பேரப்பிள்ளை
பேரப்பிள்ளைக்கு என்ன கவலையோ
பேதை மனம் ஒன்றே அறியும்
பேரப்பிள்ளைக்கு என்ன மகிழ்ச்சியோ
பெற்றமனம் ஒன்றே அறியும்!
பேரப்பிள்ளைக்கு என்ன கவலையோ
பெரியமனம் ஒன்றே அறியும்
பேரப்பிள்ளைக்கு என்ன மகிழ்ச்சியோ
பேரறிவு ஒன்றே அறியும்!!
- சிகு
பார்போற்றும் பிள்ளை
பார்க்கும் கண்கள் என்னென்ன
பற்றும் நெஞ்சம் அவையே
காக்கும் மனம் எதுவோ
கற்பனை நிறைந்தது அதுவோ!
வாழ்க்கை என்ற பெருமழையில்
வற்றாத ஊற்றும் அதுவே
துள்ளாத மனமும் துள்ளும்
துவண்டு போவாமல் காத்திடுமே!
போற்றாத மனமும் உண்டோ
பொறுமை வளமாவதும் அதுவே
பார்போற்றும் பிள்ளைச் செல்வத்தை
பாருக்குத் தந்து நிற்போமே!
-சிகு
விரிசல்
விரிசல் வேண்டாம் மனத்தினிலே
வேதனை வேண்டாம் பணியினிலே
கொண்டத னைத்தையும் மறந்திடுவோம்
கூடிவாழவே என்றும் கற்றிடுவோம்!
கற்றிடும் போதும் வேறுபாடு
களத்தில் தானே தோன்றிடுமே
குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை
சூட்சும உண்மை அறிவோமே!
கவலை எல்லாம் மறந்திடுவோம்
கால மெல்லாம் மகிழ்ந்திடுவோம்
விரிசல் வேண்டாம் மனத்தினிலே
விபரீத எண்ணத்தை கூட்டிடுமே!!
- சிகு
கதையும் சிந்தனையும்
எதற்கு விடுமுறை
‘கமலி கமலி உன்ன எத்தனதடவ
சொல்லிட்டேன். காலையில இருந்து இன்னும் சாப்பிடாம டீவியிலே இருக்க. உனக்கு டீவி
சோறுபோடுமா. ஏம்மா இது நல்லா இருக்கா. இதுக்குத்தானா லீவு விட்டாங்க’ என்று கமலியின் அம்மா உரக்கக் கூறினார்.
வீட்டில் நடக்கும் விசயத்தை ஓர் ஓரத்தில்
நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார், அப்பாவின் அம்மா முத்துப்பேச்சி. அவரைப் பாட்டி
பாட்டி என்று பேரப்பிள்ளைகள் மிகவும் அன்புடன் அழைப்பார்கள்.
‘கமலி அம்மா சொன்னா கேட்கவேண்டாமா, டீவியையே பார்த்துக்கிட்டிருந்தா கண்ணு கெட்டுப்போகும். உன் கண்ணாடி பவரக்
கூட்டிரும். சொன்னா கேளும்மா’ என்று பாட்டி அன்பு கலந்த
குரலில் தட்டிக்கேட்டார்.
‘இல்ல பாட்டி, இப்பத்தான் லீவு கிடைச்சிருக்கு. பொழுதைச் சந்தோசமாக் கழிக்க டீவிகூடப் பாக்கவிடலன்னா என்ன பாட்டி,
நீங்க சொல்லுங்க’
என்று டீவியைப் பார்த்துக்கொண்டே பாட்டியிடம் கேட்டாள் கமலி. கமலியின் ஆதங்கம்
பாட்டிக்குப் புரியாமலில்லை. என்ன செய்வது, பிள்ளைகளின் கவனம் முழுவதும் டீவி நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதிலேயே சென்றுவிடும் என்பது பாட்டிக்குத் தெரியும். ஒருமாதங் கழித்துப்
புத்தகத்தைப் படிப்பதற்குத் திறந்து பார்த்தாலே சலிப்புத்தோன்றும் என்பதையும் நன்கு
புரிந்து வைத்திருந்த பாட்டி, சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.
கமலி பாட்டியைப் பார்த்து, ‘என்ன பாட்டி நான் சொல்றது சரிதானே’ என்றாள். அதனைக் கேட்ட பாட்டி பொறுமையாகக்
கமலியிடம், ‘பொழுதுபோக்க எவ்வளவோ இருக்கு. அம்மாவுக்கு
ஒத்தாசையா கொஞ்சநேரம் சமையல்ல இருந்தா, வருசம்பூராம் சமைக்கிற அம்மாவுக்குக்
கொஞ்சம் சந்தோசந்தான. நீயும் பின்னால, ஓம் பிள்ளைகளுக்குச் சமையலைக் கத்துக்கொடுக்கனுமில்ல.
இல்லாட்ட நம்ம பாரம்பரியச் சமையல் கொஞ்சங் கொஞ்சமாக மறைஞ்சிறுமில்ல. அதில இருக்கிற
மருத்துவக்குணம் தெரியாம்மப் போயிருமில்ல. அதனாலதாம்மா நான் சொல்லுரங் கமலி’ என்று சொல்லிமுடித்தார்.
பிரியமான பாட்டி சொன்ன வாழ்க்கைக் கதையைக் கேட்ட கமலியின் சிந்தனைக் கதவு மெல்லத்திறக்க
ஆரம்பித்தது.
(சொற்களின்
எண்ணிக்கை 180)
உரிமை ஆசிரியர் சி. குருசாமி.
கதையும் சிந்தனையும்
புத்திசாலி சுண்டெலிகள்
இரண்டு சுண்டெலிகள் நண்பர்களாக
இருந்தன. அவை வசித்து வந்த வீட்டுக்காரருக்கு மிகவும் தொந்தரவு கொடுத்து வந்தன.
சுண்டெலிகள் வீட்டில் உள்ள துணிமணிகளைச் சில நேரங்களில் கடித்துக் குதறிவிடும்.
வீட்டுக்காரர் முத்து, அவற்றின்மீது கோபமாக இருந்தார். அவற்றின் தொல்லையிலிருந்து
விடுபடுவதற்கு அவர் நினைத்தார். அதனால், முத்து அவற்றைப் பிடித்துக்கொல்வதற்கு
முயற்சி செய்தார்.
ஒருநாள் முத்து, ஒரு பானையில் பாதி
அளவு தண்ணீரை ஊற்றினார். அவர், பானையைத் திறந்து வைத்துவிட்டார். முத்து
எலிகள் பானைமீது ஏறி விளையாடும்போது
பானைக்குள் விழுந்துவிடும். பின்னர், தண்ணீரிலிருந்து அவற்றால் தப்பிக்க முடியாமல்
மூழ்கி இறந்துவிடும் என்று நினைத்தார்.
சுண்டெலிகள் வீட்டுக்காரர்
நினைத்ததுபோல் இரவில் பானையைச் சுற்றிச் சுற்றி விளையாடின. அப்பொழுது ஒரு சுண்டெலி
பானையில் ஏறி விளையாடுவதற்குச் சென்றது. அது வழுக்கிப் பானைக்குள்
விழுந்துவிட்டது. மற்றொரு சுண்டெலி சிந்திக்கத் தொடங்கியது. அது வீட்டுக்காரர்
பானையில் தண்ணீரை ஊற்றி வைத்தது அவற்றைப் பிடிப்பதற்குச் செய்த சதி என்று
முடிவுசெய்தது. இதனை முறியடிப்பதற்கு அது சிந்திக்கத் தொடங்கியது. அந்நேரத்தில் சுண்டெலி உயரத்தில் இருந்த ஒரு
பெரிய பூனையைத் தற்செயலாகப் பார்த்தது.
அது ஒரு தந்திரம் செய்தது. சுண்டெலி அந்தப் பானையின்மீது மெதுவாக ஏறியது.
இதனை உயரத்தில் இருந்த அந்தப் பூனை
கவனித்தது.
பானையின்மீது இருந்த சுண்டெலியைக் கவ்விப்
பிடிப்பதற்குப் பூனை பானையின் மீது குதித்தது. பானை கீழே சாய்ந்தது. பூனைக்குக்
காலில் அடிபட்டது. அது அப்படியே படுத்துவிட்டது. இரண்டு சுண்டெலிகளும் தப்பித்து
ஓடிவிட்டன. காலையில் முத்து அறை முழுவதும் கொட்டிக்கிடந்த தண்ணீரைத்
துடைத்து எடுத்தார். அவருடைய முகம் மிகவும் வாடி இருந்தது.
(சொற்களின் எண்ணிக்கை 161)
எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.
புத்திசாலிகள் எந்தச் சூழ்நிலையிலும் பிழைத்துக்கொள்வார்கள்
கதையும் சிந்தனையும்
இனிப்பே
வாழ்க்கை
அன்புக்கனி இனிப்புப் பலகாரங்களை
விரும்பிச் சாப்பிடுவார். அது இன்று நேற்று பழகிய பழக்கம் அல்ல. அன்புக்கனி,
தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது சர்க்கரையைக் கால்சட்டைப் பையில் வைத்துச்
சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. பொறித்த கடலை, தேங்காய்ச் சில் ஆகியவற்றுடன்
சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிடும் பழக்கத்தை அன்புக்கனியின் பாட்டி அவருக்குக்
கற்றுக்கொடுத்தார். அன்புக்கனியின் அம்மா வடிவும் அவருக்குப் பிடித்த இனிப்புப்
பணியாரத்தை அடிக்கடிச் சுட்டுக்கொடுக்கத் தொடங்கினார். இனிப்புப் பலகாரங்களை நன்கு
ருசிபார்த்து வந்த அன்புக்கனி நாளடைவில் இனிப்புப் பிரியராக மாறிவிட்டார்.
அன்புக்கனி துணி வியாபாரம் செய்வதை ஒரு
முதலாளியிடம் கற்றுக்கொண்டார். அதனால், அவர் சொந்தமாகத் துணிக்கடை ஒன்றைத்
தொடங்கினார். அவரும் வேலையாளைப் போல் ஓடியாடி கடையில் வேலை செய்து வந்தார்.
அன்புக்கனி வாடிக்கையாளர்களின் மனம் கோணாமல் நடந்துகொண்டார். அதனால், அவருடைய கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
அதிகரித்தது. ஒருசில வருடங்களில் அன்புக்கனி பெரிய முதலாளியாக மாறினார்.
அன்புக்கனிக்கு உடல் உழைப்பு கொஞ்சங்
கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. அவருக்கு அடிக்கடிச் சோர்வு ஏற்பட்டது. அவர்
அதனைப் போக்குவதற்கு இனிப்பு அல்வாவை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார். அல்வா அவருடைய
சோர்வை நீக்கிப் புத்துணர்ச்சி அளித்து வந்தது. இது தொடர் பழக்கமாக மாறியது.
அன்புக்கனி சுவை மிகுந்த அல்வாவை அதிகமாகச் சாப்பிட்டு வருவதால் ஏற்படவிருக்கும்
பாதிப்புகள் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை. அதனை அனுபவத்தின் மூலம் நன்கு
அறிந்துகொண்ட அவருடைய அவருடைய வடிவு அவருக்கு ஆலோசனை கூறினார்.
ஒருநாள் வடிவு அன்புக்கனியை
மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவரும் அன்புக்கனியைச் சோதனை செய்தார். அவர்
அன்புக்கனியிடம் உடல் தேவைக்கு அதிகமாக இனிப்புப் பலகாரங்களை உண்டதால் ஏற்பட்டுள்ள
பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறினார். அதோடு அவர் இனிப்புப் பலகாரங்களுக்குப்
பதில் இனிப்புக் குறைந்த பழங்களைச்
சாப்பிட்டுவரும்படி ஆலோசனை கூறினார். அதோடு சில மாத்திரைகளையும் அன்புக்கனி
தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார். அன்புக்கனியும்
மருத்துவர் கூறியவற்றைப் பின்பற்றி வந்தார். அவர் சில மாதங்களில் புதிய தெம்புடன்
விளங்கினார். அன்புக்கனி மீண்டும் ஒரு தொழிலாளியைப் போல் அவருடைய கடையில்
ஓடியாடி வேலை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.
(சொற்களின் எண்ணிக்கை 205)
எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.
நீதிக்கருத்து
அளவுக்கு மீறினால்
அமிர்தம்கூட விசமாக மாறிவிடும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பயிற்சி வினாக்கள்
முடிவை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்குதல்
|
‘அன்புக்கனி மீண்டும் ஒரு
தொழிலாளியைப் போல் அவருடைய கடையில் ஓடியாடி வேலை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து
வந்தார்’. |
|
|
|
|
கதையும் சிந்தனையும்
கொழுக்கட்டை
மாதவன் நல்ல உழைப்பாளி. அவர்
உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவு சேமித்து வந்தார். சில வருடங்களில் ஐந்தாயிரம்
வெள்ளியைச் சேமித்தார். அதனைக் கொண்டு ஒரு பலகாரக்கடையைத் திறந்தார். அவருடைய
பலகாரக்கடையில் கொழுக்கட்டை செய்பவர் ஒருவர் இருந்தார். அவர் செய்யும் கொழுக்கட்டை
மிகவும் ருசியாக இருந்தது. அதனால் அதனை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
மாதவன் புதிதாக மற்றொரு
பலகாரக்கடையைத் தொடங்கினார். இதன்மூலமும் அதிகமான வருமானம் கிடைத்தது. மாதவன்
பக்கத்து ஊர்களிலும் கடைகளைத் தொடங்கினார். அவருக்கு வியாபாரம் சூடுபிடித்தது. அழிந்துவரும்
பண்பாட்டுப் பலகாரம் மக்கள் மத்தியில் மீண்டும் தனி இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது.
மாதவனுக்கு அதிக இலாபம் கிடைத்தது. ஒருமுறை மாதவன் அவருடைய ஊரில்
கொழுக்கட்டைத் திருவிழா ஒன்றை நடத்தினார். அத்திருவிழாவில் கொழுக்கட்டைக்குள் ஒரு
தங்கக் காசை வைத்து மக்களுக்குப் பரிசாகக் கொடுத்தார்.
அன்று நடைபெற்ற கொழுக்கட்டைத் திருவிழாவின்
மூலம் மாதவனின் வியாபாரம் மேலும் பெருகத்தொடங்கியது. காலப்போக்கில் அவர் ஒரு
பணக்காரர் ஆனார். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யத்தொடங்கினார். அவருடைய ஊரில்
பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டினார். அதில் மாணவர்கள் படிப்பதற்குக் கட்டணம்
வாங்கவில்லை. பத்து ஆண்டுகளில் அந்த ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்
தொடங்கியது. அந்த ஊர்மக்களுக்கு வருமானமும் கூடியது. மாதவனின் பேரும் புகழும்
பரவியது.
(சொற்களின் எண்ணிக்கை 130)
எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.
நீதிக்கருத்து
பிறர் வாழ்வில் அக்கறை
செலுத்தும்போது மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பயிற்சி வினாக்கள்
தொடக்கவரிகளைக் கொண்டு கதை ஒன்று உருவாக்குக.
|
‘மாதவன் நல்ல உழைப்பாளி. அவர் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தில்
சிறிதளவு சேமித்து வந்தார்’. .. |
|
|
|
இக்கதையில் இருந்து
அறிந்துகொண்ட வாழ்க்கைத் திறன்கள் இரண்டு |
|
|
|
|