Wednesday, May 25, 2022

 


மனநிலை

பச்சையூரில் மூன்று ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. மக்கள் குடிப்பதற்குக்கூடப் போதிய தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். அதனால் ஊர்ப் பெரியவர்கள் ஒன்று கூடினார். அவர்கள் ஊரில் சில ஆண்டுகளாகக் கொண்டாடாமல் இருந்த ஊர்த்திருவிழாவை நடத்துவதற்கு முடிவு செய்தனர். ஊர்த்திருவிழாவும் சிறப்பாக நடை பெற்றது. ஆனால், மழை மட்டும் பெய்யவில்லை. அதனால் ஊர்மக்கள் மற்றோர் ஊருக்குச் சென்று வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முடிவு செய்தனர். அவர்கள் அனைவரும் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். செல்லும் வழியில் பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அதன் பெயர் வெற்றியூர். அது செல்வச் செழிப்புடன் இருந்தது. அதனைக் கண்டவுடன் அந்த ஊரில் தங்கி வேலை செய்து பிழைத்துக்கொள்ள முடிவு செய்தனர்.

வெற்றியூரில் உள்ள பெரியவர்களைப் பார்த்து வேலை கேட்டனர். அவர்களும் பச்சையூர் மக்களுக்கு வேலையும் தங்கிக்கொள்வதற்கு வீடும் கொடுத்தனர். அவர்களின் வேலை ஊருக்கு வெளியில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை நடுவது ஆகும். வெற்றியூரில் உள்ள மக்கள் மரங்களை வளர்ப்பதற்கு அதிகப் பணம் செலவழித்து வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அதனால், பணத்தைச் செலவு செய்துவரும் ஊர்மக்களைப் பார்த்து விவரத்தைக் கேட்டார்கள். அப்போதுதான் கடந்த இருபது வருடங்களாகத் தங்கள் கிராமத்தில் உள்ள மரங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் காலிசெய்தது அவர்களின்  நினைவுக்கு வந்தது.

பச்சையூர் மக்கள் நீண்ட காலமாகத் தாங்கள் செய்துவந்த தவற்றை வெற்றியூர் முதலாளிகளிடம் கூறினார்கள். அவர்கள் பச்சையூரில் மரக்கன்றுகளை நடுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் பச்சையூரில் மழை பெய்யத்தொடங்கியது. ஊரில் உள்ள கிணறுகளில் தண்ணீர் பெருகத் தொடங்கியது. அதனால், வெற்றியூர் முதலாளிகளுக்கு நன்றி கூறிவிட்டுத் தங்கள் ஊருக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள்.  


 எழுதியவர் சி. கு ஆசிரியர்

நீதிக்கருத்து

பசுமையே வாழ்க்கையின் உயிர்நாடி

No comments:

Post a Comment