Monday, May 30, 2022

 

கதையும் சிந்தனையும்

சர்க்கரைப் பொங்கல்

 

சர்க்கரைப் பொங்கல் என்றால் சந்தானத்துக்கு உயிர். யாரிடம் இனிப்பு இருந்தாலும் சந்தானத்தின் நாக்கில் எச்சில் ஊறிவிடும். இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. குழந்தைப் பருவத்தில் குடிகொண்டது.  

 

உடலில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும்கூட அதனைப் பெரிதுபடுத்தமாட்டார் சந்தானம். முடிந்தவரை மருத்துவரைப் போய்ப் பார்க்க மாட்டார். சின்னச் சின்னப் பிரச்சினைகளை பாட்டிவைத்தியத்தில்  சரி செய்துவிடுவார். சிக்கனத்தின் சிகரம் சந்தானம். அவசியச் செலவுகளையும் ஐந்துதடவை யோசிக்கும் பழக்கம் உடையவர்.  

அவருடைய மனைவி வடிவோ சந்தானத்திற்கு மாறானவர். எப்பொழுதும் கவனமாக இருப்பார். உடல்நோவைப் பொறுத்துக்குக்கொள்ளமாட்டார். உடனே மருத்துவரைச் சென்று பார்ப்பார். உடல் நலம் பெற்றால்தான் அப்பாட என்று பெரு மூச்சு விடுவார்.

உடலைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்வார். கணவனையும் கவனிப்பதில் கெட்டிக்காரி. ஆனால், சந்தானம் வடிவுசொல்வதைப் பொருட்படுத்த மாட்டார்.

உணவுப் பழக்கத்தில்கூட இருவருக்கும் பெருத்த வேறுபாடு. மாறுபட்ட விருப்பங்கள்.  ஆனால் மனம்கோணாமல் புரிந்துநடக்கும் பண்பு மட்டும் அவர்களிடம் இணைந்திருந்தது.  

காலம் உருண்டோடிச் சென்றது. ஏறக்குறைய ஐம்பது வயதைத் தாண்டியது.  எப்பொழுதும்போல் வாழ்க்கைப் பயணம் சென்றுகொண்டிருந்தது. நல்ல உடல்பருமனை உடைய சந்தானத்தின் உடல் ஐஸ்குச்சியில் உள்ள    ஐஸ்          போல மெல்ல மெல்லக் கரைய ஆரம்பித்தது. உடல் மெலிவது நல்லதுக்குத்தான் என்று சந்தானம் மகிழ்ச்சி அடைந்தார்.  

திடீரென்று ஒருநாள் சந்தானத்திற்கு மெல்ல வந்தது மயக்கம். வீட்டில் இருந்த வடிவு பதறிப்போய் ஓடிவந்தார். என்ன என்ன என்று கேட்கும்போது சந்தானம் அமைதியாகக் கையை அசைத்தார்.

புரிந்துகொண்ட வடிவு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்

மருத்துவர் சோதித்துப்பார்த்தார். பயப்படாங்க, அவருக்குச் சர்க்கரையின் அளவு கூடிவிட்டது. அதைச் சரிசெய்துவிடலாம் என்றார்.  வடிவுக்கு மருத்துவரின் பேச்சு ஆறுதலைத் தந்தது. அவரின் அடிமனம் எதையோ சொல்லிக்கொண்டிருந்தது.  

கண்விழித்தார் சந்தானம். மருத்துவர் சொன்னதை மெல்ல மெல்ல சந்தானத்தின் காதில் போட்டுக்கொண்டிருந்தார் வடிவு.

முழுவதும் கேட்காமல் அவ்வளவுதானே என்றார் சந்தானம். இன்னவொன்னும் சொன்னாரு சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது உங்க கையில இருக்குதுன்னு.

வடிவு நீ சொல்றது சரிதான். என்னால எதுவும் முடியும். இனிப்புங்கிறதுனால கொஞ்ச நாளாகும். எனக்குத் தெரியாதா, நான் சின்னப்பிள்ளையா  என்று சந்தானம் கூறியது வடிவுக்கு ஆறுதலாக இருந்தது.  

என்னமோங்க நா சொல்ரத சொல்லிட்டேன் என்று சொல்லிவிட்டுச் சட்டென்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் வடிவு.

அம்மா... மருந்து மாத்திரை வந்து வாங்கிக்கொங்க என்ற குரல் ஓர் அறையிலிருந்து ஒலித்தது. விரைந்துசென்று அவற்றை வாங்கிக்கொண்டு உட்கொள்ளும் முறையையும் கேட்டுக்கொண்டாள் வடிவு.

வழக்கம்போல் ஊர்த்திருவிழாவும் வந்தது. மக்கள் சர்க்கரைப்பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். சந்தானம்தான் முதல் பொங்கலைச் சாப்பிடுவது ஊர் வழக்கம். இப்பொழுதும் ஊர்மக்களின் ஆசை அதுதான், அவர்களுக்குச் சந்தானத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்தின் ஆழ்மன ஆசை நிறைவேறியது.  

மூன்று மாதங்களுக்குப் பின்னர் மருத்துவரைப் பார்ப்பதற்குச் சந்தானத்தை வடிவு அழைத்துச் சென்றார். சந்தானத்தைச் சோதித்துப் பார்த்த மருத்துவர் சர்க்கரையின் அளவு இரண்டுமடங்காகிவிட்டது என்றார்.

மருந்துசாப்பிடுறேன் டாக்டர், இனிப்புப் பலகாரம் நடமாடும்போது மட்டும்தான் நாக்க கட்டுப்படுத்தமுடியல. கொஞ்சங் கொஞ்சங் இனிப்பு,  கூடுதலாக ஒரு சர்க்கரை மாத்திரை போட்டுக்கிடுவேன். அவ்வளவுதான் என்று சொல்லிக்கொண்டே பேச்சை நிறுத்திவிட்டார். அமைதி நிலவியது. ஆறுமாதச்  சிகிச்சைக்குப்பின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் சந்தானத்தை. அங்குச் சந்தானத்தின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளைக் கண்டதும் பொலபொல வென்று கண்ணீர் வடித்தார். 


எழுதியவர் சி. குருசாமி

 


காலுறை

 

தம்பி தம்பி எந்திரிடா இன்னும் தூங்கினா எப்படி என்று பார்வதி தன்னுடைய செல்லப் பிள்ளையை எழுப்பினார். படுக்கையில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த விசு புரண்டு புரண்டு படுத்தான். அடே சோம்பேறி எந்திரிடா, எதிர்த்த வீட்டு கிட்டு பள்ளிக்கூடம் போய்விட்டான். அவனைப் போல் நீயும் நல்லா படிக்கனும்டா எந்திரிடா என்று வழக்கம்போல் கதை பேச ஆரம்பித்தார் பார்வதி.


வருட முழுவதும் இதைக்கேட்டுப் பழகிய கிட்டு அரைத் தூக்கத்தில இல்லம்மா நான் போகமாட்டேன் என்று தன்னுடைய மழலைமொழியில்  கூறினான். மாமாவுக்குக் கோபம் வந்தது. நீயும் உன் பாட்டிபோல் படிப்பறிவு இல்லாமல் இருக்கனும்னு நினைச்சயா என்று பாட்டியைக் குறைசொல்லிக்கொண்டே அவனைத் தோளில் தூக்கிக்கொண்டு குளிக்க வைப்பதற்குச் சென்றார்.


தூக்கத்திலிருந்து விழிக்காத நான்கு வயது பாலகன் தூக்கத்திலே குளித்தான். அவசர அவசரமாகப் பார்வதி அன்று தயாரித்த சூடான உணவைத் தூக்கத்திலேயே ஊட்டிவிட்டார். ருசி அறியாத வயது, பாவம் கிட்டு என்ன செய்வான். மெல்ல மெல்ல ஓரிரு வாய்கள் விழுங்கினான். மீண்டும் உட்கார்ந்துகொண்டே தூங்க ஆரம்பித்தான். 

 

எரிச்சலடைந்த பார்வதி உன்னோட ரெம்ப ரோதனையா இருக்கு. நாளையில இருந்து உன் அப்பாதான் உன்ன கொண்டுபோய் விடனும். இன்னைக்கு வரட்டும் சொல்லிடுறேன் என்றார்.  பார்வதி எண்ணத்தில் ஆயிரம் சிறகுகள், தன்னுடைய பிள்ளை மிகப்பெரிய கல்விமானாக வந்து நிறைய சம்பளம் வாங்கித் தனி வீட்டில் அவனோடு வாழவேண்டும் என்பதே அவருடைய நீண்ட நாள் ஆசை. இது தவறில்லை. அவரும் ஒரு சராசரிப் பெண்தானே!

 

பார்வதி குழந்தைப் பருவத்தில் கம்போங் குடியிருப்பில் வசித்து வந்தார். சுகாதார மற்ற நிலையில் கூட்டத்தோடு கூட்டமாக வாழ்ந்த அவருக்கு சற்றுத்தொலைவில் உயர்ந்த நிலையில் வாழும் மக்களைப் பார்க்கும்போது நம்மால் வசதியாக வாழமுடியவில்லையே. நினைத்ததை வாங்கமுடியவில்லையே,  நம்முடைய பெற்றோர் கூலி வேலை பார்க்கிறாங்க என்று சொல்வதற்கே  வெட்கமாக இருக்கிறது. இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று பல நாள்கள் அவர் ஏங்கியதுண்டு. ஆனால் அவள் யாரிடம் தம் ஏக்கத்தை வெளிப்படையாகப் பேசுவது. பெற்றோர்கள் விடிந்துபோனால் அடைந்துதானே வீட்டுக்கு வருவார்கள். அதற்குள் அன்பு நிறைந்த பாட்டியின் மடியில் அசந்து பார்வதி தூங்கிவிடுவார். இதுதானே நாள்தோறும் நடக்கும். பள்ளிக்கூடம் செல்ல முடியாத குடும்பச் சூழ்நிலை. பாவம் பார்வதி என்ன செய்வாள். தனக்குப் பிறகு பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அவள்தானே பார்த்து வந்தாள். 


இன்று பார்வதி அடுக்குமாடியில் குடியிருக்கிறாள். அவளுடைய கணவனோ ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார். குறைந்த வருமானம். மூன்றரை வீடு. முன்னேறத்தான துடிக்கும் மனசு. இளமையில் கண்ட கனவை இப்போது யாரிடம் சொல்வது.

மகனை எப்படியாவது அதிகச் சம்பளம் பெறும் வேலைக்குப் படிக்க வைக்க வைக்க வேண்டும் என்பதே பார்வதியின் இன்றையக் கனவு. அது வேகம் எடுத்தது.

விசுவைத் தூக்கிக்கொண்டு காலுறையை அவசர அவசரமாக மாட்டினார். அவன்  காலை உதறினான். நேரம் ஆகிவிட்டது பள்ளிக்குப் போவோம் என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த பாலர்பள்ளிக்குத் தூக்கிக்கொண்டு வேகமாகச் சென்றார் பார்வதி.


பள்ளியில் விட்டுவிட்டுப் பார்வதி, அடுத்த வேளை உணவைச் சமைப்பதற்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்குச் சற்று விலை குறைந்த கடையைத் தேடிச் சென்றார்.


பாலர் பள்ளியில் சிறிது நேரத்தில் குழந்தை மயக்கம் அடைந்தது.  ஆசிரியர்கள் கூடினர். முதலுதவி செய்தனர். முதலில் காலில் மாட்டியிருந்த சூவைக் கழட்டினர். காலுறையைக் கழட்டினர். அப்போது  அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் காலுக்கடியில் சிறிய தேள் ஒன்று இறந்துகிடந்தது.


பதறிப்போன ஆசிரியர்கள் விசுவை உடனே மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். மருத்துவர்கள்  வேண்டிய சிகிச்சை செய்தனர். நல்ல வேளை விசு மெல்ல மெல்ல கண் விழித்தான். அவனுடைய அம்மாவைப் பார்த்ததும் மீண்டும் அழத்தொடங்கினான்.

 

 எழுதியர் சி. குருசாமி

 

எறும்புக்குழி

கமலாவுக்குக் கரும்புதின்பதுபோல் படிப்பு. நேர் எதிர்மறை தம்பி குமாரசாமி. கமலாவை நினைக்கும்போதெல்லாம் இனிக்கும் பெற்றோருக்கு. அவளது எதிர்காலத்தை மனக்கண்ணால் பார்த்து மகிழ்ச்சி அடைவர். அடே அப்பா எவ்வளவு ஞாபக சக்தி, எவ்வளவு யூகம் இருப்பதையும் வருவதையும் எளிதில் கண்டிபிடிக்கும் ஆற்றல் பெற்றவள்தான் கமலா என்று சோதிடர் சொன்னபோது மேலும் உற்சாகம் அடைந்தனர் கமலாவின் பெற்றோர் கந்தசாமியும் ஞானாம்பாவும். ஞானாம்பாவுக்கு ஒரு மிகப்பெரிய சந்தோசம் என்ன வென்றால் தன்பெயருக்கு ஏற்றாற்போல் தன் மகள் இருப்பதுதான்.


ஆனால், மகனை நினைக்காத நாளே இல்லை. எதிர்காலத்தில் மகனுக்கும் மகளுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வேறுபாடு ஏற்படுமோ என்ற அச்சம் அவ்வப்போது வந்துபோகும். பாவம் அவர் யாரிடமும் சொல்வதில்லை, கணவனின் மனம்கூட நொந்துபோகும் என்று நினைப்பாகந்தசாமியோ பொதுவாக இனிப்புச் செய்தியை மட்டும் அவர் ஞானம்பாளிடம்  பகிர்ந்துகொள்வார்.  மனைவியின் மீது அவ்வளவு அக்கறை. ஒருமுறை வீட்டில் முருக்குச் சுடும்போது கண்ணத்தில் கொதிக்கும் எண்ணெய் தெறித்துவிட்டது. பதறிப்போனார் கந்தசாமி. தன்னுடைய எதிர்காலமே மனைவியின் கண்ணில் பட்டிருந்தால் இருண்டுபோய் விடும் என்று நினைத்து அவருடைய கொலையே பதறியது. அவ்வளவு பிரியம் ஞானம்பாளிடம் வைத்திருந்தார். இருவரும் அவர்களிடேயே இருக்கும் அன்பை வெளியில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். அதுதானே உள்ளார்ந்த அன்பிற்கு அடையாளம். அன்பு ஆழத்தில்தானே நிறைந்திருக்கும். 


குடும்பப்பிணைப்பில் கொடிகட்டிப் பறக்கும் இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரிகளே!

ஒருநாள் அன்பு மகன் குமாரசாமி முகம்தோய்ந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்தான். அப்பாவுக்கு நினைவுக்கு வந்தது. அன்று அரையாண்டுத் தேர்வின் முடிவுகள் என்பது. அம்மாவுக்குப் புரிந்தது அவனின் மனநிலை. அவர் காரணங்களைப் பற்றி யோசிக்காமல் எப்பொழுதும் பதறும் மனம்படைத்தவர். குமாரசாமிக்கு வழக்கம்போல் சிற்றுண்டியை எடுத்துவைத்தார். அவனுக்குப் பிடித்த இனிப்புப் பணியாரம் தான் அன்று செய்து வைத்திருந்தார். குமாரசாமி முகத்தில் ஆனந்தம் வெளிப்படவில்லை. அம்மா இது நல்லா இருக்கு என்றுகூட அன்று அவன் சொல்லவில்லை. பெயருக்கு இரண்டைச் சாப்பிட்டுவிட்டு அவன் அறைக்கு அமைதியாகசச் சென்றான்.


 வீட்டில் நடைபெறும் அத்தனை செயல்களையும் உன்னிப்பாகக் கவனிக்கும் மனம்படைத்தவர் கந்தசாமி. சற்றுநேரத்திற்குப் பின்னர் மகனின் அறைக்குச் சென்றார். எப்பொழுதும்போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். மகனுக்குப் புரியாமல் இல்லை. ஓ வென்று அழத்தொடங்கினான். அழுதுகொண்டே அரையாண்டு மதிப்பெண்களை கூறினான். அதைப் பற்றி ஒன்றும் நினைக்காதே. இது ஒன்றும் பெரிதில்லை. மெல்லப் படித்துகொள்ளலாம். நிச்சயம் நீயும் என்னைப்போல் உயர்ந்த நிலையை அடையமுடியும்.


நானும் உன்னைப்போல்தான் தொடக்கத்தில் கணக்குப்ப்பாடம் புரியாமல் இருந்தேன். தொடக்கப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் கணிதத்தில் தோல்வி அடைந்தேன். மற்ற பாடங்களில் வகுப்பில் முதல் மாணவன் நான். பள்ளிக்குப் புதிய கணித ஆசிரியர் ஒருவர் வந்தார். என்னிலையைப் புரிந்துகொண்டார். அன்பு செலுத்தினார். கணிதப்பாடத்தில் ஆர்வம் ஊட்டினார். எனக்கு நானும் பாடத்தை நேசிக்க ஆரம்பித்தேன். பள்ளியில் கணிதத்தில் சில ஆண்டுகளில் முதல் மாணவனாக வந்தேன். இன்று கணிதப்பேராசிரியராக வேலை செய்கிறேன் என்று கூறிமுடித்தார்.


மறுநாள் பள்ளிக்குச் சென்ற குமாரசாமி சோர்வுடன் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான். வெயில் அதிகமாக இருந்தது. சோர்வடைந்தான். அருகில் இருந்த ஆலமரத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தான். சாரை சாரையாக எறும்புகள் சென்று கொண்டிருதன. சில எறும்புகள் பெரிய உணவு உருண்டைகளை இழுத்துச் செல்வதையும், பின்னர் வழியிலேயே விட்டுவிடுவதையும் உன்னிப்பாகக் கவனித்தான். என்ன அதிசயம் ஒருசில எறும்புகள் உணவு உருண்டைகளை இழுத்துச் செல்வதற்குத் தடையாக இருப்பனவற்றைக் ஊகித்து அறிந்து பாதையை மாற்றி இழுத்துச் செல்வதைக் கண்டான். பின்னர் அவை தம்முடைய குழிக்குள் அவற்றைத் தள்ளிவிட்டுத் தலைதூக்கிப் பார்ப்பதையும் கண்டான்.  குமாரசாமி தன்னை அலசினான். வெட்கப்பட்டான். வேதனை அடைந்தான்.

தலைநிமிர முடிவு செய்தான் குமாரசாமி. ஆர்வமும் முயற்சியும்தான் வெற்றியின் அடையாளங்கள் என்பன ஆழ்மனத்தில் தைத்தது.  அவற்றையே நடைமுறை வாழ்க்கையிலும் கடைப்பிடித்துப் பெற்றோரின் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்துக் சகோரியைப்போல் சிறந்து விளங்கினான்.          

 எழுதியவர் சி. குருசாமி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 


எதற்கு விடுமுறை

 

கமலி கமலி உன்னை எத்தனதடவ சொல்லிட்டேன். காலையில இருந்து இன்னும் சாப்பிடாம டீவியிலே இருக்க. உனக்கு டீவி சோறுபோடுமா. ஏம்மா இது நல்லா இருக்கா. இதுக்குத்தானா லீவு விட்டாங்க என்று கமலியின் அம்மா உரக்கக் கத்தினார்.  

வீட்டில் நடக்கும் விசயத்தை ஓர் ஓரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்.  அப்பாவின் அம்மா முத்துப்பேச்சி. அவரைப் பாட்டி பாட்டி என்று எல்லோரும் அன்புடன் அழைப்பார்கள்.   

கமலி, ஏம்மா அம்மா சொன்னா கேட்கவேண்டாமா, டீவி படம் கண்ணைப் பாழாக்கிடும், கண்ணாடி பவரக் கூட்டிடும். அம்மா சொன்னா கேளும்மா என்று பாட்டி அன்பு கலந்த குரலில் தட்டிக்கேட்டார்.  

இல்ல பாட்டி, இப்பத்தான் கொஞ்ச நாட்கள் கிடைச்சிருக்கு. பொழுதைச் சந்தோசமாக் கழிக்க டீவிகூடப் பாக்கவிடலன்னா என்ன பாட்டி, நீங்க சொல்லுங்க என்றாள் கமலி. கமலியின் ஆதாங்கம் பாட்டிக்குப் புரியும். என்ன செய்ய பிள்ளைகள் கெட்டிடும் என்பதும் பாட்டிக்குத் தெரியும். ஒருமாதங் கழித்துப் புத்தகத்தைத் திறந்தா ஒரே சலிப்பாயிடும் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்த பாட்டி, சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.    

பாட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த கமலி, என்ன பாட்டி நான் சொல்ரது சரிதானஎன்றாள். பாட்டி, ‘கமலி, பொழுதுபோக்க எவ்வளவோ இருக்கு. அம்மாவுக்கு ஒத்தாசையா கொஞ்சநேரம் சமையல்ல இருந்தா, வருசம்பூரம் சமைக்கிற அம்மாவுக்குக் கொஞ்சம் சந்தோசந்தான. நீயும் பின்னால, ஓம் பிள்ளைகளுக்குச் சமையலைக் கத்துக்கொடுக்கனுமில்ல. இல்லாட்ட நம்ம பாரம்பரியச் சமையல் கொஞ்சங்கங் கொஞ்சமாக மறைஞ்சிறுமில்ல. அதனாலதாம்மா நான் சொல்லுரங் கமலி என்று சொல்லிமுடித்தார் பாட்டி. பிரியமான பாட்டி சொன்ன கதையைக் கேட்ட கமலி சிந்திக்க ஆரம்பித்தாள்.     

எழுதியவர் சி. குருசாமி                160  

 


அறிவு ஆக்கத்திற்கே

புத்தகம் என்றாலே பூமிநாதனுக்கு வெல்லப்பாகு. எப்படித்தான் இந்தக் கலை அவனிடம் வளர்ந்ததோ தெரியவில்லை. அவனுடைய பெற்றோருக்கு ஆனந்தம். பாட்டிக்கு அதைவிட மகிழ்ச்சி. தன் பேரன் மிகப்பெரிய ஆளாக எதிர்காலத்தில் வருவான் என்பது பாட்டியின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவனை மிகப்பெரிய அறிவாளியாக மாற்றுவது புத்தகம்தான் என்பது தாத்தாவின் அனுபவ அறிவுக்குத் தெரிந்த விசயம்.  

 உண்மைதானே! விளையும் பயிர் முளையிலே தெரியும்.

பாட்டி அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வார். என்னுடைய அப்பாவைப் போல் பூமிநாதனும் அறிவாளி. அவனுடைய அறிவை மெச்சும்பாட்டி அவனைப் பூமி என்று கூறுவார். என்ன ஆழமான அர்த்தம் அவனுடைய பெயரில்.

பூமிநாதன் ஆசிரியரிடம் அஞ்சாமல் சந்தேகத்தைக் கேட்பான். பின்னர் தனக்குத் தெரிந்த விளக்கத்தையும் சக மாணவர்களுக்குக் கொடுப்பான். ஆசிரியருக்கோ பூமிநாதனை நினைக்கும் தோறும் மட்டற்ற மகிழ்ச்சி. அடேயப்பா என்ன  சிந்திக்கிறாய் பூமி என்று சொல்லி அவனை மனமாரப் பாராட்டுவார். மற்ற மாணவர்களையும் கைதட்டச் சொல்லிப் பரவசம் அடைவார்.  

பெருமையின் உச்சத்தைத் தொட்டது பூமிநாதனின் மனம். அவன் சிந்தனை மாற்றுவடிவம் பெறத்தொடங்கியது. அறிவைக்கொண்டு பிறரை அடக்கி மகிழ்ந்தான். அக்கலையில் தொடர் வெற்றியும் பெற்றான். மற்றவர்களைச்  சிந்தனைத் திறன் குறைந்தவர்கள் என்று எண்ணத்தொடங்கினான். குறைவாக மற்றவர்களை எடைபோட்டு வந்தான்.  

பூமிநாதனின் மனப்போக்கை உணர்ந்தார் அவனுடைய அப்பா கதிரவன். அதனை முளையிலேயே கிள்ளி எறிய நினைத்தார். அவனுக்கு அவ்வப்போது மறைமுகமாக அறிவுரை கூறிவந்தார்.  அது பூமிநானுக்குப் பிடிக்கவில்லை. அவன் தனக்கு யாரும் அறிவுரை சொல்லும் அளவிற்குத் தான் இல்லை என்று நினைக்கத்தொடங்கினான். அதனால் அவர்களிடம் பூமிநாதன் பேச்சைச் சுருக்கினான்.  

சிக்கியவர்களிடமெல்லாம் தற்பெருமை பேசத்தொடங்கினான். அவனிடம் உறவாடிக்கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர்கள்கூட அவனைவிட்டு மெல்ல மெல்ல விலகத் தொடங்கினர். இதனைப் பூமிநாதன் புரிந்துகொள்வதற்கு ஆறுமாத காலம் எடுத்துக்கொண்டது.

 

வழக்கம்போல் பூமிநாதன் தனி அறையில் படுக்கப்போனான், அன்று  அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அப்போது தன்னைப் பற்றியும் தன் நண்பர்களின் நெருக்கத்தைப் பற்றியும் அசைபோடத்தொடங்கினான். அவர்கள் பிரிந்து சென்ற காரணத்தை உணர்ந்தபோது அவனுடைய மனம் வெயிலில் வாடிய மலர்போல வாடியது. கண்ணீர் மெல்ல மெல்ல வடியத்தொடங்கியது.

இப்படியே நாள்கள் பல செல்லாமல் சென்றுகொண்டிருந்தன. பூமிநாதன் தன் நணபர்களிடம் மனம்விட்டுப் பேசவேண்டும் என்று நினைத்தான். தைத்திருநாளும் வந்தது. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அன்று நண்பர்களும் உறவினர்களும் ஒன்றுகூடும் நாள் என்று பாட்டி சொன்ன பழைய செய்தி அவனுக்கு நினைவுக்கு வந்தது.

 

வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றான் பூமிநாதன். நண்பர்கள் விழாக்காலங்களில் ஒன்று கூடும் இடத்திற்கே சென்றான். அங்குச் சென்ற அவன் வாடிய முகத்துடன் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனருகில் நண்பர்கள் இல்லை. தூரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நண்பர்களில் ஒருவன் பூமிநாதனைப் பார்த்துவிட்டான். அவன் உள்ளத்தில் அன்பு கரைபுரண்டோடியது.  நண்பன் அனாதையைப்போல் அமர்ந்திருக்கிறானே, என்று சொல்லிக்கொண்டே பூமிநாதனிடம் ஓடிச் சென்று அவனைக் கட்டி அணைத்தான். அனைவரும் ஓடிவந்தனர். ஒன்றிணைந்தனர்.  

இக்கதையின் மூலம் நம்மிடமிருக்கும் அறிவை ஆக்கப்பூர்வச் செயல்களுக்குத் தான் பயன்படுத்த வேண்டும். அறிவு, ஆபத்து நேரும்போது நம்மைக் காக்கும் கருவியாகத்தான் இருக்க வேண்டும். அதனை மற்றவர்களின் மனத்தைப் புண்படுத்தவோ மற்றவர்களை உதாசிணப்படுத்தவோ ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதனால்தான் திருவள்ளுவர், அறிவு அற்றம் காக்கும் கருவி என்று கூறியுள்ளார் என்பதை நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.  


எழுதியவர்  ஆசிரியர் சி.  குருசாமி

Sunday, May 29, 2022

 


குயில்

நிறத்தில் கரியது குயில்

நீள்குரலில் இனியது குயில்

காலையில் கரைந்திடும் குயில்

கற்பனையில் மிதந்திடும் குயில்!


குரலை வைத்து அறிவோம்

கூவிடும் கருத்தைப் புரிவோம்

மழலையில் சொல்லிடும் கருத்தை

மகிழ்ந்து செப்பிடும் கதையை.


கேட்கத் துடிக்கும் மனமும்

கேட்டபின் நிலைக்கும் மனத்தில்

மனத்தில் புதைந்த கருத்தை

மந்திரப் புன்னகையில் சொல்லிடுமே! 

- சிகு

 


கண்டுபிடிப்போம் கண்டுபிடிப்போம் 

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கதைகளை விரும்பிப் படிப்பர்.   அப்படிக் கதைகளில் என்னதான் இருக்கிறது. அதை விரும்புவதற்குக் காரணங்கள் எவை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கதைகளில்  நம் முன்னோர்களின் வரலாறு இடம்பெற்றிருக்கிறது. அது அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறுகிறது. அதுமட்டுமல்ல கதைகள் நடைமுறை வாழ்க்கையைப் பற்றிக் கூறுகின்றன. மேலும், நாம் பின்பற்ற வேண்டிய  நீதி, நேர்மை போன்றவற்றைப் பற்றியும் கதைகள் விளக்குகின்றன. முக்கியமாக வாழும்முறையைப் பற்றி அறிந்துகொள்வதற்குக் கதைகளை நாம் அவசியம் படிக்க வேண்டும்.    

நாம் பல நேரங்களில் தொடர்ந்து பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஒருசில நேரங்களில் நம்முடைய சக்திக்கு மீறிய செயல்களிலும் ஈடுபட்டுவருகிறோம். அதனால், மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. அதனைப் போக்குவதற்கு நகைச்சுவைக் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் நாடிச்செல்கிறோம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. மேலும், நம் அறிவைப் பெருக்குகின்றன.    

சிறுவர்களுக்கு எழுதுகின்ற கதைகளும் இருக்கின்றன. அவை அவர்களுக்குக் கதை கேட்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நல்ல சிந்தனையை வளர்க்கின்றன. சிறுவர்களாக இருக்கும்போதே படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மேலும், புதிய சிந்தனை வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகின்றன. அதனால்தான் சிறுவர்கள் தொடர்ந்து கதைகளைப் படித்து வரவேண்டும். அவை அவர்களிடம் படைப்பாற்றல் சிந்தனையை உருவாக்கும். எதிர்காலத்தில்  படைப்பாளர்களாக வரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இது சமூகத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் பயன்படும். 


எழுதியவர் சிகு (127)

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Q1

கதைகளை எதனால் அவசியம் படிக்க வேண்டும்?

 

1

வாழும்முறையைப் பற்றி அறிந்துகொள்வதற்கு

2

முன்னோர் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கு

3

நடைமுறை வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்கு

4

பின்பற்ற வேண்டிய  நீதி, நேர்மையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு

 

Q2

நகைச்சுவைக் கதைகளை விரும்பிச் செல்வதன் காரணம் என்ன?

 

1

சக்திக்கு மீறிய செயல்களைச் செய்ய வேண்டும் என்பதால்

2

மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதை நீக்க வேண்டும் என்பதால்

3

சிந்தனையைத் தூண்டுகின்ற நிலைக்கு மாற வேண்டும் என்பதால்

4

அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் 

 

Q3

சிறுவர்கள் தொடர்ந்து கதைப் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மை யாது?

 

1

அவர்களிடம் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக

2

அவர்களின் புதிய சிந்தனைக்குப் பயன்படுவதால்

3

அவர்களிடம் படைப்பாற்றல் சிந்தனையைப் பெருக்குவதால்

4

அவர்கள் படைப்பாளர்களாக உருவாக வேண்டும் என்பதால்

 

 

கதைகள் படிக்க வேண்டிய அவசியம்

 

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கதைகளை விரும்பிப் படிப்பர்.   அப்படிக் கதைகளில் என்னதான் இருக்கிறது. அதை விரும்புவதற்குக் காரணங்கள் எவை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கதைகளில்  நம் முன்னோர்களின் வரலாறு இடம்பெற்றிருக்கிறது. அது அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறுகிறது. அதுமட்டுமல்ல கதைகள் நடைமுறை வாழ்க்கையைப் பற்றிக் கூறுகின்றன. மேலும், நாம் பின்பற்ற வேண்டிய  நீதி, நேர்மை போன்றவற்றைப் பற்றியும் கதைகள் விளக்குகின்றன. முக்கியமாக வாழும்முறையைப் பற்றி அறிந்துகொள்வதற்குக் கதைகளை நாம் அவசியம் படிக்க வேண்டும்.    

நாம் பல நேரங்களில் தொடர்ந்து பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஒருசில நேரங்களில் நம்முடைய சக்திக்கு மீறிய செயல்களிலும் ஈடுபட்டுவருகிறோம். அதனால், மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. அதனைப் போக்குவதற்கு நகைச்சுவைக் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் நாடிச்செல்கிறோம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. மேலும், நம் அறிவைப் பெருக்குகின்றன.   

சிறுவர்களுக்கு எழுதுகின்ற கதைகளும் இருக்கின்றன. அவை அவர்களுக்குக் கதை கேட்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நல்ல சிந்தனையை வளர்க்கின்றன. சிறுவர்களாக இருக்கும்போதே படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மேலும், புதிய சிந்தனை வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகின்றன. அதனால்தான் சிறுவர்கள் தொடர்ந்து கதைகளைப் படித்து வரவேண்டும். அவை அவர்களிடம் படைப்பாற்றல் சிந்தனையை உருவாக்கும். எதிர்காலத்தில்  படைப்பாளர்களாக வரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இது சமூகத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் பயன்படும். 


எழுதியவர் சிகு(127)

உருவாக்கம்    

செண்பகம் என்பவர் புதிய சிந்தனையை உடையவன். ஆனால், அவனுடைய சிந்தனையைச் செயல்படுத்த முடியவில்லை. அவன் ஒன்பது பிள்ளைகளுடன் பிறந்தவன். பெற்றோருக்குக் கடைக்குட்டி மகன். அவன் என்ன சொன்னாலும் வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவன் சின்னவன், அவனுக்கு என்னம்மா தெரியும் என்று சொல்லி அம்மாவின் வாயை அடைத்துவிடுவார்கள்.


வறுமையில் இருக்கும் அவனை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவனுடைய மாமா  அழைத்துச் சென்றார். அவர் பலகாரக் கடை ஒன்றை அங்கு நடத்தி வந்தார். செண்பகத்தைக் கடையில் எடுபிடி வேலை செய்வதற்கு வைத்துக்கொண்டார்.  செண்பகத்திற்கு வயிறு நிறைய உணவு. கைநிறைய செலவுக்குப் பணம். மேலும் மனநிறைவுடன் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு இருந்தான்.


செண்பகம் உணவுவிடுதியின் சமையல்காரரிடம் நெருக்கிப் பழகினான். நாட்கள் செல்லச் செல்ல அவர் செண்பகத்தின் நண்பராக மாறினார். சமையல்காரர் செண்பகத்திற்குப் பலகாரங்கள் செய்வதற்குக் கற்றுக்கொடுத்தார். ஆண்டுகள் சில சென்றன. செண்பகம் புதிய சிந்தனையுடன் பல புதிய பலகாரங்களைச் செய்து வந்தான். கடையில் பலகாரம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது. அவனுடைய மாமா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.


முதுமையின் காரணமாகப் பலகாரக்கடையைச் செண்பகத்திடம் ஒப்படைத்தார். காலப்போக்கில் அவன் செல்வந்தராக மாறினான். மாதம் இருமுறை ஏழைகளுக்கு இலவசமாக ஒரு  கிலோ பலகாரம் வழங்கி வந்தான். அதோடு மக்களுக்குத் தான தர்மமும் அவ்வப்போது வழங்கி வந்தான். அதனால், அவன் பேரும் புகழும் அடைந்தான். தம்முடைய குடும்பத்தினரையும் செண்பகம் ஆஸ்திரேலியாவிற்கு  அழைத்துச் சென்றான். அனைவரும் அங்கு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள்.

(சொற்களின் எண்ணிக்கை 150)

சிகு   

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 


கழுகு. (Eagle)

இவ்வுலகில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் ஒன்று பறவை ஆகும். பறவைகளில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றுள் சில வீட்டில் வாழ்கின்றன. பல காட்டில் வாழ்கின்றன. அவை காட்டில் உள்ள மரங்களிலும் செடிகளிலும் கூடுகள் கட்டி முட்டைகள் இட்டு தம்முடைய இனத்தைப் பெருக்கி வருகின்றன.

பறவைகளுள் ஒருசில கூர்மையான அறிவைப் பெற்றுள்ளன. ஒருசில கூர்மையான கண்பார்வையை உடையவைகளாக விளங்குகின்றன. அவற்றுள் ஒன்று கழுகு ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கழுகுகள் உயிர் வாழ்கின்றன. அவற்றுள் பலவகைகள் இருக்கின்றன. ஒருசில கழுகுகள் உடல் பருமன் குறைந்தவையாக இருக்கின்றன. ஒருசில அதிகமான எடையை உடையவையாக இருக்கின்றன.

கழுகுகள் நீண்ட காலம் உயிர் வாழும். வானத்தில் மிகவும் உயரத்தில் பறக்கும். மிக உயரமான இடத்தில் பறக்கும்போதுகூடத் தரையில் இருக்கும் பறவைகளையும் ஆடுகளையும் அடையாளம் கண்டுகொள்ளும். அவற்றை எளிதில் தூக்கிச் சென்று ஓர் இடத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும். பின்னர் அவற்றைக் கொத்தித் தின்றுவிடும். பொதுவாகக் கழுகுகள் உயிர் உள்ளவற்றை மட்டும் பிடித்துத் தின்னும்.          


(சொற்களின் எண்ணிக்கை 105)

சி.கு

 


பாசம் (சரிபார்க்கப்பட்டது)

ஓர் ஊரில் பறவைகள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்து வந்தன. ஒரு மரத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட பறவைகள் வாழ்ந்து வந்தன. அவை காட்டில் கிடைக்கும் உணவுப் பொருள்களைத் தின்று உயிர்வாழ்ந்து வந்தன. அந்தப் பறவைகள் பல இனங்களைச் சேர்ந்தவை. ஆனாலும், அவை மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. ஒரு பறவைக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டால் மற்றப் பறவைகள் வேண்டிய உதவியை அதற்குச் செய்யும். ஆபத்து ஏற்படும் காலத்திலும் ஒன்றுக்கொன்று உதவிசெய்து வாழ்ந்து வந்தன.

 

மகிழ்ச்சியாகச் சில வருடங்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில்   வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. பறவைகளுக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், அவற்றிற்கு வெப்ப நோய் ஏற்பட்டது. எனவே, பறவைகள் கொஞ்சங் கொஞ்சமாக அழியத்தொடங்கின. சில பறவைகளால் பறக்க முடியவில்லை. அவை சில நாட்களில் இறந்துவிட்டன. அதனால், ஒருசில பறவைகள் அந்தக் காட்டில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பறந்துவிட்டன.

ஒரே ஒரு மயில்மட்டும் அந்த மரத்திலேயே தங்கிவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் நிலைமை சிறிது சிறிதாகச் சீராகத் தொடங்கியது. ஒரு நாள் அந்த மயில் மரத்தின் உச்சியிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்தது. அதன் கண்ணுக்கு ஒரு சிறிய பாறையின் அடியில் சில உருண்டைகள் இருப்பதுபோல் தெரிந்தது. அதனால், மயில் அவை இருக்கும் இடத்திற்குப் பறந்து சென்றது. அவை அனைத்தும் முட்டைகள் என்பதை அது உணர்ந்துகொண்டது. அதனால்,  மயிலுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

மயில் அந்த முட்டைகளைப் பக்குவமாக வெயில் வைத்துச் சில நாள்கள் பாதுகாத்து வந்தது. அவை அனைத்தும் குஞ்சுகளாக மாறின. அவற்றைக் கண்ணுங்க கருத்துமாகப் பாசத்துடன் மயில் பாதுகாத்து வந்தது. பறவைகள் மீண்டும் அந்த ஊரில் மெல்ல மெல்லப் பெருகியது. தம் இனத்தின் வளர்ச்சியைக் கண்ட மயில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

8(சொற்களின் எண்ணிக்கை 178)

எழுதியவர் சி.கு

 

அனுபவம்    

முகிலனும் அகிலனும் நெருங்கிய நண்பர்கள். முகிலன் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் படைத்தவன். அவர்கள் இருவரும் உயர்நிலை இரண்டில் படித்து வந்தார்கள். முகிலன் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பவன். அவன் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களைக் கவனமாகக் கேட்பான். புரியாதவற்றைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வான்.

அகிலன் எதையும் பெரிதுபடுத்தமாட்டான். ஒவ்வொரு நாளும் எப்படிப் போகுமோ அதற்கு ஏற்றாற்போல் வாழக் கற்றுக்கொண்டவன். ஒரு நாள் வழக்கம்போல் இருவரும் பள்ளியில் இருந்து வீடு திரும்பினர். அப்பொழுது  மெல்ல மழை பெய்யத் தொடங்கியது. உடனே முகிலன் தன்னிடமிருந்த குடையை விரித்துப் பிடித்தான். ஆனால், அகிலனிடம் குடை இல்லை. ``பரவாயில்லை அகிலா, இருவரும் ஒரு குடைக்குள்’’ வீட்டிற்குப் போவோம் என்று முகிலன் சொன்னான். ஆனால், குடைக்குள் ஒருவர்தான் செல்லமுடியும்.

மழை சோவென்று பெய்யத்தொடங்கியது. காற்றுச் சுற்றிச் சுற்றி அடித்தது.   குடைக்குள் இருந்த இருவரும் நனைந்தனர். ஈர உடுப்புடன் அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.  இரண்டு நாள்களுக்குப் பிறகு முகிலனுக்குக் காய்ச்சல் வந்தது. அது அதிகரித்ததால் அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அகிலன் முகிலனைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்குச் சென்றான். அவனின் நிலைமையைப் பார்த்தான். அப்போது தன்னால்தான் தன்னுடய நண்பனுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று நினைத்தான். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல வடியத்தொடங்கியது. அதன்பின்னர் அகிலன், எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருந்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்து வாழத்தொடங்கினான்.     

                                        (சொற்களின் எண்ணிக்கை 135)

Saturday, May 28, 2022

 


படக்கதை மாதிரி


கதைகள் நமக்கு அறிவைக் கற்பிக்கின்றன. சிறு பிள்ளைகள் முதல் முதியர்கள் வரை கதைகளை விரும்பிப் படிப்பார்கள். எல்லாக் கதைகளும் நமக்குக் குறைந்தது ஒரு கருத்தையாவது சொல்லும். அவை நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்.

 

திருமதி கமலா அடுக்குமாடியில் குடியிருந்து வருகிறார். அவர் ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய கணவரும் ஒரு தொழில்சாலையில் வேலை பார்க்கிறார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அதனை வயது முதிர்ந்த  அம்மா பார்த்துக்கொள்கிறார்.

 

அன்று சனிக்கிழமை விடுமுறை நாள். கமலா வீட்டுக்கு வேண்டிய பொருள்களை வாங்குவதற்கு நினைத்தார். அதனால் தன்னுடைய பிள்ளையும் தூக்கிக்கொண்டு பேரங்காடிக்குச் சென்றார்.

 

திருமதி கமலா அங்கே தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கினார். பின்னர், தன்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு காசாளரிடம் சென்றார். அன்று பேரங்காடியில் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தார்கள்.

கமலாவின் குழந்தை அழத்தொடங்கியது.

 

அவர் வேண்டிய பொருள்களை  வாங்கிய பின்னர் வீட்டிற்குத் திரும்பினார். பேரங்காடியில் குழந்தையையும் பொருள்களையும் அவரால் தூக்க முடியவில்லை. கடையின் உதவியாளர் இவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் விரைவாக வந்து கமலாவுக்கு உதவி செய்தார்.

 

கமலா தன்னுடை பிள்ளையைத் தூக்கிக்கொண்டு நடந்தார். உதவியாளர் பொருள்களை கடையின் வாசல்வரை கொண்டுவந்தார். அப்பொழுது வாடகை உந்துவண்டி வந்தது. கமலா பொருள்களை உந்துவண்டியில் ஏற்றிக்கொண்டு தன்னுடைய பிள்ளையுடன் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.

 

இக்கதையிலிருந்து மற்றவர்கள் கேட்காமலே நாம் முன் வந்து உதவி செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

 

 

 

 


மாதிரி மின்னஞ்சல்

 அன்புள்ள பாபு   

 

வணக்கம். நீ நலமாக இருக்கின்றாயா? உன் நண்பர்கள் நலமா?

உன் கடிதம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எனக்கும் தேர்வு தொடங்கப்போகிறது. அதனால்தான் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியவில்லை; மன்னிக்கவும்.

 

நானும் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி என்னுடைய பெற்றோரிடம் கருத்துக் கேட்டுள்ளேன். அதோடு என் மாமாவிடமும் கருத்துக் கேட்டுள்ளேன். என்னுடைய நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.  என்னுடைய ஆசிரியரிடமும் சில வழிகளைக் கேட்டுள்ளேன். அவர்கள் சில வழிகளை எனக்குச் சொன்னார்கள். அவை நிச்சயமாக எனக்கு உதவிசெய்யும். 

 

இறுதியாக நான் அறிவியல் துறையில் (மருத்துவத்துறை, ஆசிரியர், எழுத்தர். விளையாட்டு வீரம், இராணுவத்துறை, ஆராய்ச்சியாளர், பேராசிரியர்)

 

அதற்கு உரிய புத்தகங்களை அவ்வப்போது படித்துவருகிறேன். புத்தகங்களின் மூலம் புதிய செய்திகளைத் தெரிந்துவருகிறேன். அச்செய்திகளில் சந்தேகம் வந்தால் என்னுடைய பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஒருவேளை என்னுடைய பெற்றோருக்குச் சந்தேகம் இருந்தால் அவர்களுடைய நண்பர்களிடம் கேட்டு எனக்கு வழிகாட்டுவார்கள்.

 

இதனால் எனக்குச் சில யோசனைகள் வந்துள்ளன. அவற்றைப் பின்பற்றி அதற்குரிய பாடங்களையும் கவனமாகப் படித்து வருகிறேன்.

 

இவற்றின் மூலம் என்னுடைய எதிர்காலத்தைச் சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

 

எனக்குப் பதில் எழுதவும்.

 

நன்றி