Wednesday, November 17, 2021

 

கதையும் சிந்தனயும்   

கற்பனைக்கு ஏது எல்லை

வெள்ளை நிறம் சந்திரனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் மூன்று வயதாக இருக்கும்போதே வீட்டிலுள்ள வெள்ளை நிறச் சுவரில் கிறுக்கிக்கொண்டே இருப்பான். அவனுடைய கிறுக்கும் பழக்கத்தைப் பெற்றோர்கள் தொடர்ந்து வளர்த்து வந்தனர். சந்திரனின் கிறுக்கல்கள் ஐந்து வயதில் வெள்ளைத் தாளுக்கு மாறின. அவை ஊகித்தறியும் ஓவியங்களாக மாறத்தொடங்கின.

பெற்றோர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அவர்கள் குத்துவிளக்குத் தொடர்ந்து  எரிவதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் சந்திரனின் ஆர்வத்தைத் தூண்டித் தூண்டி வளர்த்து வந்தார்கள்.   அவர்களுக்கும் புதிய புதிய சிந்தனை தோன்றியது. சந்திரனுக்குப் பென்சில் ஓவியப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக் கொடுத்தார்கள். உரிய வயதில் அவனைத் தொடக்கப்பள்ளியிலும் சேர்த்துவிட்டனர். சந்திரன் பாடங்களைப் படிப்பதில் கெட்டிக்காரனாக இருந்தான். ஓவியங்களை வரைவதிலும் ஆர்வத்தைச் செலுத்தி வந்தான்.  

சந்திரனிடம் இருக்கும் ஓவியக் கலையைப் பற்றிய சிந்தனை காட்டு வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சந்திரன் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ஓவியப் பட்டப் படிப்பில் சேர்வதற்கு நினைத்தான். அதனால், வெளிநாடு சென்று படிக்க விரும்பினான். அவனுடைய பெற்றோரிடம் போதிய பணம் இல்லை. அதனால் சந்திரன் மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவித்தொகை வழங்குமாறு தனியார் நிறுவனங்களிடமும் அரசாங்கத்திடமும் கேட்டனர். அவர்களின் உதவியோடு ஓவியப் பட்டப்படிப்பை முடித்தான்.

சந்திரன் ஒரு கற்பனைக் கலைஞனாக மாறினான். அவனுடைய ஓவியங்களைக்  கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் தம்முடைய மனக்கவலையைக்கூட மறந்து வந்தனர். ஒருசில ஆண்டுகளுக்குப் பின்னர், தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு சந்திரன் வெற்றி பெற்றான். சமீபத்தில் அவன் உலக அளவில் நடந்த ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசைப் பெற்றான். சந்திரன் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஓவியக் கலையின் மூலம் பெருமை தேடித்தந்தான்.       

(சொற்களின் எண்ணிக்கை 164)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

கவலையை மாற்றும் மா மருந்தே கற்பனை.


 


கதையும் சிந்தனையும்   

மாறியது நெஞ்சம்  

 

கோமதி, கிடைக்கும் நேரத்தை நெருக்கமான தோழிகளிடம் அரட்டை அடிப்பது,  சுவையாகச் சாப்பிடுவது, தூங்குவது என்றுதான் கழிப்பாள். அவள் பெற்றோர்களிடம்கூட அதிகமாகப் பேசமாட்டாள். கோமதியை நினைத்துப்  பெற்றோர்கள் மிகவும் வருந்தினர். கோமதி வெளி உலகம் தெரியாமல் வாழ்ந்து வந்தாள். அவளை எளிதில் யாரும் ஏமாற்றி விடுவார்கள். அதனால், அவளின் மனப்போக்கை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று அவர்கள் கலந்து பேசி  முடிவு செய்தார்கள். 

கோமதியிடம் பெற்றோர்கள் சில உத்திகளைக் கையாள நினைத்தார்கள். அவளிடம் அவ்வப்போது வெளி உலகத்தில் நடக்கும் சில செய்திகளைப் பற்றிப் பேசி வந்தார்கள். சில நேரங்களில் அவள்,  `நான் இவற்றைப் பற்றித் தெரிந்து என்ன செய்யப்போகிறேன்?.  என்னிடம் ஏன் இவற்றைச் சொல்கிறீர்கள்?’ என்று கோபமாகச் சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்குள் சென்றுவிடுவாள். கோமதியின் பெற்றோர்கள் கூறும் கருத்துகளில் அவள் வாழ்க்கைத் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் எச்சரிக்கையாக  வாழ்வதற்கும்  வேண்டிய செய்திகள் இருக்கும்.

ஒருநாள் கோமதியின் தோழிகளில் ஒருத்தி மஞ்சு, அவளிடம் வெளியில் சென்றுவருவதற்கு ஐம்பது வெள்ளி கொண்டுவரும்படிக் கூறினாள்.  கோமதி தன்னிடம் பணம் இல்லை என்று கூறினாள். அதற்கு மஞ்சு, `நீ உன்னுடைய அம்மாவின் பணத்திலிருந்து எடுத்துவா. நானும் அதைத்தான் செய்தேன்.  அவர்கள் இதையெல்லாம் பெரிதுபடுத்தமாட்டார்கள். எடுக்கும்போது பிடிபட்டுவிட்டால் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று கூறினாள். கோமதிக்கு முதலில் தூக்கிவாரிப்போட்டது. அவள் இந்தத் தவற்றைச் செய்ய மறுத்துவிட்டாள்.  இதனைக் கேட்ட மஞ்சு, `அப்படி என்றால் நாங்கள் மட்டும் சென்று சந்தோசமாக ஆட்டம் பாட்டத்தை ரசித்து வருகிறோம் என்றாள்.

கோமதிக்கு மெல்ல மெல்ல ஆசை வந்தது. அவளுடைய அம்மாவைப் பற்றி அவள் யோசிக்கவில்லை. அவள் வீட்டிலுள்ள பணத்தை எடுத்துக்கொண்டு தோழிகளுடன் வெளியே சென்று வந்தாள். பெற்றோர்கள் இதைக் கவனிக்கவில்லை. இது தொடர் பழக்கமாக மாறியது. ஒருமுறை வீட்டில் ஐநூறு வெள்ளியைக் கோமதி எடுக்கும்போது அவளுடைய அப்பா கவனித்துவிட்டார். அவருடைய நெஞ்சு பதறியது. கோமதியின் மனம்  படபடத்தது.  அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்திற்குள் சுதாரித்துக்கொண்ட அவளுடைய அப்பா, கோமதியைத் தன்னருகில் உட்காரவைத்தார்.

அப்பா நடந்தவற்றைப் பொறுமையாக அவளிடம் விசாரித்தார். கோமதி எல்லாவற்றையும் அழுதுகொண்டே சொல்லிமுடித்தாள். அவளுடைய பெற்றோர்கள் நல்வழிகாட்டிகளாக இருந்து கொஞ்சங் கொஞ்சமாக அவளுடைய மனத்தை மாற்றினார்கள்.  கோமதியின் எதிர்காலம் சிறப்பாக அமைந்தபோதுதான் அவள் பெற்றோர்களின் அருமை பெருமையைப் பற்றி உணர்ந்துகொண்டாள்.   

    (சொற்களின் எண்ணிக்கை 221)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

புகை போகமுடியாத இடத்திலும் போதனை புகுந்துவிடும் அதுபோல அடிக்க அடிக்க அம்மியும் நகர்ந்துவிடும். 


 

கதையும் சிந்தனையும்  

விருப்பம் 

 

அல்லி படிப்பில் கெட்டிக்காரி. ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை மிகவும் அக்கறையுடன் படிப்பவள். அவள் புரியாத பாடங்களை மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளும் பழக்கத்தை உடையவள். அல்லி பாடத்தைப் பற்றிய தொடர் விளக்கங்களை இணையப் பக்கங்களிலும் படித்துத் தெரிந்துகொள்வாள்.

அல்லி, ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதற்கு முன்னரே ஒருசில பாடங்களைப் பற்றிய  விளக்கங்களை இணையப் பக்கங்களின் மூலம் படித்துத் தெரிந்து கொள்வாள். இவை எல்லாம் அவளுடைய கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உதவிசெய்து வந்தன. அல்லி மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க நினைத்தாள். அதனால், அவள் அறிவியல் பாடத்தை மிகவும் விரும்பிப் படித்து வந்தாள்.

அல்லி விரும்பியது போல் மருத்துவராகச் சேருவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட அல்லி ஒரு மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மருத்துவத் துறையில் படிக்கும் மாணவர்கள் பலருக்கு வழிகாட்டியாக இருந்தார். அதனால், மாணவர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பேராசியராக அல்லி விளங்கினார்.  அல்லி ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனையும் செய்து வந்தார். அதனால் அவர் ஏழைகளின் மருத்துவர் என்ற பெயரைப் பெற்றார். 

  

 (சொற்களின் எண்ணிக்கை 112)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

நீதிக்கருத்து

மனிதனுக்குச் செய்யும் தொண்டே மகத்தான தொண்டு.

 


கதையும் சிந்தனையும்   

நொறுக்குத்தீனி

 

முகுந்தன் தொடக்கப் பள்ளியில் படிக்கும் சிறுவன். அவனுடைய நண்பர்களில் சிலர் நொறுக்குத் தீனியை விரும்பிச் சாப்பிடுவார்கள். அவர்களிடமிருந்து முகுந்தனும் அப்பழக்கத்தைக் கற்றுக்கொண்டான். முகுந்தனின் பெற்றோர்கள் மதிய உணவுக்கு அவனிடம் ஐந்து வெள்ளி கொடுப்பது வழக்கம்.

முகுந்தன் நான்கு வெள்ளிக்கு மதிய உணவை வாங்கிச் சாப்பிடுவான். மீதம் உள்ள ஒரு வெள்ளியை நொறுக்குத் தீனியை வாங்குவதற்கு வைத்துக்கொள்வான். நாள்கள் செல்லச் செல்ல முகுந்தன் நண்பர்களைப்போல் எண்ணெய்ப் பலகாரங்களை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தான். அவன் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளியின் அருகில் உள்ள விரைவு உணவகத்தில் மதிய உணவை வாங்கி உண்ணத் தொடங்கினான்.

முகுந்தன் வாய்க்கு ருசியான உணவைத் தேடிச் செல்ல ஆரம்பித்தான்.  வீட்டில் உணவு சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கினான். முகுந்தனின் உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், பெற்றோர்களின் கவனம் முகுந்தன் மீது செல்லத் தொடங்கியது. ஒருநாள் அவனுடைய அம்மா பள்ளிக்குச் சென்று அவனுடைய நண்பர்களிடம் முகுந்தனைப் பற்றி விசாரித்தார். அப்போதுதான் அவருக்கு உண்மை தெரிந்தது.

முகுந்தனின் அம்மா முகுந்தனுக்கு மதிய உணவு சாப்பிடக் கொடுத்துவரும்  பணத்தைக் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கினார். அதற்குப் பதில் பள்ளிக்குச் செல்லும்போது முகுந்தனுக்குப் பழங்களைக் கொடுத்தனுப்பத் தொடங்கினார். முகுந்தன் முதலில் பழங்கள் சாப்பிடுவதை வெறுத்தான். நாள்கள் செல்லச் செல்லப் பழங்களை விரும்பிச் சாப்பிடத் தொடங்கினான். முகுந்தனின் உடல் எடை கொஞ்சங் கொஞ்சமாகச் சீராகத் தொடங்கியது. அவனுடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

  (சொற்களின் எண்ணிக்கை 148)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.

 

 

 


 


கதையும் சிந்தனையும்


முன்னேற்றம்

முல்லை ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவி. பெற்றோர்கள் தினக்கூலிக்கு வேலை செய்து வந்தார்கள். அதனால் அவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். முல்லை இவற்றை எல்லாம் நன்கு புரிந்துகொண்டாள். அதனால், பெற்றோர்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வாள்.

முல்லை, அவளுடைய அன்றாடச் செலவுகளைச் சுருக்கிக்கொள்வாள். அவளுடைய பாடங்களில் முழுக் கவனமும் செலுத்தி வந்தாள். அவளுடைய பெற்றோர்களும் நண்பர்களும் முல்லையின் நடத்தையைப் பாராட்டி வந்தனர். முல்லை உயர்நிலைப் பள்ளியின் இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றாள். அவளுடைய பெற்றோர்களிடம் அவளைத் தொடர்ந்து படிக்கவைப்பதற்குப் போதிய பணம் இல்லை. அதனால், அவளுடைய படிப்பைத் தொடரமுடியவில்லை. அதனை அவளுடைய தோழியின் மூலம் ஆசிரியர்கள் புரிந்துகொண்டனர்.

ஆசிரியர்கள் ஒருநாள் முல்லையைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துவருமாறு அவளுடைய தோழியிடம் கூறினர். முல்லை ஆசிரியர்களை வந்து சந்தித்தாள். அவர்கள் முல்லையிடம் அரசாங்க உபகாரச் சம்பளத்தைப் பற்றியும் பிற அமைப்புகள் செய்து வரும் உதவிகளைப் பற்றியும் எடுத்துக்கூறினர். ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றிய முல்லை, இன்று ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

(சொற்களின் எண்ணிக்கை 111)

 எழுதியவர்: ஆசிரியர் சி. குருசாமி.


 


வாழ்க்கை 


கற்றலில் இன்பம் கொள்வோம்

கற்பித்தலில் நற்பண்பு கொள்வோம்

நாள்தோறும் வாழ்வில் கற்றுநிற்போம்

நம்மை நாமே அறிவதற்கு என்றும்

                                                 -சிகு. 


 


                                         சங்கடம்  

சங்கடம் வந்தாலும் சந்தோசம் வந்தாலும்

சாதனை தொடர்ந்திடு சாத்திரம்  நினைத்திடு

சாதனை தொடர்ந்திட சாந்திருப்போர் பலராவார்

பள்ளிப்பருவச் சாதனை பக்குவமாக மாற்றிடுமே!


கல்லூரிச் சாதனை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்

காரியம்  சிறந்து நிற்கும் காகிதம் மலராய் விரியும்

காற்றாடி போல காலமெல்லாம் பயனளிக்கும் 

காசுபுகழ் வந்தடையும் வசந்தமும் செழித்து நிற்குமே!

                                                                                                      - சி. குருசாமி