Sunday, March 8, 2026

 


பேச்சில் சர்க்கரை

நம்மைநாடி வந்தோரைநாம் மதித்திடவேண்டும்

நாம்நாடிச் செல்வோரும் உதவிடவேண்டும்

கல்வியில் சிறந்தோராயினும் கடுந்திட வேண்டாம் 

கற்றோன் என்போன் கடுஞ்சொல் தவிர்ப்போனே!


நன்றிமறவாமை நாம் சேர்க்கும் புண்ணியமே

நம்மைவந்து  ஒருநாள் காத்திடுமே

கூடிக்கும்மி  அடித்திட வேண்டும் 

நம்புபவரைக் என்றும் கும்மி அடித்திடவேண்டாம்!.


உதவிசெய்வதைக் கற்றுக் கொடுத்திடுவார்

உதவியென்றபோது ஓதுங்கி நின்றிடுவார்

பேச்சில் சர்க்கரையாய் இருந்திடுவார்

பேசும்போது புன்னகையும் பூத்திடுவார்


சொல்லும் செயலும் இணைந்திடவேண்டும் 

சொர்க்கத்தை அதுவே காட்டிநிற்கும் 

பாகக்காயாய் கசந்திட்ட போதும்

பாதகமில்லாமல் நடந்திட வேண்டுமே!

-சிகுரு



Tuesday, February 24, 2026

 


                       புறாக்கூடு


புறாவைப் பார்த்து மகிழ்ந்திடுவேம் 

புறா கூட்டையும் பார்த்து மலைப்போம்  

புறாவந்து அடைந்திடும் மாலையிலே

புறா சென்று பறந்திடும் காலையிலே!!


முட்டை சில போட்டிடுமே

மூடி அதுஅடை காத்திடுமே

எட்டி நின்றும் பார்த்திடுமே

இனிய குஞ்சும் வந்திடுமே!!


பறக்கக் கற்றுக் கொடுத்திடுமே

பறந்து பறந்து விழுந்திடுமே

பறந்து நன்கு சென்றிடுமே

தாயை மறந்து வாழ்ந்திடுமே


குஞ்சுதனைக் கூட்டில் காத்திடுமே

கொஞ்சி அகம்  மகிழ்ந்திடுமே

கொஞ்சகாலம் பறந்து போனதுமே

கொஞ்சும் நிலையும் மறந்திடுமே


வாழும் காலம் முடியும் நிலையில் 

வாழ்வைக் கொடுப்பார் யாருமில்லை

கொத்திக் கொத்தி நின்றிடுமே 

கொத்த மறந்து போயிடுமே!!


புறா வாழ்க்கை போன்றதே 

பூரிப்பு நிறைந்த மனித வாழ்க்கை 

எண்ணிப் பார்த்திட வேண்டுமே

எண்ணிக் கற்றிட   வேண்டுமே!!


ஏக்கம் நமக்கு நீங்கிடுமே 

ஏற்றம் வந்து சேர்ந்திடுமே!!

என்றும் மகிழ்ந்து இருந்திடுவோமே

எல்லோரையும் மதித்து வாழ்ந்திடுவோமே!! 

----------சி.குரு


Sunday, February 22, 2026

 

கொடுக்காமலும் எடுக்காமலும்

உல்லாசம் பொங்கிடும் போதுநம்

உள்ளமெல்லாம் நிறைந்து மகிழ்ந்திடுமே!

உண்மையில் நின்று உயர்ந்திடும்போது

உருவமெல்லாம்  சிலிர்த்து நிற்குமே!


உண்மையை நாம் உணர்ந்திடும்போது

கள்ளமில்லா கவிதைபாடி நின்றிடுமே

மெல்ல மெல்ல மகிழ்ந்திடுவோம்

மேன்மை பெறும் செயல்களாலே!


கொடுக்காமல் நாம் இருந்திட்டாலும் 

எடுக்காமல் இருந்திடல் வேண்டும்

எடுக்காமல் இருந்திடும்போது நம்மனம்

படுக்காமல் நிமிர்ந்து நிற்குமே!

- சிகு




                  வாழ்க்கை


வண்ணமயமாக நாம் வாழ்ந்திட
வாழும் முறை அறிந்திட வேண்டும்
வற்றாத பிரச்சினை வந்திடினும் 
வளமாக மாற்றிட வழிகள் பலவுண்டு

வழிதெரியா மனிதன்கூட வழியறிவான்
வழியறியும் சிந்தனைப் பெருக்கத்தாலே
வாழ்கைதனில் உயர்ந்து நிற்பான்  
வாழும்முறை அவன் அறிந்திடும்போதே.

செல்லும்வழியில் சிக்கல் பலவாயினும்  
சிறப்பினை உணர்ந்து சென்றிட வேண்டும்
சிறப்பினை உணர்ந்து சென்றிடும்போது
சிக்கல்தானே சுழியமாகிச் சிதறிப்போகுமே!

----------------------------சி.கு


Tuesday, February 3, 2026

 

சொல்லும் கதையைச் சொல்லியே தீரனும்!


சொல்லாமல் சொல்லுவோம் எதனையும்

சொல்லும்போது ஏற்படும் மனவருத்தம்

சொல்லாமல் சொல்லும்போது மறைந்திடுமே

சொன்னதை சொன்னாலும் வருத்தமே

சொல்லாமல் இருந்தாலும் பெருவருத்தமே!


யார்சொன்னாலும் கேட்காத பிள்ளைகளும்

கேட்டுத்தான் ஆவாரே சொல்பவர் சொன்னால்

அன்புடன்  சொன்னால் அமைதியாக இருப்பர்

அதட்டிச்  சொன்னால் மறுத்திடுவார்!


அம்மா சொன்னாலும் சிலநேரம் எதிர்த்திடுவர்

அறிவுரை சொன்னாலே வெறுத்திடுவார் 

சொல்லுவார் சொன்னால் சுவரும் மறைத்திடாது

சொல்லும் கதையைச் சொல்லியே தீரனும்!.


Friday, June 6, 2025

 

சின்ன சின்ன


சின்ன சின்னக்கிளி-அது

சிங்காரக் கிளி! 

வண்ண வண்ணக் கிளி

அது வண்ணம் நிறைந்த கிளி

சொன்ன பேச்சைக் கேட்குமே

சொன்னதையும் சொல்லுமே!!


கொத்திக்கொத்தித் தின்னுதே

கூட்டமாய் நின்று பேசுதே

கொடுத்துக் கொடுத்துத் தின்னுதே

கொஞ்சிக் கொஞ்சி பேசுதே!!


சின்னச் சின்னக் கிளி

அது சிங்காரக் கிளி!

கோபம் கொண்டு விழிக்கிதே

கொத்திக்கொஞ்சம் பார்க்குதே

அக்கம் பக்கம் போனாலது  

விரட்டி நம்மை ஒதுக்குமே!


சின்னச் சின்னக் கிளி

அதுசிங்காரக்கிளி!

பசுமை தழைக்க உதவுதே

பலமையில் தூரம் பறக்குதே

நல்விதையை அங்கு தூவுதே

மரமும் செடியும் வளருதே

மழையை அதுகொடுக்குதே

உலகம் செழித்துவளருதே

உயரநமக்கு உதவுதே!

 

சின்னச்சின்னக் கிளி

அது சிங்காரக்கிளி!!

-சிகு




 

வற்றாத பண்பு


வற்றாத பண்பு நமக்கு என்றும் வேண்டும்

வளமான வாழ்வினைப் பெற்றிடவேண்டும்

வாழும்முறையினை அறிந்திடவேண்டும்

வயதானபின்னருமது தொடர்ந்திடவேண்டும்!


நெஞ்சம் நல்லுணர்வினைப் பெற்றிடவேண்டும்

நெஞ்சாரப் பிறரை மதித்திடவேண்டும்

பெற்றோரைத் தெய்வமாய்ப் போற்றிடவேண்டும்

மற்றோரை அதுபோல மதித்திட வேண்டும்!!

- கவிமொழி -சிகு

 

பக்குவம் பெற்றிட


வெற்றிமீது வெற்றி விரைந்து வந்திடினும்

வீரர்களை ஏற்றிடும் விழாமனம் வேண்டும்

தம்மிடம் இருப்போரைத் தழுவிச் செல்லும் 

தரமிகுந்த உள்ளம் தரணியில் வேண்டும்!


எத்தனை சிறப்புகள் இப்புவியில் பெற்றிடினும்

மாறா மனிதநேயம்  இருந்திட வேண்டும்

பணிபல முடித்திடினும் பார்போற்றும் நிலைவந்திடினும்

பதமுணர்த்தும் பக்குவமான சோறாகிட வேண்டும்!


உத்தமராய் இவ்வுலகில் வாழுமெண்ணம்  வேண்டும்

தத்துவம் அறிந்திடினும் மனத்தத்துவம் உணர்ந்திடவேண்டும்

உண்மையாய் வாழ்ந்திடவே உயர்ந்தகொள்கைதனை

உள்ளத்தில் வகுத்தொளிவின்றி உயர்ந்து நின்றிடவேண்டும்!. 

- கவிமொழி - சி.கு


Sunday, April 20, 2025

 பார் போற்றும்  நற்குணம்


பகையில்லா நல்லுலகம் என்றும் வேண்டும்

பகுப்பில்லா உள்ளம் நமக்கு வேண்டும்

பார்போற்றும் நற்குணம் சிறக்க வேண்டும்

பரந்துபட்ட சிந்தனை வளர வேண்டும்!


சங்கக் கவிஞரின் கனவு மெய்ப்பட வேண்டும்

சங்கமிக்கும் நல்லுள்ளம் நிலைக்க வேண்டும்

பூனையும் கிளியும் சேர்ந்து வாழ்ந்திட வேண்டும்

புவியில் ஒற்றுமை நிலைத்திட வேண்டும்!


கார்போன்ற நற்கொடை நெஞ்சம் வேண்டும்

காட்டாறு போலது விரிந்திட வேண்டும்

கல்வியில் இவ்வுலகம் சிறந்திட வேண்டும்

கல்லாமை இல்லாமை ஆகிட வேண்டும்!

- சிகுரு

 


கசக்கிப் பிழிந்த வேடன்


சோவென்று பொழிந்தது மழை

சொர்க்கமாக நினைத்தது வயல்

சொல்லிப் பூத்தன பூக்கள்

சொல்லாமல் சென்றன ஈக்கள்!


கொண்டு சென்றன தேனை

குடித்து மிதந்தன காற்றினில்

கூட்டை அடைந்தன ஈக்கள்

கொட்ட மறந்து தூங்கின!


காட்டில் வாழ்ந்த மனிதனோ

கண்ணில் பட்ட தேனடையை

கசக்கிப் பிழிந்தான் கருவுடனே

கதறித் துடித்தன ஈக்கள்!


என்ன மகிழ்ச்சி மனத்தில்

துள்ளிக் குதித்தான் வேடன்

கொண்டு கொடுத்தான் பண்ணையில்

கூலி கொடுத்தார் பண்ணையாரே!


இனிப்பாய் நினைத்தான் வேடன் 

இதயம் பிழிந்ததை மறந்தான்

உள்ளம் துடித்த ஈக்களோ 

உலகை மறந்தன அப்பொழுதே!

------சிகுரு


Friday, January 10, 2025

 11.01.2025

சிறுகதை 


நினைவு 

இரவு ஏழு மணி. இருள் சூழ்ந்துவிட்டது. வானம் மப்பும் மந்தாரமாக இருந்து. இப்பப் பொழிவோம் பிறகு பொழிவோம் என்று தக்கத் தருணத்திற்குக் காத்துக்கொண்டிருந்தது மழை. அந்நேரத்தில் நிலவின் முகம் தென்படத்தொடங்கியது. அந்த இருட்டில் கல்தரையில் காலடி எடுத்துவைக்கும் சத்தம் மெல்ல வந்தது. யோரே இருட்டில் வருகிறார்கள் அம்மா என்று வேணி கூறினாள். யாரும் வரவில்லை அது உன்னுடைய பிரமை பேசாமல் வா என்று அம்மா மேகலை கூறினார். அவரின் குரல் சற்று அதட்டலுடன் தூக்கி இருந்தது. மனத்தில் வேகம் பிறந்தது.

 

பள்ளியில் இருந்து அம்மாவுடன் திரும்பி வந்துகொண்டிருந்த வேணி அம்மா சொல்லியதைக் கேட்டதும் வாடத்தொடங்கினாள். அந்த நேரத்தில் மீண்டும் அதே காலடிச் சத்தம். இப்பொழுது வேணியின் தாயாருக்குச் சற்றுப் பயம் ஏற்பட்டது. நெஞ்சு படபடவென மெல்ல மெல்ல அடிக்கத் தொடங்கியது. திரும்பிப் பார்க்காமல் அமைதியாக நடந்தார். ஆனால், காலடிச் சத்தம் அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்தது. சுமார் ஐம்பது அடி தூரம் அவர்கள் வேகமாக நடந்து சென்றபின், சத்தம் நின்றது. என்னதான் நடந்து வருகிறது என்ற அச்சத்துடன்  மேகலை திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது அவள் கண்ட காட்சி நெஞ்சை உலுக்கியது. பெரியவர் ஒருவர் பாதையின் ஓரத்தில் இருக்கும் சிறிய சுவரில் அமர்ந்து தரையில் உணவுப்பொட்டலத்தை விரித்து வைத்திருந்தார்,

 

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பூனை அங்கு வந்தது. அது பெரியதாக இருந்தது. சாம்பல் நிறத்தில் காட்சி தந்தது. மெல்லத் தரையில் விரித்திருந்த உணவுப்பொட்டலத்துக்கருகில் சென்றது. மெல்லிய குரல் எழுப்பியது. மூன்று குட்டிகளும் அங்கு வேகமாக ஓடி வந்தன. எல்லாம் பகிர்ந்து உண்டன. வயிறு நிரம்பியது. வாழும் இடத்தை நினைத்தன. முதலில் குட்டிகள் அருகில் இருந்த அடர்ந்த செடிகளுக்கிடையே சென்றன. அப்போது மெல்லிய ஒலி வந்தது. தாய்ப்பூனை தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து  அந்தப் பாதையின் வழியே புதரை நோக்கிச் சென்றது. இதனை அன்போடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

 

அந்த முதியவரை அச்சமின்றி அருகில் வந்து உற்றுக் கவனித்தனர் தாயும் மகளும். மேகலையின் கண்களிலிருந்து கண்ணீர் மெல்லக் கசிந்தது. வாணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சிறிய பிள்ளைதானே!. மேகலையைக் கவனித்த அந்த  முதியவர் அவளுக்கு ஆறுதல் கூறிச்சென்றார். அவர் அங்கிருந்து மறையும்வரை தாயும் மகளும் மாறுபட்ட பார்வையில் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.  

சிகுரு


Thursday, September 7, 2023

 


கவிதை - கூடியகம் மகிழ


சின்ன சின்ன பறவை

சிறகை விரிக்கும் பறவை

வண்ண வண்ண பறவை

வடிவம் மின்னும் பறவை


வட்டமிட்ட மிட்டுப் பறக்குதே 

வாழ நினைத்துப் பறக்குதே

காலால் பிடித்துப் பறக்குதே

காட்டில் போய் நிற்குதே!


துள்ளித் துள்ளிப் பறக்குதே

துயரம் மறந்து பறக்குதே

தன்னை மறந்து பறக்குதே

தன்வாழ்வு சிறக்கப் பறக்குதே!


அங்கும் இங்கும் பறக்குதே

அழகாய் விரித்துப் பறக்குதே

அலகால் கொத்தி எடுக்குமே

அளவாய் உண்டு மகிழுமே!


குஞ்சை நினைத்துப் பறக்குதே

கூட்டை நோக்கிப் பறக்குதே

கூடியகம் மகிழப்  பறக்குதே  

கொள்ளை இல்லா இன்பத்தாலே!

                                                 - சிகுரு

Thursday, August 24, 2023

 

அலுவலக மின்னஞ்சல்

ஒரு பிரிவு 

பாராட்டு மின்னஞ்சல்


எழுதுபவர் பற்றிய விவரம் 

கடிதம் எழுதுவதன் நோக்கம்

பாராட்டுக்குப் பொருத்தமான தகவல்களை அளித்தல்

எடுத்துக்காட்டு

சாதனைசெய்த மேதைகள், உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், குடும்ப வளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள்,  நடுவு நிலைதவறாத தீர்ப்பு வழங்குபவர்கள், ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டுபவர்கள், அன்பான குணம் படைத்தவர்கள், சிறந்த பண்பு நிறைந்தவர்கள், 

இயற்கைப் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுத்ததன் காரணத்தால் பாராட்டுதல், ஏழை நாடுகளுக்கு உதவி செய்ததால் பாராட்டுதல், முற்போக்குச் சிந்தனை வளர்ச்சி உடையவராக இருந்தால் பாராட்டுதல், 

உழைப்பால் உயர்ந்த நல்வழிகாட்டியைப் பாராட்டுதல், அறிவியல் சிந்தனையாளர்களைப் பாராட்டுதல், பாராட்டும் வண்ணம் சிறப்புப் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரைப் பாராட்டுதல், இலக்கியச் சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் பாராட்டுதல், நல்வழிகாட்டிகளாக விளங்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்.


Tuesday, August 15, 2023

 

ஒலிப்பதிவு செய்யவும்

ஒரு காட்டில் இரண்டு சிங்கங்கள் வசித்தன. அவை இரண்டும் நன்றாகப் பழகும் குணமுடையவை. எப்போதும் மற்ற விலங்குகளிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்ளும். ஆனால், நாள்தோறும் பசிக்கும்போது தனக்குப் பிடித்த விலங்குகளை மட்டும் கொன்று தங்களுடைய பசியைப் போக்கிக்கொள்ளும்.


அதனால், மற்ற விலங்குகளுக்குச் சிங்கங்களைப் பிடிக்காது. அவை சிங்கத்தைப் பார்த்தாலே ஒழிந்துகொள்ளும். இந்தச் செயல் சிங்கங்களுக்கு வருத்தத்தைத் தந்தது. அவை பசி இல்லாமல் இருந்தால் மற்ற விலங்குகளைக் கொல்லும் நிலை ஏற்படாது. அந்த இனமும் அழியாது என்று நினைத்தது. அதனால், அவ்வப்போது அவை வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.  ஆனால், இயற்கை விலங்குகளைக் கொன்று தின்னும் பழக்கத்தை விலங்குகளுக்குக் கொடுத்ததன் ரகசியத்தை அவை புரிந்துகொள்ளவில்லை. அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டால் அவை மகிழ்ச்சியுடன் வாழும்.  

சிகுரு

Monday, August 14, 2023

  பிழை நீக்கம்  

விலக்கம். 

வாக்கியம் (சொற்றொடர்) என்பது கறுத்துநிறைந்து கருத்து முடிந்து இருக்க வேண்டும்.

கருத்துச் சரியாக புரியவில்லை என்றாலும் அதனை வக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

சுறுக்கமாகச் சொன்னால் சொல்லவந்த பொருள் தெலிவாகப் புரிந்துகொள்ளும் வன்னம்  இருக்க வேண்டும்.

எழுத்து சொல்லாக மாறி, சொற்கள் வாக்கியங்களாக மாரும்.

பூ என்ற எழுத்தை எழுத்தாகவும் கொள்ளலாம் செல்லாகவும் கொள்ளலாம்.


பிழை நீக்கம் 

ஒரு வாக்கியத்தை எத்தனை வடிவமாக மாற்றினாலும் அது  கருத்துமாறாமல் இருக்குமானால் அது கறுத்துமாறா வாக்கியம் ஆகும். 

கந்தன் கடைக்கு  சென்று பொருள் வாங்கி வந்தான். 

கடையிலிருந்து கந்தன்  பொருல் வாங்கி வந்தான்.

சாலையில் மேடு பல்லமாக இருந்தால் குமார் வழுக்கி வழுக்கி விழுந்தான்.

குமார் வழுக்கி விழுந்ததற்கு காரணம் சாலை மேடு பள்ளமாக இருந்ததனே.

சாலை மேடு பள்ளமாக இல்லாமல் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 

சாலை சமைநிலையில் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 


 வாக்கியம் (சொற்றொடர்) 

விளக்கம். 

வாக்கியம் (சொற்றொடர்) என்பது கருத்துநிறைந்து கருத்து முடிந்து இருக்க வேண்டும்.

கருத்துச் சரியாகப் புரியவில்லை என்றாலும் அதனை வாக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

சுருக்கமாகச் சொன்னால் சொல்லவந்த பொருள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்.

எழுத்து சொல்லாக மாறி, சொற்கள் வாக்கியங்களாக மாறும்.

பூ என்ற எழுத்தை எழுத்தாகவும் கொள்ளலாம் சொல்லாகவும் கொள்ளலாம்.


கருத்துமாறா வாக்கியங்கள்

ஒரு வாக்கியத்தை எத்தனை வடிவமாக மாற்றினாலும் அது  கருத்துமாறாமல் இருக்குமானால் அது கருத்துமாறா வாக்கியம் ஆகும். 

கந்தன் கடைக்குச் சென்று பொருள் வாங்கி வந்தான். 

கடையிலிருந்து கந்தன் பொருள் வாங்கி வந்தான்.

சாலையில் மேடு பள்ளம் இருந்தால் குமார் வழுக்கி வழுக்கி விழுந்தான்.

குமார் வழுக்கி விழுந்ததற்குக் காரணம் சாலை மேடு பள்ளமாக இருந்ததனே.

சாலை மேடு பள்ளமாக இல்லாமல் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 

சாலை சமநிலையில் இருந்தால் குமார் வழுக்கி விழுந்திருக்க மாட்டான். 



 

பிழை நீக்கம்


கோபாலும் அவனுடைய நண்பர்களும் காடைக்குப் பொருள்கள் வாங்கச் சென்றனர். அவர்களைக் கண்ட கடைக்காரர் வருக வருக என்று கூறினார். இதைக் கேட்ட கோபாலுக்கு ஆச்சரியமாக இருந்தன. அவனுடைய நண்பர்களுக்குப் புதுமையா இல்லை. அதனால், அவர்கள் அக்கடைக்கு அடிக்கடி வந்து சென்ற அனுபவம் உடையவர்கள். கடைக்காரர் இப்படித்தான் பேசுவார் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிவிட்டு விட்டிற்குத் திரும்பிச் சென்றனர். 

அவர் செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினர். பின்னர், வீட்டிற்குச் சென்றனர். அவர்களை கண்டவுடன் கோபாலன் அம்மாவுக்கு வறுத்தம் ஏற்பட்டது. அதனால், அவர் மதிய உணவு தயாரிக்க வேண்டிய நிலையில் இருந்தார். மதிய உணவு உன்பதற்கு நேரம் அதிகம் ஆகிவிடும் என்று நினைத்தார்.  ஆனால், அவர் வேகமாகச் சமைத்து உறிய நேரத்தில் அனைவருக்கும் விருந்தளித்தார். வீட்டிற்கு வந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். 


Thursday, August 3, 2023

 

சிறு கதை - புத்துணர்ச்சி


அதற்குக் கோபி, `அது ஒன்றும் இல்லை அம்மா, இன்று பள்ளிக்கூடம் போவதற்குச் சலிப்பாக இருக்கிறது. மனம் சோர்ந்துவிட்டது. சில நேரங்களில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் புரியமாட்டங்கு. அதை மீண்டும் படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கிறது. தேர்வும் வரப்போவதாக ஆசிரியர் சொன்னார் அதுதாம்மா நினைத்தாலே பயமாக இருக்கிறது`

இதற்கெல்லாம் சோர்வாகிவிடாதே இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் வரும் நாம் அவற்றை எல்லாம் சமாளித்துப் பழகிக்கொள்ளவேண்டும். எப்போதும் பிரச்சினையைப் பார்த்துப் பயப்படக்கூடாது. அதை எப்படிச் சரி செய்வது என்பதைப் பற்றித்தான் யோசிக்கவேண்டும் கோபி. நீ பள்ளிக்கூடம் போய்வா. நானும் அப்பாவும் இன்று இரவு உன்னிடம் சில யோசனைகளைச் சொல்கிறோம். எல்லாம் சரியாகப் போய்விடும் என்றார் அம்மா. 

கோபியின் மனத்தில் சற்றுத் தெம்பு ஏற்பட்டது. பலவீனமான மனம் பதட்டமில்லாமல் இருந்தது. அம்மா சொல்லிய ஆறுதல் கருத்துகளைப் பற்றி யோசித்துக்கொண்டே கோபி சாலையின் ஓரத்தில் நடந்து சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த அவனுடைய மாமாவைச் சந்தித்தான். அவனுடைய மாமாவும் கோபியைப் பார்க்க அவனுடைய வீட்டிற்குச் சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னார். 


மாமாவைக் கண்டதும் கோபிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. மனக்கவலை காற்றில் பறந்துசெல்லும் இலையைப்போல் பறந்து சென்றது. அன்று முழுவதும் கோபி வகுப்பறையில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அன்று ஆசிரியர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. 

பள்ளிமுடிந்து தன்னுடைய நண்பன் அரவிந்தனுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது அரவிந்தன் கோபியின் படிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றான். அரவிந்தன் படிக்கும் முறையைப் பற்றிக் கோபியிடம் சொல்லிக்கொண்டே சென்றேன். அவன் சொல்லிய கருத்துகளை எல்லாம் ஆழமாகப் புரிந்துகொண்டான் கோபி. 

கோபியை எதிர்பார்த்து வீட்டினர் காத்திருந்தனர். கோபி மகிழ்ச்சியுடன் வந்ததை நினைத்து பெற்றோர்களும் அவனுடைய மாமாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு நேரம் அனைவரும் அமர்ந்து கோபிக்குப் படிக்கும் முறை பற்றி எடுத்துக்கூறினர். கோபியின் மனத்தில் இருந்த சந்தேகங்களுக்குத் தீர்வு கிடைத்தது. மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றான் கோபி. 

Monday, July 31, 2023

 


         நேரம்

நம்மைக் கணிக்கும் நேரம்

நாம் கணிக்கும் நேரம்

நன்மை தரும் நேரம்

நலம் காக்கும் நேரம்


நல்லோர் சொல்லும் நேரம்

நலம்பாடி வரும்நல் நேரம்

நன்மையே  தருமின்ப நேரம் 

நாளெல்லாம்  காக்கும் நேரம். 


நாம் மகிழும் அகநேரம்

நலங்காக்க உதவும் நேரம்

கண்ணைப்போல் காக்க வேண்டும் 

காலமெல்லாம்  காக்கும் நேரமே!

                                                          - சிகுரு


Sunday, July 30, 2023

 


பொருத்தமான விடையைக் கண்டுபிடித்து எழுதவும்.  


ஒருநாள் ஒரு செடியில் பூத்த மலர் மறுநாள் வாடிப்போய்விடும். அதற்காக அந்தச் செடி வருந்துவது கிடையாது. ஏனென்றால்  மறுநாள் புதிய மலர் பூக்கத்தொடங்கிவிடும். பூத்த மலர்களைக் கண்ட நம் உள்ளம் பூரிப்படைகிறது. அந்தச் செடியும் மிகவும் அழகாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிடும். மேலும், அது அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ச்சி பெறத்தொடங்கிவிடுகிறது. ம ம அதுபோலதான் மனிதனுடைய வாழ்க்கையும் நாள்தோறும் பல மாற்றங்களை அடைந்துகொண்டே செல்கிறது. 

இந்த மாற்றங்கள் நம்மை அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்கிறது. நாள்தோறும் புதுப்புது சிந்தனை ஏற்படுகிறது. இந்தச் சிந்தனையின் மூலம் நாம் தொடர் வளர்ச்சி பெறுகிறோம். இந்த வளர்ச்சி  குடும்ப வளர்ச்சியாகத்  தோன்றிச் சமூக  வளர்ச்சியாக மாறுகிறது.  இன்னும் சொல்லப்போனால்  ஒரு நாட்டின்  வளர்ச்சியாக மலர்கிறது. பல நாடுகளின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

 

வினாக்கள்.


அடைப்புக் குறிக்குள் சரியான விடையின் எண்ணைத்

தேர்ந்தெடுத்து எழுதவும்


எப்போது நம் மனம் மகிழ்ச்சி அடைகிறது?


1 பூத்த மலர் வாடிவிடும்போது

2 புதிய மலர்களைக் கண்டபோது

3 செடி வருந்தாமல் இருக்கும்போது

4 செடி அழகாகத் தோன்றும்போது               (           )



2 மனிதனுடைய வாழ்க்கை என்ன செய்து கொண்டிருக்கிறது?


1 அடுத்த கட்டத்தை நோக்கி வளர்கிறது

2 அழகாகத் தோற்றமளிக்கிறது

3 நாள்தோறும் பல மாற்றங்களைப் பெறுகிறது

4  எப்போதும் வருந்தாமல் இருக்கிறது           (            )



3 எப்போது நாம் தொடர்வளர்ச்சியைப் பெறுகிறோம்?


1 புதுப் புது சிந்தனை ஏற்படும்போது

2 குடும்பம் வளர்ச்சி அடையும்போது

3 சமூகம் வளர்ச்சி அடையும்போது

4 உலகம் வளர்ச்சிக்கு வித்திடும்போது        (            )



சுயவிடைக் கருத்தறிதல். 



1 மனிதனுடைய வாழ்க்கையை எதனோடு ஒப்பிடுகிறோம்? ஏன்?


_________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________ 


2 இந்த உலகத்தின் வளர்ச்சிக்கு எவை எல்லாம் காரணங்களாக விளங்குகின்றன?


______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________