Saturday, May 28, 2022

 

படக்கதை  எழுதுவதற்குரிய குறிப்புகள்

படத்தை அல்லது படங்களை நன்கு பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.


படக்கதை  ஒரு முன்னுரை, கதை விளக்கம் கதையின்  முடிவு என்ற  அமைப்பில் நான்கு  பத்திகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.


படங்களின் தொகுப்பு வெளிப்படுத்த விரும்பும் கருப்பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

படத்தின் பின்னணியைப் பற்றிய செய்தியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

படங்களுக்கு இடையே இருக்கக் கூடிய  தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கற்பனைத் திறனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

படங்களில் எண்ணக்கூடிய அளவிற்கு ஆட்கள்  இருந்தால் கற்பனையாகப் பெயர்கள் கொடுத்துக்கொள்ளலாம்.


ஆட்களோ விலங்குகளோ கூட்டமாக  இருந்தால் பெயரிட வேண்டும் என்று அவசியம் இல்லை. 


படங்கள்  சொல்லும் கற்பனைக் கதையைப் புரிந்துகொள்ள வேண்டும்.


கருப்பொருள் மாறாமல் கதையைக் கொண்டு செல்ல  வேண்டும்.

படக்கதை  சொல்லவிரும்பும் கருத்தைத் தெளிவாக விளக்க  வேண்டும். 


படக்கதையிலிருந்து  அறிந்துகொண்ட செய்திகளை விளக்க  வேண்டும்.


படக்கதை நமக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் உலகத்திற்கும் கருத்தைத்  தெளிவாக  எழுத வேண்டும்.

Thursday, May 26, 2022

 கதையும் சிந்தனையும் – 2

உழைப்புக்கேற்ற ஊதியம்

 

ஓர் ஊரில் குன்னிமுத்து என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வறுமையில் சிக்கித் தவித்து வந்தார். குன்னிமுத்து, கட்டட வேலைக்குரிய இரும்புக் கம்பிகளை வெட்டிக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவர் மற்றவர்களிடம் பேசும்போது சற்றுக் குனிந்து பணிவாகப் பேசுவார். அதனால்தான் முத்து என்ற அவருடைய பெயருக்கு முன்னால் குன்னி என்ற பட்டப்பெயர் வந்தது. குன்னிமுத்துவுக்குத் தன்னுடைய மகன் பெருமாளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவரிடம் பண வசதி இல்லை.

பெருமாள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தான். அதன்பின்னர் அவனை ஒரு கார் பழுதுபார்க்கும் வேலைக்குச் சேர்த்து விட்டார்.  பெருமாள் மதிநுட்பம் நிறைந்தவன். அவன் சில ஆண்டுகளில் காரின் இயந்திரங்களைப்  பழுது பார்ப்பதற்குக் கற்றுக் கொண்டான். அதோடு அவற்றை மறு உருவாக்கமும் செய்து வந்தான்.

தொழிற்சாலையின் முதலாளிக்குப் பெருமாளை மிகவும் பிடித்துவிட்டது. அதனால், அவர் பெருமாளுக்குக் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலை ஒன்றைக் குறைந்த விலைக்கு விற்றார். அந்தத் தொழிற்சாலையில் பெருமாள் இரவு பகல் உழைத்தான். அவனுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கத் தொடங்கியது. அதனைக்கொண்டு முதலாளிக்குத் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தந்தான்.

இரண்டு மூன்று வருடங்களுக்குள் பெருமாளின் வருமானம் வேகமாகப் பெருகியது. அந்த வருமானத்தைக்கொண்டு வெவ்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை அவன் ஏற்படுத்தினான். அவற்றை நிர்வாகம் செய்வதற்குப் படித்தவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டான்.

பெருமாள் சமூகத்தொண்டிலும் ஈடுபடத் தொடங்கினான். அதனால், அவனுக்குச் சமூகத்தில் தனி மரியாதை கிடைத்தது.  இதனைக் கண்ட குன்னிமுத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து வந்தார். அவர்களின் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் குன்னிமுத்துவை, முத்து முதலாளி என்று அழைக்கத் தொடங்கினர். காலப்போக்கில் குன்னிமுத்து என்று அழைப்பதை அனைவரும் மறந்துவிட்டனர்.

முத்து, மகனின் உழைப்பிற்குத் தனக்கு மிகப் பெரிய பரிசு கிடைத்தது என்று அடிக்கடித் தன் மனத்திற்குள் சொல்லிக் கொள்வார். அவர் தொடர்ந்து வாழ்க்கையில் நல்ல பல அனுபவங்களைப் பெற்று வந்தார். முத்து தம்மிடம் வேலை பார்க்கும்  தொழிலாளிகளை மிகவும் அன்புடன் நடத்தி வந்தார். அதனால், அவர்களும் மிகவும் மரியாதை கொடுத்து வந்தனர். 

 

(சொற்களின் எண்ணிக்கை 209)

எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி

நீதிக்கருத்து:

நேர்மையான உழைப்பே வாழ்க்கையில் நிலைத்த வெற்றியைத் தேடித்தரும்

 

சுருக்கி வரைதல்

சுருக்கி வரையும்போது கவனிக்கவேண்டியவை

1.   கொடுக்கப்பட்ட பகுதியைக் கவனமாகப் படித்துப் பொருளை அறிந்து கொள்ள வேண்டும்.

2.   பகுதியில் சொல்லப்பட்ட முக்கியக் கருத்துகளையும் துணைக் கருத்துகளையும் அடையாளம் காண வேண்டும்.

3.   பகுதியில் உள்ள கருத்துகளைச் சொந்த நடைக்கு மாற்ற வேண்டும்.

4.   சொந்தக் கருத்துகளை எழுதிவிடக்கூடாது.

5.   பகுதியில் உள்ள உண்மைக் கருத்துகளை மறுத்து எழுதிவிடக்கூடாது.

6.   இயல்பான நடையில் எழுதவேண்டும்.

7.   முதலில் நகல் ஒன்று தயாரிக்க வேண்டும்.

8.   நகலில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

9.   நகலை அடிப்படையாகக் கொண்டு அசல் தயாரிக்க வேண்டும்.

10.  கேட்கப்பட்ட சொல் அளவு சரியாக இருக்க வேண்டும்.

11.  சிறிய வாக்கியங்களாக எழுத வேண்டும்.ஏனென்றால் சிறுவாக்கியங்களாக எழுதினால் வாக்கியப்பிழை ஏற்படாது.

12.  தொடர்புடைய சொற்களுக்குப் பதில் கூட்டுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

13. வர்ணனை, பழமொழிகள், மேற்கோள்கள், உதாரணங்கள் போன்றவற்றை விட்டுவிட வேண்டும்.

14.  பிழை இல்லாமல் எழுதுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

15.  இணைப்புச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் (எ.டு-ஆனால், எனவே, என்றாலும்)

16.  கொடுக்கப்பட்ட பகுதி பல பத்திகளாக இருந்தாலும் சுருக்கி வரையும்போது ஒரே பத்தியில் எழுத வேண்டும்.

17.  சுருக்கி வரையச் சொல்லும் பகுதியைத் தான் சுருக்கி எழுத வேண்டும்.

18.  சுருக்கி வரைந்த பின்னர் சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவேண்டும்.

**************************************************************************************

 சுருக்கி வரைதல் –பயிற்சி 1

அழகான மயில்கள் கருமேகக் கூட்டம் வானில் திரண்டு நிற்பதைக் கண்டன. உடனே, அவை தங்களுடைய நீண்ட அழகிய வண்ணத் தோகையை விரிக்கத்தொடங்கின. அவற்றின் தோகை விசிறியைப் போல் அழகாக விரிந்தன. விரிந்த தோகை பார்ப்பவரின் மனத்தைக் கவரும் வண்ணம் இருந்தது. மயில் தோகையின் அழகிய வண்ணத்தைக் கண்டவர்கள் வாய்திறந்து பார்த்த வண்ணம் இருந்தனர். மயில்கள் அவர்களைக் கவனிக்காமல் வானத்தைப் பார்த்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தன.

உங்கள் கவனத்திற்கு...

இப்பகுதியில் வர்ணனையும் உவமையும் இடம்பெற்றுள்ளன. இவற்றைச் சுருக்கி எழுதும்போது அவற்றை எழுதக்கூடாது. கருத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். 20 சொற்களுக்குள் இருக்க வேண்டும்.

 சுருக்கி வரைதல் –மாதிரிப் பயிற்சி

ஒரு காட்டில் சிங்கம், புலி, கரடி, மான் போன்ற விலங்குகள் ஏராளம் வசிக்கின்றன. சிங்கத்தைப் பார்த்தாலே எல்லா விலங்குகளும் பயந்து நடுங்கும். சிங்கம் நாள்தோறும் தனக்குப் பிடித்த விலங்குகளை வேட்டையாடித் தின்னும். மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்தமான உணவு. அதனால்,மான்கள் சிங்கத்தைக் கண்டால் மிகவும் வேகமாக ஓடி ஒளிந்துகொள்ளும்.

சிங்கம் ஒரு மானைப் பிடித்து உண்ண நினைத்தால் அந்த மானை மட்டுமே விரட்டிச் செல்லும்.ஓடுகிற மான் களைப்பு அடைந்தவுடன் அது சிங்கத்திற்குப் பலியாகிவிடும்.பிடித்த மானின் மாமிசத்தை வயிற்றுக்கு உண்டபின் சிங்கம் தன் இருப்பிடத்தை நோக்கிச் செல்லும்.இருப்பிடத்தில் நன்றாக ஓய்வு எடுத்தபின்னர் அது சுறுசுறுப்புடன் செயல்படும்.

 

முக்கியக் கருத்துகள் – குறிப்பெடுக்க வேண்டும்

1.  காட்டில் ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.

2.  மற்ற மிருகங்கள் சிங்கத்தைப் பார்த்தால் அஞ்சும்.

3.  மானின் மாமிசமே சிங்கத்திற்குப் பிடித்த உணவு.

4.  மான்கள் ஓடி மறையும்.

5.  ஓடும் மானை விரட்டிப் பிடித்து உண்ணும்.

6.  இருப்பிடத்தில் ஒய்வு எடுத்தபின்னர் சுறுசுறுப்பாகிவிடும்.

விளக்கம்

·        மேலே குறிப்பிட்டுள்ள பகுதியைச் சுருக்கி எழுதும்போது பகுதியில் குறிப்பிட்டுள்ள ஆறு கருத்துகளையும் விட்டுவிடக்கூடாது.

·        6 கருத்துகளையும் அடையாளம் கண்ட பின்பு அவற்றை ஒரே பத்தியாக எழுத வேண்டும்.

 

 (எ-டு) சுருக்கிய பகுதி

 

காட்டில்

 

 

வாழும்

 

மிருகங்கள்

 

சிங்கத்தைக்

 

கண்டால்

 

அஞ்சும்.

 

 

மானின்

 

மாமிசத்தைச்

 

சிங்கம்

 

விரும்பிச்

 

சாப்பிடுவதால்

 

 

அதனை

 

விரட்டிப்

 

பிடித்துத்

 

தின்னும்.

 

அது

 

 

 

இருப்பிடத்தில்

 

ஓய்வு

 

எடுத்த

 

பின்னர்

 

சுறுசுறுப்புடன்

 

 

 

இருக்கும்.

 

 

 

 

சொற்களின் எண்ணிக்கை - 22

 



             தோசை

தோசை அம்மா தோசை

பாட்டி சுட்ட  தோசை

பளபளக்கும் தோசை

பல்லைப் போல வெள்ளை!


அரிசிமாவும் உழுந்த மாவும்

அளவாய் சேர்த்த தோசை

எலும்பை நிமிர்த்தி வளர்க்கும் 

என்றும் மனத்தில் நிலைக்கும்! 



நெய்யில் சுட்டால் நிறத்தைக் காட்டும்

பொய்யில் சுட்டால் பொலிவை இழக்கும்

மனத்தில் ஆசையாய் மகிழ்ந்து சுட்டால்

மனமணக்கும் எங்க வீட்டுத் தோசை!


-  சி..கு