Thursday, October 15, 2020

 

 கருணை உள்ளம் - 

சிறுகதையைப் படித்துப் புரிந்துகொள்ளவும். போலச்செய்தல் என்ற விதிமுறைக்கு ஏற்ப மற்றொரு சிறுகதையை எழுதுவதற்கு முயற்சி செய்யவும்.  நன்றி

 

முகுந்தனுக்கு எண்பது வயது இருக்கும். அவர் எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். தம்மால் முடிந்த வேலைகளை அவருடைய வீட்டிற்குச் செய்து வந்தார். கோவிட்-19-இன் தாக்கம் இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில்கூட  வீட்டிற்கு வேண்டிய சில பொருள்களைக் கடைகளில் வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 

வீட்டில் உள்ளவர்கள் தடுத்தால்கூட, முகுந்தன் வெளியில் சென்று வீட்டிற்கு வேண்டியவற்றை வாங்கி வருவார்.  அவர் ஒரு நாள் வழக்கம்போல் ஒரு கடையில் காய்கறிகளை வாங்கினார். அவற்றைப் பேருந்து நிற்கும் இடத்திற்குக் கொண்டுசென்றார். அங்கு அவர் பேருந்துக்கு நீண்ட நேரம் காத்திருந்தார்.  

 

முகுந்தன் செல்ல வேண்டிய பேருந்து வந்தது. ஏறுவதற்குக் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால், அவர் ஓரமாகக் காத்துக்கொண்டிருந்தார். எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டனர்.

 

இறுதியாக முகுந்தன் பேருந்தின் படிக்கட்டில் கால் வைக்கும்போது வழுக்கிக் கீழே விழுந்துவிட்டார். முகுந்தனின் நெற்றியில் காயம் ஏற்பட்டு, இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. முகுந்தனால் இரத்தம் வடிவதை உணர முடியவில்லை.

 

முகுந்தன் வேகமாக எழுந்து  பேருந்துக்குள் சென்றுவிட்டார்.  அங்கு  இருந்தவர்களில் ஒரு சிலர் அவரைப் புகைப்படம் எடுத்தனர். பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.   

 

பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர் வேகமாக எழுந்தார். அவர் முகுந்தனின் அருகில் விரைவாகச் சென்றார்.

 

அந்தப் பெண்மணி முகுந்தனிடம் எதையோ பேசிவிட்டு, தன்னிடம் இருந்த டிசுத்தாளை வைத்து இரத்தம் வடிவதை நிறுத்தினார்.

 

இந்தக் காட்சியையும் சிலர் படம்பிடித்தனர். இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மாணவி ஒருத்தி, முகுந்தனைத் தன்னுடைய இருக்கையில் அமரும்படிச் சொன்னார். முகுந்தன் அவர்களைக் கருணை உள்ளத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.    

 

(சொற்களின் எண்ணிக்கை 154)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

 

நீதிக்கருத்து

 

கருணை உள்ளத்தோடு உதவி செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.   

Wednesday, October 14, 2020

 2. உழைப்புக்கேற்ற ஊதியம் - 

கதையைப் படித்த பின்னர் உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.

 கதையிலிருந்து தெரிந்துகொண்ட வாழ்க்கைத் திறனைப் பற்றிப் பதிவு செய்யவும்.


ஓர் ஊரில் குன்னிமுத்து என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வறுமையில் சிக்கித் தவித்து வந்தார். குன்னிமுத்து, கட்டட வேலைக்குரிய இரும்புக் கம்பிகளை வெட்டிக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.

அவர் மற்றவர்களிடம் பேசும்போது சற்றுக் குனிந்து பணிவாகப் பேசுவார். அதனால்தான் முத்து என்ற அவருடைய பெயருக்கு முன்னால் குன்னி என்ற பட்டப் பெயர் ஏற்பட்டது.

 

குன்னிமுத்துவுக்குத் தன்னுடைய மகன் பெருமாளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவரிடம் பண வசதி இல்லை.

பெருமாள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தான். அதன்பின்னர் அவனை ஒரு கார் பழுதுபார்க்கும் வேலைக்குச் சேர்த்து விட்டார். 

 

பெருமாள் மதிநுட்பம் நிறைந்தவன். அவன் சில ஆண்டுகளில் காரின் இயந்திரங்களைப்  பழுது பார்ப்பதற்குக் கற்றுக் கொண்டான். அதோடு அவற்றை மறு உருவாக்கமும் செய்து வந்தான்.

 

தொழிற்சாலையின் முதலாளிக்குப் பெருமாளை மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர் பெருமாளுக்குக் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலை ஒன்றைக் குறைந்த விலைக்கு விற்றார்.

 

அந்தத் தொழிற்சாலையில் பெருமாள் இரவு பகல் உழைத்தான். அவனுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கத் தொடங்கியது. அதனைக்கொண்டு முதலாளிக்குத் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தந்தான்.

 

இரண்டு மூன்று வருடங்களுக்குள் பெருமாளின் வருமானம் வேகமாகப் பெருகியது. அந்த வருமானத்தைக்கொண்டு வெவ்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை அவன் ஏற்படுத்தினான். அவற்றை நிர்வாகம் செய்வதற்குப் படித்தவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டான்.

 

பெருமாள் சமூகத்தொண்டிலும் ஈடுபடத் தொடங்கினான். அதனால், அவனுக்குச் சமூகத்தில் தனி மரியாதை கிடைத்தது.  இதனைக் கண்ட குன்னிமுத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து வந்தார். அவர்களின் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் குன்னிமுத்துவை, முத்து முதலாளி என்று அழைக்கத் தொடங்கினர். காலப்போக்கில் குன்னிமுத்து என்று அழைப்பதை அனைவரும் மறந்துவிட்டனர்.

 

முத்து, மகனின் உழைப்பிற்குத் தனக்கு மிகப் பெரிய பரிசு கிடைத்தது என்று அடிக்கடித் தன் மனத்திற்குள் சொல்லிக் கொள்வார். அவர் தொடர்ந்து வாழ்க்கையில் நல்ல பல அனுபவங்களைப் பெற்று வந்தார். முத்து தம்மிடம் வேலை பார்க்கும்  தொழிலாளிகளை மிகவும் அன்புடன் நடத்தி வந்தார். அதனால், அவர்களும் மிகவும் மரியாதை கொடுத்து வந்தனர்.  

 

(சொற்களின் எண்ணிக்கை 209)

(எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி)

நீதிக்கருத்து.

நேர்மையான உழைப்பே வாழ்க்கையில் நிலைத்த வெற்றியைத் தேடித்தரும்

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 கதையும் சிந்தனையும்

கதையிலிருந்து தெரிந்துகொண்ட வாழ்க்கைத் திறன்களைப் பதிவு செய்யவும். நன்றி.


1.          அலுமினியக் கால்

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நெஞ்சை நிமிர்த்தி நடைபாதையில் நடந்து சென்றார். அவர் அருகில் இருந்த விளையாட்டுத் திடலுக்குச் சென்று, உடற்பயிற்சிக்குரிய உடுப்பை அணிந்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு கால் இல்லை என்பதைச் சற்றுத்  தொலைவில் இருந்த இருவர் பார்த்தனர்.

அவர்களில் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, ‘அண்ணே! இவேன் நம்ம வட்டாரத்து ஆளில்லையே. ஒருநாள்கூட இங்குப்  பார்த்ததில்லையே, பெரிய சேட்டைக்காரனா இருப்பானோ. இல்லாட்டி இந்த வயசில ஒரு கால் இல்லாம இருப்பானா. அது, மற்றவர்களுக்குத் தெரியாம இருக்க நிமிர்ந்துவேற நடந்துவர்ரான்’ என்று கூறினார்.

அதற்கு மற்றவர், ‘ஆமா தம்பி வசதியானவனா இருப்பான் போல, இல்லாட்டி அலுமினியக் கால் மாட்டியிருக்க மாட்டானே’ என்று பதில்கூறி மெல்லச் சிரித்தார்.  

விளையாட்டுத் திடலில் இருபது பேர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  சிறிது நேரத்தில் அவர்களுடைய நண்பர் குமார் அங்குப் பயிற்சி செய்வதற்கு வந்தார். அவர் வந்தவுடன் அவர் கண்ணில் புதியவர் தட்டுப்பட்டார். அவர் புதியவரின் அருகில் வேகமாகச் சென்றார். அவரைப் பார்த்து, ‘அண்ணே! இப்ப எப்படி இருக்கேக, பாத்து ரொம்ப நாளாச்சு, வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா? இப்ப உடம்பு எப்படி இருக்கு?. இராணுவச் சேவை முடிஞ்சு ஊருக்கு வந்துட்டேங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்கெல்லாம் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கப்போயிக் கால இழந்தவுக. நல்லாருங்க அண்ணே, உங்களப் பார்க்கக் கொடுத்து வச்சிருக்கேன்’ என்று சொல்லி முடித்தார்.  

இதனை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த இருவரும் வெட்கித் தலைகுனிந்து நின்றனர்.

(சொற்களின் எண்ணிக்கை 149)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

கதையின் நீதி

சிந்தனை செய்யாமல் யாரையும் குறைவாக மதிப்பிடக்கூடாது.

Monday, October 12, 2020

 கதையைப் படித்த பின்னர் உங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யுங்கள். நன்றி


1.          அலுமினியக் கால்

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நெஞ்சை நிமிர்த்தி நடைபாதையில் நடந்து சென்றார். அவர் அருகில் இருந்த விளையாட்டுத் திடலுக்குச் சென்று, உடற்பயிற்சிக்குரிய உடுப்பை அணிந்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு கால் இல்லை என்பதைச் சற்றுத்  தொலைவில் இருந்த இருவர் பார்த்தனர்.

அவர்களில் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, ‘அண்ணே! இவேன் நம்ம வட்டாரத்து ஆளில்லையே. ஒருநாள்கூட இங்குப்  பார்த்ததில்லையே, பெரிய சேட்டைக்காரனா இருப்பானோ. இல்லாட்டி இந்த வயசில ஒரு கால் இல்லாம இருப்பானா. அது, மற்றவர்களுக்குத் தெரியாம இருக்க நிமிர்ந்துவேற நடந்துவர்ரான்’ என்று கூறினார்.

அதற்கு மற்றவர், ‘ஆமா தம்பி வசதியானவனா இருப்பான் போல, இல்லாட்டி அலுமினியக் கால் மாட்டியிருக்க மாட்டானே’ என்று பதில்கூறி மெல்லச் சிரித்தார்.  

விளையாட்டுத் திடலில் இருபது பேர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  சிறிது நேரத்தில் அவர்களுடைய நண்பர் குமார் அங்குப் பயிற்சி செய்வதற்கு வந்தார். அவர் வந்தவுடன் அவர் கண்ணில் புதியவர் தட்டுப்பட்டார். அவர் புதியவரின் அருகில் வேகமாகச் சென்றார். அவரைப் பார்த்து, ‘அண்ணே! இப்ப எப்படி இருக்கேக, பாத்து ரொம்ப நாளாச்சு, வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா? இப்ப உடம்பு எப்படி இருக்கு?. இராணுவச் சேவை முடிஞ்சு ஊருக்கு வந்துட்டேங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்கெல்லாம் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கப்போயிக் கால இழந்தவுக. நல்லாருங்க அண்ணே, உங்களப் பார்க்கக் கொடுத்து வச்சிருக்கேன்’ என்று சொல்லி முடித்தார்.  

இதனை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த இருவரும் வெட்கித் தலைகுனிந்து நின்றனர்.

(சொற்களின் எண்ணிக்கை 149)

எழுதியவர் ஆசிரியர் சி. குருசாமி

கதையின் நீதி

சிந்தனை செய்யாமல் யாரையும் குறைவாக மதிப்பிடக்கூடாது.


 


வாசிப்புப் பகுதி (பாசம்)

ஓர் ஊரில் பறவைகள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்து வந்தன. ஒரு மரத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட பறவைகள் வாழ்ந்து வந்தன. அவை காட்டில் கிடைக்கும் உணவுப் பொருள்களைத் தின்று உயிர்வாழ்ந்து வந்தன. அந்தப் பறவைகள் பல இனங்களைச் சேர்ந்தவை. ஆனாலும், அவை மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. ஒரு பறவைக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டால் மற்றப் பறவைகள் வேண்டிய உதவியை அதற்குச் செய்யும். ஆபத்து ஏற்படும் காலத்திலும் ஒன்றுக்கொன்று உதவிசெய்து வாழ்ந்து வந்தன.

 

மகிழ்ச்சியாகச் சில வருடங்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில்   வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. பறவைகளுக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், அவற்றிற்கு வெப்ப நோய் ஏற்பட்டது. எனவே, பறவைகள் கொஞ்சங் கொஞ்சமாக அழியத்தொடங்கின. சில பறவைகளால் பறக்க முடியவில்லை. அவை சில நாட்களில் இறந்துவிட்டன. அதனால், ஒருசில பறவைகள் அந்தக் காட்டில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பறந்துவிட்டன.

ஒரே ஒரு மயில்மட்டும் அந்த மரத்திலேயே தங்கிவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் நிலைமை சிறிது சிறிதாகச் சீராகத் தொடங்கியது. ஒருநாள் அந்த மயில் மரத்தின் உச்சியிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்தது. அதன் கண்ணுக்கு ஒரு சிறிய பாறையின் அடியில் சில உருண்டைகள் இருப்பதுபோல் தெரிந்தது. அதனால், மயில் அவை இருக்கும் இடத்திற்குப் பறந்து சென்றது. அவை அனைத்தும் முட்டைகள் என்பதை அது உணர்ந்துகொண்டது. அதனால்,  மயிலுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

மயில் அந்த முட்டைகளைப் பக்குவமாக வெயிலில் வைத்துச் சில நாள்கள் பாதுகாத்து வந்தது. அவை அனைத்தும் குஞ்சுகளாக மாறின. அவற்றைக் கண்ணுங் கருத்துமாகப் பாசத்துடன் மயில் பாதுகாத்து வந்தது. பறவைகள் மீண்டும் அந்த ஊரில் மெல்ல மெல்லப் பெருகியது. தம் இனத்தின் வளர்ச்சியைக் கண்ட மயில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

(சொற்களின் எண்ணிக்கை 187, சி. குருசாமி, ஆசிரியர்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


                                                            கதையும் சிந்தனையும்

கதையைப் பற்றி நீ நினைக்கும் கருத்துகளைத் தட்டச்சு செய்யவும். 

வாசிப்புப் பகுதி (உருவாக்கம்)

 

செண்பகம் என்பவன் புதிய சிந்தனையை உடையவன். ஆனால், அவனுடைய சிந்தனையைச் செயல்படுத்த முடியவில்லை. அவன் ஒன்பது பிள்ளைகளுடன் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். பெற்றோருக்குக் கடைக்குட்டி மகன். அவன் என்ன சொன்னாலும் வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ‘அவன் சின்னவன், அவனுக்கு என்னம்மா தெரியும்’ என்று சொல்லி அம்மாவின் வாயை அடைத்துவிடுவார்கள்.

வறுமையில் இருக்கும் அவனை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவனுடைய மாமா  அழைத்துச் சென்றார். அவர் பலகாரக் கடை ஒன்றை அங்கு நடத்தி வந்தார். செண்பகத்தைக் கடையில் எடுபிடி வேலை செய்வதற்கு வைத்துக்கொண்டார்.  செண்பகத்திற்கு வயிறு நிறைய உணவு. கைநிறைய செலவுக்குப் பணம். மேலும் மனநிறைவுடன் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு இருந்தான்.

செண்பகம் உணவுவிடுதியின் சமையல்காரரிடம் நெருங்கிப் பழகினான். நாட்கள் செல்லச் செல்ல அவர் செண்பகத்தின் நண்பராக மாறினார். சமையல்காரர் செண்பகத்திற்குப் பலகாரங்கள் செய்வதற்குக் கற்றுக்கொடுத்தார். ஆண்டுகள் சில சென்றன. செண்பகம் புதிய சிந்தனையுடன், பல புதிய பலகாரங்களைச் செய்து வந்தான். கடையில் பலகாரம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது. அவனுடைய மாமா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

முதுமையின் காரணமாகப் பலகாரக்கடையைச் செண்பகத்திடம் அவர் ஒப்படைத்தார். காலப்போக்கில் அவன் செல்வந்தராக மாறினான். மாதம் இருமுறை ஏழைகளுக்கு இலவசமாக ஒரு  கிலோ பலகாரம் வழங்கி வந்தான். அதோடு மக்களுக்குத் தான தர்மமும் அவ்வப்போது வழங்கி வந்தான். அதனால், அவன் பேரும் புகழும் அடைந்தான். தம்முடைய குடும்பத்தினரையும் செண்பகம் ஆஸ்திரேலியாவிற்கு  அழைத்துச் சென்றான். அனைவரும் அங்கு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள்.

(சொற்களின் எண்ணிக்கை 153, சி. குருசாமி,  ஆசிரியர்)   

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

                                                          கதையும் சிந்தனையும் 

அடியில் கொடுக்கப்பட்டுள்ள கதையைப் படித்துப் பார்க்கவும். பின்னர் அதனைப் பற்றி நீ நினைக்கும் கருத்துகளைத் தட்டச்சு செய்யவும். 



வாசிப்புப் பகுதி (அனுபவம்)

முகிலனும் அகிலனும் நெருங்கிய நண்பர்கள். முகிலன் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் படைத்தவன். அவர்கள் இருவரும் உயர்நிலை இரண்டில் படித்து வந்தார்கள். முகிலன் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பவன். அவன் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களைக் கவனமாகக் கேட்பான். புரியாதவற்றைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வான்.

அகிலன் எதையும் பெரிதுபடுத்தமாட்டான். ஒவ்வொரு நாளும் எப்படிப் போகுமோ அதற்கு ஏற்றாற்போல் வாழக் கற்றுக்கொண்டவன். ஒருநாள் வழக்கம்போல் இருவரும் பள்ளியில் இருந்து வீடு திரும்பினர். அப்பொழுது  மெல்ல மழை பெய்யத் தொடங்கியது. உடனே முகிலன் தன்னிடமிருந்த குடையை விரித்துப் பிடித்தான். ஆனால், அகிலனிடம் குடை இல்லை. ``பரவாயில்லை அகிலா, இருவரும் ஒரு குடைக்குள் வீட்டிற்குப் போவோம்’’ என்று முகிலன் சொன்னான். ஆனால், குடைக்குள் ஒருவர்தான் செல்லமுடியும்.

மழை சோவென்று பெய்யத்தொடங்கியது. காற்றுச் சுற்றிச் சுற்றி அடித்தது.   குடைக்குள் இருந்த இருவரும் நனைந்தனர். ஈர உடுப்புடன் அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.  இரண்டு நாள்களுக்குப் பிறகு முகிலனுக்குக் காய்ச்சல் வந்தது. அது அதிகரித்ததால் அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அகிலன் முகிலனைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்குச் சென்றான். அவனின் நிலைமையைப் பார்த்தான். அப்போது தன்னால்தான் தன்னுடைய நண்பனுக்கு இந்தநிலை ஏற்பட்டது என்று நினைத்தான். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல வடியத்தொடங்கியது. அதன்பின்னர் அகிலன், எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருந்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்து வாழத்தொடங்கினான்.     

                   (சொற்களின் எண்ணிக்கை 139, சி. குருசாமி, ஆசிரியர்)

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++