Sunday, October 24, 2010

பயிற்சி 37
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும் – சிந்தனைச் சிற்பி கவிஞர் வாலி இந்தக் கவிதையை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி உரித்தாகுக.

கவிதை 3 - படி


பாடலின் கருத்து

பெண்ணே!. படித்த பெண்ணைத்தான் இவ்வுலகம் பாராட்டும். எனவே, நீ பாராட்டும்படி படிக்க வேண்டும்.

நீ நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் படிக்க வேண்டும். நீ கல்வியைக் கற்றுக்கொடுக்கும் கல்விச் சாலையின் வாயிற் படியில் ஏறிச் சென்று படிக்க வேண்டும்.

பாரதியாரும் பாரதிதாசனும் மீண்டும் மீண்டும் படித்துச் சாதனைகள் செய்தபடி நீ படிக்க வேண்டும்.

நீ படித்தது நன்றாகப் புரியும்படி ஆழமாகவும், அகலமாகவும் படிக்க வேண்டும். இம்முறையில் படிக்கும்போது அனைத்துப்பாடங்களும் உனக்கு மிகவும் எளிமையாகிவிடும்.

நீ சிறந்த முறையில் படிக்கும்போது படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். அதனால், பெண்ணே! படிப்பு உனக்கு முக்கியம் ஆகும்.

நீ இருக்க வேண்டிய இடம் சமையல் கூடம் என்று யாராவது சொன்னால் நீ அவர்கள் மீது கோபப்படு. வாழ்க்கை என்னும் படகை முறைப்படி நன்றாகச் செலுத்துவதற்குக் கல்விதான் நீ கையில் ஏந்தவேண்டிய துடுப்பாக இருக்கிறது..

பெண்ணே! படித்து முடித்தபின்னர் நீ வேலைக்குப் போனால் நல்ல வருமானம் கிடைக்கும். அதனால் ஆண்பிள்ளை வீட்டாரைத் தேடிப்போகாமல் அவர்களாகவே வீடு தேடி உன்னைப் பெண்பார்க்க வருவார்கள்.

திருமணத்திற்குப் பின்பு உன் கணவனின் தாயாருக்கு ஓரளவு நீ கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். மேலும், நீ நம் முன்னோர்கள் கூறியுள்ள மரபுப்படி நடக்கவேண்டும்.

1
பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வாலி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
2
பெண்கள் ஏன் கல்வி கற்கவேண்டும் என்று வாலி கூறுகிறார்?
3
பெண் கல்வி கற்பதால் அடையும் நன்மைகள் யாவை?
4
கவிஞர் வாலி எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்?
5
மரபு வழி வந்த பெண்களைப் பற்றி கவிஞர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
6
படித்த பெண்களின் சிறப்புகளைக் கவிஞர் வாலி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
7
`படி` என்னும் கவிதையில் அமைந்துள்ள சொல்லாட்சி சிறப்பினை விளக்கி எழுதுக.

பயிற்சி 36
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும்


கவிதை 2. - உடல் நலம் பேணல் –


உடலின் உறுதி உடையவரே
உலகின் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தமுள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு; நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்,
நீண்ட ஆயுள் பெறுவாயே.

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத்தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

ஆளும் அரசன் ஆனாலும்
ஆகும் வேலை செய்வானேல்,
நாளும் நாளும் பண்டிதர் கை
நாடி பார்க்க வேண்டாமே.

கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடி, அப்பா !
ஏழையே நீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா !

மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்,
திட்டு முட்டுப் பட்டிடுவாய்;
தினமும் பாயில் விழுந்திடுவாய்.

தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும், அப்பா !
நூறு வயதும் தரும், அப்பா !

அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே;
வருமுன் நோயைக் காப்பாயே !
வையம் புகழ வாழ்வாயே
.

- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை


கவிதையின் கருப்பொருள்

உடலின் முக்கியத்துவத்தையும் அந்த உடலைப் பேணிக்காப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் நன்மைகள் எவை என்பதையும் கருவாகக் கொண்டதே இக்கவிதை.

கருத்து

நல்ல உறுதியான உடலை உடையவர்கள் மட்டும் உலகின் இன்பம் உடையவராக இருப்பர். அவர்களிடமிருக்கின்ற இடமும் பொருளும் அவர்களுக்கு இன்பமான வாழ்வைத்தரா.

சுத்தமுள்ள இடத்தில் சுகம் நிறைந்திருக்கும். அதனைக் காக்கும்போது நீ நீண்டகாலம் உயிர் வாழலாம்.

காலையிலும் மாலையிலும் உலவிக் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு எமன் வணங்கிச் செல்வான்.

நாட்டை ஆளுகின்ற அரசன் தன்னால் முடிந்த வேலையைச் செய்துவந்தால் வைத்தியர் அவனுடைய கையைப்பிடித்து உடல்நலம் குறித்து நாடித்துடிப்பைப் பார்க்கவேண்டாம் என்று கூறுகிறார்.

அப்பா! கூழாக இருந்தாலும் அதனைக் குளித்த பின்புதான் நீ குடிக்கவேண்டும். ஏழையாக இருந்தாலும் நீ இரவில் நன்றாகத் தூங்கவேண்டும்.

நீ அளவோடு உண்ணாமல் அதிகமாகத் தின்னும்போது திட்டுமுட்டு அடித்துவிடும். அதனால் நீ நோயாளியாக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

அப்பா! சுத்தம் நிறைந்த காற்று, தூய்மையான தண்ணீர், பசித்த பின்னர் உண்ணும் வழக்கம் ஆகியவை நோயைப் போக்கி நூறு ஆண்டு காலம் வாழ்ந்திட உதவும்.

நீ உடல் நலத்துடன் வாழும் வழிமுறைகளை அறிந்துகொள்ளும்போது நோய் வரும்முன்பு அந்த நோயைத் தடுத்திடலாம். அதன்மூலம் நீ இவ்வுலகம் புகழ வாழ்ந்திடலாம்.



பொருள்நயம்

`உடல் நலம் பேணல்` என்ற தலைப்பில் அமைந்துள்ள இக்கவிதை மக்களை எளிதில் கவரும் பாங்கில் மிகவும் எளிய சொற்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வுலகில் இன்பம் ஏராளமாக இருக்கிறது. இந்த இன்பத்தை முழுவதும் தூய்க்கவேண்டுமானால் நோய் இல்லாமல் நல்ல உறுதியுள்ள உடலுடன் இருக்கவேண்டும் என்று கூறுகிறார். பொதுவாக வசதியாக வாழ்வதற்கு இடமும் பொருளும் அவசியம் என்பதைக் கவிமணி விளக்க வந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்று தான் சொல்ல வந்த கருத்தை மீண்டும் வலுவாக்குகிறார். இங்குத் தொடக்கத்தில் தான் என்ன சொல்லப் போகிறேன் என்பதைச் சுருக்கமாகக் கவிமணி கூறுகிறார்.

சுத்தமுள்ள இடத்தில்தான் ஒருவர் சுகமாக வாழமுடியும், சுகமாக வாழ்வதற்கு நீ நாள்தோறும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வரிகளின் மூலம் சுத்தத்திற்கும் சுகத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறார்.

நோய் இல்லாமல் வாழ்வதற்குக் காலை மாலை கட்டாயம் உலவி வரவேண்டும் என்று கூறுகிறார். ஒருவர் இம்முறையைத் தவறாது பின்பற்றும்போது உயிரைப் பறிக்கும் எமன் அவரின் காலைத் தொட்டு வணங்கி விரைந்து சென்றுவிடுவான் என்று கூறுகிறார். இங்கு இறப்பைத் தடுக்கும் வழிமுறையைக் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல நாட்டை ஆளுகின்ற அரசன் தன்னால் முடிந்த வேலையைச் செய்துவந்தால் வைத்தியர் அவனுடைய கையைப்பிடித்து உடல்நலம் குறித்து நாடித்துடிப்பைப் பார்க்கவேண்டாம் என்று கூறுகிறார். எல்லாரும் முடிந்தவரை வேலையைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அப்பா! நீ கூழைக் குடிக்கும் நிலைமை ஏற்பட்டாலும் குளித்த பின்புதான் அக்கூழைக் குடிக்கவேண்டும் என்றும் ஏழையாக இருந்தாலும் இரவில் நன்றாக நீ தூங்கவேண்டும் என்றும் கூறுகிறார். கவிஞர் தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

மேலும், சாப்பிடும் உணவை அளவோடு சாப்பிடாமல் அள்ளி அள்ளித் தின்பவருக்குத் திட்டு முட்டு அடித்துவிடும் என்று கூறுகிறார். திட்டு முட்டு அடித்திடும்போது தினமும் நோயாளியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு பாயில் படுக்கும் நிலை உருவாகும் என்று கூறுகிறார். இங்கு உணவுக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துரைக்கின்றார்.

அப்பா! நோய் நம்மைவிட்டு விலகிச்செல்வதற்குத் சுத்தமான காற்றும், நல்ல தண்ணீரும், பசித்து உண்ணும் உணவுப் பழக்கமும் உடையவராக நீ விளங்க வேண்டும் என்று கூறுகிறார்.

இவை அனைத்தும் கிடைப்பதற்கரிய உடல் நலத்துடன் வாழ்வதற்கு உரிய வழிகள் என்பதை நீ அறிந்துகொள். இவற்றைப் பின்பற்றி வரும் நோயைத் தடுத்து இவ்வுலகம் புகழும்படி நீ வாழவேண்டும் என்று நயமாகக் கூறி முடிக்கின்றார் கவிஞர்.


சொல்லாட்சி

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை `உடல் நலம் பேணல்` என்ற தலைப்பில் அமைந்துள்ள இக்கவிதையில் சொற்களைச் சிறந்த முறையில் கையாளுகின்றார். கவிதையின் தொடக்கத்தில் `இடமும் பொருளும்` என்று கூறும்போது `உம்` ஒட்டைப் பயன்படுத்திப் படிப்பவர் எளிதில் புரிந்துகொள்ளும்படி சொற்களை இணைத்து அமைத்ததோடு இரண்டிற்கும் சம மதிப்பினையும் கொடுக்கிறார்.

இரண்டாவது பத்தியில் `சுத்தம்` `நித்தம்` என்னும் சொற்களைக் கையாளும்போது முதல் எழுத்துகளை மாற்றிப் பொருள் மாறுபாட்டை ஏற்படுத்துகிறார். இங்குச் `சுத்தம்` என்பது தூய்மை என்ற பொருளையும் `நித்தம்` என்பது நாள்தோறும் என்ற பொருளையும் உணர்த்துகின்றன. இவை சிறந்த எதுகைகளாகவும் அமைந்துள்ளன.

இரண்டாவது பத்தியிலும் மூன்றாவது பத்தியிலும் `காலை` `மாலை` என்ற இரண்டு சொற்களை எதுகை நயம்பட அமைத்துள்ளார். அத்துடன் அச்சொற்களில் உள்ள முதல் எழுத்துகளை மாற்றிப் பொருளை மாற்றுகிறார். மூன்றாவது பத்தியில் `ஆளும் நாளும்` என்று குறிப்பிட்டுச் சிறந்த நயத்துடன் சொற்களை அமைத்துள்ளார்.

மேலும், கூழை, ஏழை, மட்டு, திட்டு ஆகிய எளிய சொற்களின் முதலெழுத்தை மாற்றிப் பொருள் மாறுபாட்டுடன் கவிதையைப் படைத்துள்ளார்.

அப்பா! என்ற சொல்லை எங்கு எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதைக் குடி அப்பா!, உறங்கப்பா!, ஓட்டி விடுமப்பா!, நூறுவயது தருமப்பா!, என்று நன்கு பயன்படுத்தி விளக்குகிறார்.


வினாக்கள்

1
நூறுவயது வரை ஒருவர் வாழ்வதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?
2
அனைவரும்நோயில்லாமல் வாழ்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளில்
ஈடுபடவேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?
3
உணவு உண்ணும் முறையைப் பற்றிக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கூறும் கருத்துகள் எவை?
4
இனிய வாழ்வு வாழ்வதற்கு ஒருவர் எவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்?
5
இக்கவிதையில் அமைந்துள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

பயிற்சி 35
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும் – கவிதையை எழுதிய ஆசிரியருக்கு நன்றி.


கவிதை 1. `முன்னேற` - கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை. அவருக்கு நன்றி .

கவிதையின் கருப்பொருள்:

ஒரு நாடு முன்னேற்றம் அடைவதற்கு எத்தகைய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதைப் பற்றியும் அவற்றின் மூலம் அந்த நாடு அடைகின்ற உயர்வினைப் பற்றியும் விளக்குவதாக இக்கவிதை அமைந்துள்ளது.

பொருள் நயம்:

கவிஞர் கண்ணதாசன் எழுதிய `முன்னேற` என்ற தலைப்பில் அமைந்த இக்கவிதை எல்லா நாட்டிற்கும் பெரும்பாலும் பொருந்துவதாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியச் சூழ்நிலையை மையமாக வைத்தே எழுதப்பட்டுள்ளது. உழைப்பின் பெருமையையும் மக்கள் உழைப்பதால் அடையும் நன்மைகளையும் நயம்படக் கூறுவதாக அமைந்துள்ளது.

இக்கவிதை ஒரு நாட்டில் இருக்கும் பிரச்சினையையும் அந்தப் பிரச்சினை தீர்வதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பதையும் அதன்மூலம் எத்தகைய நன்மைகள் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் என்பதையும் நயம்பட விளக்குகிறது.

இன்றைய சூழலில் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போல் முன்னேற்றம் அடையவேண்டுமானால் அறிவியல் துறையில் முன்னேற்றம் அடையவேண்டும். அதனை உலக நாடுகளின் செயல்பாடுகளைப் பறந்துசென்று உலகத்தையே அளந்து பார்த்து அடைவோம் என்று கவிஞர் குறிப்பிடுகிறார். இக்கவிதையின் தொடக்கத்தில் எத்தகைய முயற்சியை ஒருநாடு எடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறார்.

எண்ணெயின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். அந்த எண்ணெய் எங்கிருந்து கிடைக்கிறது என்பதையும் அதனை எடுத்துப் பயன்படுத்தும்போது அடைகின்ற பயன்பாடு என்னென்ன என்பதையும் விளக்குகிறார். புதுப்புது நெல்வகையைக் கண்டுபிடிப்போம். அப்போதுதான் உணவுப் பிரச்சினை தீரும். அதற்கு அடுத்தாற்போல் விண்ணை நோட்டமிடவேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் நலமான வாழ்வு அமைந்திடும் என்கிறார்.

வளமான ஆற்றிலிருந்து காய்ந்துபோன ஆற்றிற்குத் தண்ணீரைக் கொண்டு சென்றால் மட்டும்போதாது அதன் கரைகளில் புதிய சோலையை உருவாக்குவோம் என்கிறார். தண்ணீரைத் தேக்கி வைப்போம் என்று கூறாமல் அதனைத் தேக்கிவைக்கும்போது என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபடலாம் என்பதையும் விளக்கிக் கூறுகிறார்.

ஏராளமான தொழில்களை உண்டாக்குவோம் என்று கூறாமல் அத்தொழில்களை ஏற்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் எவை என்பதைப் பட்டியலிடுகிறார்.

திசை எட்டிலும் வெற்றியின் சிறப்பு ஏற்படுவதோடு வாழ்க்கையில் நாள்தோறும் இன்பம் நிறைந்திருக்கும் என்று கவிஞர் கூறுகிறார். இவ்வெற்றியின் மூலம் செல்வம் கோடிக்கணக்கில் சேர்ந்திடும்போது அதில் உனக்கும் பங்குண்டு. எனவே, அறிவியலில் முன்னேற்றம் அடைவோம் என்று நயம்படக் குறிப்பிடுகிறார்.

வினாக்கள்

1
ஒரு நாடு முன்னேற்றம் அடைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
2
வேளாண்மைத் தொழில் ஒருநாட்டில் வளமடைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்?
3
ஒருநாட்டில் வேளாண்மைத் துறையும் தொழில்துறையும் வளர்ச்சி அடைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?
௪ நீர்ப்பாசனத்தின் வளத்தினை அதிகரிப்பதற்கு ஒரு நாடு எத்தகைய
நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?

வேளாண்மைத் துறை வளர்ச்சியடையும்போது ஏற்படும் நன்மைகள் யாவை?

Saturday, October 23, 2010

பயிற்சி 34


கீழ்க்கண்ட கவிதையைப் படித்தபின்னர் அதன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும்.
நாட்டுப் பற்றை ஊட்டும் நல்விழா

திரு விழாவாம் திருவிழா
எங்க நாட்டுத் திருவிழா
சிங்கை நாட்டுத் திருவிழா
சிந்திக்க வைக்கும் திருவிழா

ஒரு விழாவாம் ஒருவிழா
உண்மை சொல்லும் பண்விழா
தேசம் காக்கும் பெருவிழா
தேசிய தினத் திருவிழா

ஒற்றுமை காட்டும் திருவிழா
உயர்ந்து நிற்கும் மனவிழா
பள்ளி யெங்கும் கலைவிழா
பார் போற்றும் நல்விழா - குரு
தயாரிப்பு ஆசிரியர் சி. குருசாமி
குறிப்பு –
சிலர் வலைப்பூவில் உள்ள கருத்துகளைப் படித்துப் பயன்படுத்தி வருவதால் நேரில் நன்றி கூறுகிறீர்கள், அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தாங்களின் தேவைகளையும் கருத்துகளையும் படித்தபின்னர் தட்டச்சு செய்து அனுப்பினால் நலம் பயக்கும்.

பயிற்சி 32


கவிதையில் பொதுவாக இருக்கவேண்டிய கருத்துகள்

நோக்கம்

கவிதை – கரு / களம்

கருத்துகள்
நேரடிக் கருத்துகள், மறைமுகக் கருத்துகள்

முக்கிய உறுப்புகளின் அடிப்படையில் இனிமை இருத்தல்

சுருக்கமும் தெளிவும்

பண்பாட்டுக் கூறுகளைச் சார்ந்து இருக்கலாம்

தேவையை அடிப்படையாக க் கொண்டும் அமையலாம்

உயர்ந்த கொள்கைகளை விளக்குவதற்கும் எழுதலாம்

அறிவுத்திறனை வளர்ப்பதற்கும் எழுதலாம்

தனிமனிதனின் பிரச்சினையும் சமூகத்தின் பிரச்சினையும் இடம்பெறலாம்

கவிதை என்பதன் விளக்கம்

உள்ளத்துள்ளது கவிதை – இன்ப
உரு வெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை - தேசிக விநாயகம்



* வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கும் கருத்துப் பெட்டகம்

* பொதுவாக மனிதனையும் மனிதன் சார்ந்திருக்கின்ற இயற்கையையும் கொண்டு அமையும்

* சொல்லவிரும்பும் கருத்தைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே கவிஞனின் கடமை


எது கவிதை?

அறிஞர் கிறுக்குவது
நற்கவிதை யன்றோ
ஆன்றோர் கூற்று
பொற்கவிதை யன்றோ
வறியோர் புலம்புவது
வாழ்கவிதை யன்றோ
வற்றாத நதியினொலி
வளர்கவிதை யன்றோ!

இல்லோர் ஏங்குவது
இன்கவிதை யன்றோ
களம்பல பாடுவது
கவிபரணி யன்றோ
வள்ளுவர் வகுத்தநெறி
வான்கவிதை யன்றோ! - - கவிமொழி

கற்பனை

மீனினம் ஓடிப் பறக்குதம்மா - ஊடே
வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறுதம்மா - இந்த
மாட்சியிலுள்ளம் முழுகுதம்மா - தேசிக விநாயகம்


பொருள் சிறப்பு

கார்மேகம் திரண்டு நிற்க
கானத்து மயில்கள் நோக்க
விசிறி விரிந்து அசைய
விவரம் சொல்லி நிற்குதே! - குரு

மொழி

திக்கெட்டும் சென்றிடும்
செந்தமிழாய் நின்றிடும்
செம்மொழியின் சிறப்புதனைப்
பிறர்சொல்ல மகிழ்ந்திடுவோம்! - கவிமொழி

எதிர்காலச் சிந்தனை

மனிதக்கழிவை மனிதன்
மறைத்துச் சுமக்கும்காலம்
மனிதத் திறத்தால்
மலையேறிப் போயாச்சு - கவிமொழி


அறநெறிக் கருத்துகள்

(நீதி, நேர்மை, வாழ்வாங்கு வாழும் முறை)
``பாயும் புலியகம் ஒழிந்திட வேண்டும் `` குரு

உலகச்சிந்தனை

``.....
விதை போட வேண்டும்
வன்முறை என்றும் ஒழிவதற்கு
வையத்தில் வாழும்முறை அறிவதற்கு ..``
















மாணவர்களே கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொற்களை உருவாக்கிப் பெற்றோர்களிடம் சொல்லிக்காட்டுங்கள். இது போன்ற பயிற்சிகளை உருவாக்கும்போது உங்களின் சொல்வளம் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.

உறவையறி - உறவை அறி


இறுதியில் சொல் எழுதுக

உறவை ___________________
உண்மை ___________________
பகுத்து ___________________


அன்பைக் கொடு
அறிவைப் பெறு

_____________ கொடு
____________ பெறு
____________ கொடு
____________ பெறு