருவரும் அவர்களிடேயே இருக்கும் அன்பை வெளியில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். அதுதானே உள்ளார்ந்த அன்பிற்கு அடையாளம். அன்பு ஆழத்தில்தானே நிறைந்திருக்கும். 


குடும்பப்பிணைப்பில் கொடிகட்டிப் பறக்கும் இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரிகளே!

ஒருநாள் அன்பு மகன் குமாரசாமி முகம்தோய்ந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்தான். அப்பாவுக்கு நினைவுக்கு வந்தது. அன்று அரையாண்டுத் தேர்வின் முடிவுகள் என்பது. அம்மாவுக்குப் புரிந்தது அவனின் மனநிலை. அவர் காரணங்களைப் பற்றி யோசிக்காமல் எப்பொழுதும் பதறும் மனம்படைத்தவர். குமாரசாமிக்கு வழக்கம்போல் சிற்றுண்டியை எடுத்துவைத்தார். அவனுக்குப் பிடித்த இனிப்புப் பணியாரம் தான் அன்று செய்து வைத்திருந்தார். குமாரசாமி முகத்தில் ஆனந்தம் வெளிப்படவில்லை. அம்மா இது நல்லா இருக்கு என்றுகூட அன்று அவன் சொல்லவில்லை. பெயருக்கு இரண்டைச் சாப்பிட்டுவிட்டு அவன் அறைக்கு அமைதியாகசச் சென்றான்.


 வீட்டில் நடைபெறும் அத்தனை செயல்களையும் உன்னிப்பாகக் கவனிக்கும் மனம்படைத்தவர் கந்தசாமி. சற்றுநேரத்திற்குப் பின்னர் மகனின் அறைக்குச் சென்றார். எப்பொழுதும்போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். மகனுக்குப் புரியாமல் இல்லை. ஓ வென்று அழத்தொடங்கினான். அழுதுகொண்டே அரையாண்டு மதிப்பெண்களை கூறினான். அதைப் பற்றி ஒன்றும் நினைக்காதே. இது ஒன்றும் பெரிதில்லை. மெல்லப் படித்துகொள்ளலாம். நிச்சயம் நீயும் என்னைப்போல் உயர்ந்த நிலையை அடையமுடியும்.


நானும் உன்னைப்போல்தான் தொடக்கத்தில் கணக்குப்ப்பாடம் புரியாமல் இருந்தேன். தொடக்கப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் கணிதத்தில் தோல்வி அடைந்தேன். மற்ற பாடங்களில் வகுப்பில் முதல் மாணவன் நான். பள்ளிக்குப் புதிய கணித ஆசிரியர் ஒருவர் வந்தார். என்னிலையைப் புரிந்துகொண்டார். அன்பு செலுத்தினார். கணிதப்பாடத்தில் ஆர்வம் ஊட்டினார். எனக்கு நானும் பாடத்தை நேசிக்க ஆரம்பித்தேன். பள்ளியில் கணிதத்தில் சில ஆண்டுகளில் முதல் மாணவனாக வந்தேன். இன்று கணிதப்பேராசிரியராக வேலை செய்கிறேன் என்று கூறிமுடித்தார்.


மறுநாள் பள்ளிக்குச் சென்ற குமாரசாமி சோர்வுடன் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான். வெயில் அதிகமாக இருந்தது. சோர்வடைந்தான். அருகில் இருந்த ஆலமரத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தான். சாரை சாரையாக எறும்புகள் சென்று கொண்டிருதன. சில எறும்புகள் பெரிய உணவு உருண்டைகளை இழுத்துச் செல்வதையும், பின்னர் வழியிலேயே விட்டுவிடுவதையும் உன்னிப்பாகக் கவனித்தான். என்ன அதிசயம் ஒருசில எறும்புகள் உணவு உருண்டைகளை இழுத்துச் செல்வதற்குத் தடையாக இருப்பனவற்றைக் ஊகித்து அறிந்து பாதையை மாற்றி இழுத்துச் செல்வதைக் கண்டான். பின்னர் அவை தம்முடைய குழிக்குள் அவற்றைத் தள்ளிவிட்டுத் தலைதூக்கிப் பார்ப்பதையும் கண்டான்.  குமாரசாமி தன்னை அலசினான். வெட்கப்பட்டான். வேதனை அடைந்தான்.

தலைநிமிர முடிவு செய்தான் குமாரசாமி. ஆர்வமும் முயற்சியும்தான் வெற்றியின் அடையாளங்கள் என்பன ஆழ்மனத்தில் தைத்தது.  அவற்றையே நடைமுறை வாழ்க்கையிலும் கடைப்பிடித்துப் பெற்றோரின் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்துக் சகோரியைப்போல் சிறந்து விளங்கினான்.          

 எழுதியவர் சி. குருசாமி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment