Sunday, May 29, 2022

 

கதைகள் படிக்க வேண்டிய அவசியம்

 

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கதைகளை விரும்பிப் படிப்பர்.   அப்படிக் கதைகளில் என்னதான் இருக்கிறது. அதை விரும்புவதற்குக் காரணங்கள் எவை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கதைகளில்  நம் முன்னோர்களின் வரலாறு இடம்பெற்றிருக்கிறது. அது அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறுகிறது. அதுமட்டுமல்ல கதைகள் நடைமுறை வாழ்க்கையைப் பற்றிக் கூறுகின்றன. மேலும், நாம் பின்பற்ற வேண்டிய  நீதி, நேர்மை போன்றவற்றைப் பற்றியும் கதைகள் விளக்குகின்றன. முக்கியமாக வாழும்முறையைப் பற்றி அறிந்துகொள்வதற்குக் கதைகளை நாம் அவசியம் படிக்க வேண்டும்.    

நாம் பல நேரங்களில் தொடர்ந்து பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஒருசில நேரங்களில் நம்முடைய சக்திக்கு மீறிய செயல்களிலும் ஈடுபட்டுவருகிறோம். அதனால், மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. அதனைப் போக்குவதற்கு நகைச்சுவைக் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் நாடிச்செல்கிறோம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. மேலும், நம் அறிவைப் பெருக்குகின்றன.   

சிறுவர்களுக்கு எழுதுகின்ற கதைகளும் இருக்கின்றன. அவை அவர்களுக்குக் கதை கேட்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நல்ல சிந்தனையை வளர்க்கின்றன. சிறுவர்களாக இருக்கும்போதே படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மேலும், புதிய சிந்தனை வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகின்றன. அதனால்தான் சிறுவர்கள் தொடர்ந்து கதைகளைப் படித்து வரவேண்டும். அவை அவர்களிடம் படைப்பாற்றல் சிந்தனையை உருவாக்கும். எதிர்காலத்தில்  படைப்பாளர்களாக வரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இது சமூகத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் பயன்படும். 


எழுதியவர் சிகு(127)

No comments:

Post a Comment