Sunday, February 22, 2026

 

கொடுக்காமலும் எடுக்காமலும்

உல்லாசம் பொங்கிடும் போதுநம்

உள்ளமெல்லாம் நிறைந்து மகிழ்ந்திடுமே!

உண்மையில் நின்று உயர்ந்திடும்போது

உருவமெல்லாம்  சிலிர்த்து நிற்குமே!


உண்மையை நாம் உணர்ந்திடும்போது

கள்ளமில்லா கவிதைபாடி நின்றிடுமே

மெல்ல மெல்ல மகிழ்ந்திடுவோம்

மேன்மை பெறும் செயல்களாலே!


கொடுக்காமல் நாம் இருந்திட்டாலும் 

எடுக்காமல் இருந்திடல் வேண்டும்

எடுக்காமல் இருந்திடும்போது நம்மனம்

படுக்காமல் நிமிர்ந்து நிற்குமே!

- சிகு




                  வாழ்க்கை


வண்ணமயமாக நாம் வாழ்ந்திட
வாழும் முறை அறிந்திட வேண்டும்
வற்றாத பிரச்சினை வந்திடினும் 
வளமாக மாற்றிட வழிகள் பலவுண்டு

வழிதெரியா மனிதன்கூட வழியறிவான்
வழியறியும் சிந்தனைப் பெருக்கத்தாலே
வாழ்கைதனில் உயர்ந்து நிற்பான்  
வாழும்முறை அவன் அறிந்திடும்போதே.

செல்லும்வழியில் சிக்கல் பலவாயினும்  
சிறப்பினை உணர்ந்து சென்றிட வேண்டும்
சிறப்பினை உணர்ந்து சென்றிடும்போது
சிக்கல்தானே சுழியமாகிச் சிதறிப்போகுமே!

----------------------------சி.கு


Tuesday, February 3, 2026

 

சொல்லும் கதையைச் சொல்லியே தீரனும்!


சொல்லாமல் சொல்லுவோம் எதனையும்

சொல்லும்போது ஏற்படும் மனவருத்தம்

சொல்லாமல் சொல்லும்போது மறைந்திடுமே

சொன்னதை சொன்னாலும் வருத்தமே

சொல்லாமல் இருந்தாலும் பெருவருத்தமே!


யார்சொன்னாலும் கேட்காத பிள்ளைகளும்

கேட்டுத்தான் ஆவாரே சொல்பவர் சொன்னால்

அன்புடன்  சொன்னால் அமைதியாக இருப்பர்

அதட்டிச்  சொன்னால் மறுத்திடுவார்!


அம்மா சொன்னாலும் சிலநேரம் எதிர்த்திடுவர்

அறிவுரை சொன்னாலே வெறுத்திடுவார் 

சொல்லுவார் சொன்னால் சுவரும் மறைத்திடாது

சொல்லும் கதையைச் சொல்லியே தீரனும்!.


Friday, June 6, 2025

 

சின்ன சின்ன


சின்ன சின்னக்கிளி-அது

சிங்காரக் கிளி! 

வண்ண வண்ணக் கிளி

அது வண்ணம் நிறைந்த கிளி

சொன்ன பேச்சைக் கேட்குமே

சொன்னதையும் சொல்லுமே!!


கொத்திக்கொத்தித் தின்னுதே

கூட்டமாய் நின்று பேசுதே

கொடுத்துக் கொடுத்துத் தின்னுதே

கொஞ்சிக் கொஞ்சி பேசுதே!!


சின்னச் சின்னக் கிளி

அது சிங்காரக் கிளி!

கோபம் கொண்டு விழிக்கிதே

கொத்திக்கொஞ்சம் பார்க்குதே

அக்கம் பக்கம் போனாலது  

விரட்டி நம்மை ஒதுக்குமே!


சின்னச் சின்னக் கிளி

அதுசிங்காரக்கிளி!

பசுமை தழைக்க உதவுதே

பலமையில் தூரம் பறக்குதே

நல்விதையை அங்கு தூவுதே

மரமும் செடியும் வளருதே

மழையை அதுகொடுக்குதே

உலகம் செழித்துவளருதே

உயரநமக்கு உதவுதே!

 

சின்னச்சின்னக் கிளி

அது சிங்காரக்கிளி!!

-சிகு




 

வற்றாத பண்பு


வற்றாத பண்பு நமக்கு என்றும் வேண்டும்

வளமான வாழ்வினைப் பெற்றிடவேண்டும்

வாழும்முறையினை அறிந்திடவேண்டும்

வயதானபின்னருமது தொடர்ந்திடவேண்டும்!


நெஞ்சம் நல்லுணர்வினைப் பெற்றிடவேண்டும்

நெஞ்சாரப் பிறரை மதித்திடவேண்டும்

பெற்றோரைத் தெய்வமாய்ப் போற்றிடவேண்டும்

மற்றோரை அதுபோல மதித்திட வேண்டும்!!

- கவிமொழி -சிகு

 

பக்குவம் பெற்றிட


வெற்றிமீது வெற்றி விரைந்து வந்திடினும்

வீரர்களை ஏற்றிடும் விழாமனம் வேண்டும்

தம்மிடம் இருப்போரைத் தழுவிச் செல்லும் 

தரமிகுந்த உள்ளம் தரணியில் வேண்டும்!


எத்தனை சிறப்புகள் இப்புவியில் பெற்றிடினும்

மாறா மனிதநேயம்  இருந்திட வேண்டும்

பணிபல முடித்திடினும் பார்போற்றும் நிலைவந்திடினும்

பதமுணர்த்தும் பக்குவமான சோறாகிட வேண்டும்!


உத்தமராய் இவ்வுலகில் வாழுமெண்ணம்  வேண்டும்

தத்துவம் அறிந்திடினும் மனத்தத்துவம் உணர்ந்திடவேண்டும்

உண்மையாய் வாழ்ந்திடவே உயர்ந்தகொள்கைதனை

உள்ளத்தில் வகுத்தொளிவின்றி உயர்ந்து நின்றிடவேண்டும்!. 

- கவிமொழி - சி.கு


Sunday, April 20, 2025

 பார் போற்றும்  நற்குணம்


பகையில்லா நல்லுலகம் என்றும் வேண்டும்

பகுப்பில்லா உள்ளம் நமக்கு வேண்டும்

பார்போற்றும் நற்குணம் சிறக்க வேண்டும்

பரந்துபட்ட சிந்தனை வளர வேண்டும்!


சங்கக் கவிஞரின் கனவு மெய்ப்பட வேண்டும்

சங்கமிக்கும் நல்லுள்ளம் நிலைக்க வேண்டும்

பூனையும் கிளியும் சேர்ந்து வாழ்ந்திட வேண்டும்

புவியில் ஒற்றுமை நிலைத்திட வேண்டும்!


கார்போன்ற நற்கொடை நெஞ்சம் வேண்டும்

காட்டாறு போலது விரிந்திட வேண்டும்

கல்வியில் இவ்வுலகம் சிறந்திட வேண்டும்

கல்லாமை இல்லாமை ஆகிட வேண்டும்!

- சிகுரு